Published:Updated:

சென்னை: ப்ளஸ் டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை; கைதான ஆசிரியர் - நடந்தது என்ன?

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

சென்னையில் ஆசிரியர் அடித்ததால் மனமுடைந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

சென்னை: ப்ளஸ் டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை; கைதான ஆசிரியர் - நடந்தது என்ன?

சென்னையில் ஆசிரியர் அடித்ததால் மனமுடைந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

Published:Updated:
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

சென்னை நீலாங்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் மகேஷ். இவருக்கு கவின்குமார், தர்ஷன் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் கொட்டிவாக்கத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு படித்துவருகிறார்கள். இந்த நிலையில் கவின்குமார் நேற்று (02.12.2022) காலை வீட்டிலுள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். கவினை மீட்ட பெற்றோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

உயிரிழந்த மாணவன்
உயிரிழந்த மாணவன்

சிறுவனைப் பரிசோதனைசெய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவமறிந்து வந்த போலீஸார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்தத் தற்கொலை தொடர்பாக, வழக்கு பதிவுசெய்த நீலாங்கரை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

விசாரணையில், கடந்த வாரம் தர்ஷன் வகுப்பறையில் தூங்கியிருக்கிறார். இதை ஆசிரியர் ஒருவர் கண்டித்திருக்கிறார். இது குறித்து தகவல் தெரிந்ததும், மாணவனின் தந்தை மகேஷ் பள்ளி நிர்வாகத்திடம் அந்த ஆசிரியர் குறித்துப் புகார் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, கவின்குமார், தர்ஷன் இருவருமே கடந்த இரண்டு தினங்களாகப் பள்ளிக்குச் செல்லவில்லை. கடந்த 01.12.2022-ம் தேதி இருவரும் வழக்கம்போலப் பள்ளிக்குச் சென்றிருக்கிறார்கள்.

மாணவன் படித்த தனியார் பள்ளி
மாணவன் படித்த தனியார் பள்ளி

அப்போது, அங்கு வந்த பள்ளி முதல்வர், உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேசன் இருவரும் கவினிடம், `பள்ளிக் கழிவறையில் ஹான்ஸ், கூல் லிப் வைத்திருந்தது நீதானே?’ என்று கேட்டு அடித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், சிறுவனிடம் புகையிலைப் பொருளை பயன்படுத்தியதாகக் கடிதம் எழுதித்தரச் சொல்லி அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் சிறுவனின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலிலிருந்த மாணவன் இது குறித்துத் தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று காலை மாணவன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தன் இரண்டாவது மகனைக் கண்டித்தது குறித்துப் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேட்டதற்கு, முதல் மகன் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அடித்திருக்கிறார்கள். பள்ளி நிர்வாகம் மீதும், உடற்கல்வி ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவினின் தந்தை போலீஸில் புகார் அளித்திருக்கிறார். மாணவன் இறந்ததில் ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி, பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

மாணவன் படித்த தனியார் பள்ளி
மாணவன் படித்த தனியார் பள்ளி

பள்ளியில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதே சமயத்தில் அந்தப் பகுதியில் 50-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்துவரும் நீலாங்கரை பகுதி போலீஸார், முதற்கட்டமாக உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசனைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். ஆசிரியர் அடித்ததில் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.