சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் பச்சையப்பன் கல்லூரி அமைந்துள்ளது. நேற்று இந்தக் கல்லூரி அருகே சில மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகளாலும், கற்களைக்கொண்டும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். சம்பவ இடத்துக்குக் காவலர்கள் வருவதைப் பார்த்ததுமே அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். சில மாணவர்கள் ஓடும்போது, தங்களின் பைகளை ஆங்காங்கே வீசிச் சென்றனர். போலீஸார் அந்தப் பைகளைத் திறந்து பார்த்தபோது, அதில் பட்டாக்கத்தி, காலி மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, தப்பித்து ஓடிய சிலரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

இந்தச் சம்பவம் கல்லூரி நிர்வாகத்துக்கு தெரியவரவே, மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கல்லூரி நிர்வாகம் பரிந்துரை செய்தது. பிடிபட்ட மாணவர்களிடம், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை முடிவில், திருத்தணி ரூட் மாணவர்களுக்கும், பூந்தமல்லி ரூட் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாறி மாறித் தாக்கிக்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்மீது வழக்கு பதிவு செய்யவிருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த மோதலின்போது, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததால், இன்று கல்லூரிக்கு வந்த மாணவர்களின் பைகளை போலீஸார் சோதனை செய்துதான் உள்ளே அனுப்பிவைத்தார்கள். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, திருத்தணி `ரூட்டு தல’ கணேஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), பூந்தமல்லி `ரூட்டு தல’ ஆகாஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஆகிய இருவர் மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கீழ்பாக்கம் பகுதி காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்திருக்கின்றனர்.

இவர்களுடன் மேலும் ஆறு மாணவர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.