சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சின்னதுரை. இவர் தன்னுடைய குடும்பத்தினரைப் பிரிந்து அந்தப் பகுதியிலுள்ள நடைபாதையில் வசித்துவருகிறார். இவரைப்போலவே மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவரும் அதே நடைமேடைப் பகுதியில் வசித்துவருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாகக் கிடைத்த வேலைக்குச் செல்வது, வரும் பணத்தில் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள்.

இப்படியான சுழலில், நேற்று இருவரும் பல்லாவரம் பகுதி இந்திராகாந்தி சாலை அருகே மது அருந்தியிருக்கிறார்கள். அப்போது, மது போதையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியதில் ஒவருரை மாற்றி மற்றொருவர் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். பின்னர் இருவரும் அங்கிருந்து தூங்கச் சென்றுவிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இருந்தபோதிலும், ராஜாவுக்கு ஆத்திரம் குறையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சின்னதுரை தூங்கச் சென்ற பிறகு ராஜா, அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து அவர் தலையில் போட்டுக் கொடூரமாகக் கொலைசெய்திருக்கிறார். இந்தச் சம்பவத்தில், சின்னதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். அதீத போதையில் ராஜாவும் அந்த இடத்திலேயே படுத்துத் தூங்கிவிட்டார்.

காலையில் எழுந்து பார்க்கும்போது, நண்பனைக் கொலை செய்ததை உணர்ந்த ராஜா பல்லாவரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சின்னதுரையின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள். போதையில் தன்னுடைய நண்பன் தலையில் கல்லைப்போட்டு கொலைசெய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.