Published:Updated:

8 கொலை; 21 வழிப்பறி; என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தூத்துக்குடி துரைமுருகன்; நடந்தது என்ன?

என்கவுன்ட்டர் செய்யப்பட்ட துரைமுருகன்

கடந்த 15-ம் தேதி தூத்துக்குடியில் ரவுடி துரைமுருகன், என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார்.

8 கொலை; 21 வழிப்பறி; என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தூத்துக்குடி துரைமுருகன்; நடந்தது என்ன?

கடந்த 15-ம் தேதி தூத்துக்குடியில் ரவுடி துரைமுருகன், என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட துரைமுருகன்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் துரைமுருகன். ஆரம்பத்தில் சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் படிப்படியாக வளர்ந்து ரவுடியாக மாறியிருக்கிறார். இவருக்கென தனியாக கேங்க் எதுவும் கிடையாது. அவ்வப்போது ஆட்களைச் சேர்த்துக்கொள்வார். ஒரு சம்பவத்துக்கு உடன் சேர்ப்பவரை அடுத்த சம்பவத்துக்கு ஈடுபடுத்தாதது இவரது வழக்கம். கடந்த 2001-ல் முத்தையாபுரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நெருங்கிய உறவினரான சீனி என்ற சீனிவாசகத்தை கொலை செய்ததன் காரணமாக ரவுடிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

என் கவுன்டர் செய்யப்பட்ட இடத்தை பார்வைவிட்ட எஸ்.பி ஜெயக்குமார்
என் கவுன்டர் செய்யப்பட்ட இடத்தை பார்வைவிட்ட எஸ்.பி ஜெயக்குமார்

இவர்மீது தூத்துக்குடி, மதுரை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 8 கொலை வழக்கு, 21 வழிப்பறி, 6 திருட்டு என மொத்தம் 35 வழக்குகள் உள்ளன. கடந்த 16-ம் தேதி தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் பதுங்கியிருந்தவரை உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படையினர் சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றனர். அப்போது, உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் டேவிட்ராஜன் ஆகியோரை அரிவாளால் கண்மூடித்தனமாகத் துரைமுருகன் தாக்கியதால், இருவருக்கும் இடது கைகளில் வெட்டு ஏற்பட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து துரைமுருகன் சம்பவ இடத்திலேயே என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். துரைமுருகன் சிக்கியது எப்படி என, தூத்துக்குடி போலீஸார் சிலரிடம் பேசினோம், “துரைமுருகன் பணத்திற்காக ஆட்களைக் கடத்தி பின்னர் கொலை செய்வதை தொழிலாகக் கொண்டவர். ஆரம்பத்தில் தனது முன்கோபத்தாலும், சின்னச் சின்ன காரணங்களுக்காகவும் அடிதடி, கொலை வழக்குகளில் சிக்கி பின் ரவுடியாகியிருக்கிறார். கொலை செய்து உடலை சரமாரியாக குத்தியும், வெட்டியும் புதைப்பதுதான் துரைமுருகன் பாணி.

என் கவுன்டர் செய்யப்பட்ட துரைமுருகன்
என் கவுன்டர் செய்யப்பட்ட துரைமுருகன்

நெல்லை மாவட்டத்தில் ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அந்தப் பெண்ணுக்காக அவரின் கணவர், உறவினர்கள் என 3 பேரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார். தூத்துக்குடியில் மற்றொரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்துக்காக முருகன் என்பவரைக் கொலைசெய்து அவரது வீட்டின் அருகேயே புதைத்திருக்கிறார். இவர், சிறையில் இருந்து தன்னை ஜாமீனில் எடுத்தவரையே கொலை செய்து அரைகுறையாக தீயிட்டு எரித்து தனது ஆடைகளை அந்த உடலுக்கு அணிவித்து, தான் இறந்தது போல செட்அப் செய்து போலீஸாரையே நம்ப வைக்க முயன்றார்.

இதுவரை 3 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் துரைமுருகன். கடந்த 2017-ல் பாவூர்சத்திரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்தவர், கடந்த செப்டம்பர் 3-ம் தேதிதான் வெளியே வந்திருக்கிறார். துரைமுருகனின் அக்கா தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 5-ம் தேதி அங்குள்ள ஒரு கோயில் கொடைவிழாவுக்குச் சென்றபோது, ஒரு பெண்ணை துரைமுருகன் கிண்டல் செய்திருக்கிறார்.

காயம்பட்டு சிகிச்சையில் உள்ள போலீஸாரை பார்வையிட்ட ஐ.ஜி.,அன்பு
காயம்பட்டு சிகிச்சையில் உள்ள போலீஸாரை பார்வையிட்ட ஐ.ஜி.,அன்பு

இதைக் கண்டித்த அதே ஊரைச் சேர்ந்த ஜெகதீஷுக்கும் துரைமுருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து, ஜெகதீஷை மது அருந்த செல்லலாம் என காரில் கடத்திக் கொலை செய்திருக்கிறார். பாளையங்கோட்டையில் உள்ள துரைமுருகனின் நண்பரான ஜோயலின் உதவியுடன் டக்கம்மாள்புரம் பகுதியில் உடலை புதைத்துவிட்டு தப்பியோடியிருக்கின்றனர். இந்த வழக்கில் ஜோயல் சிக்கியபிறகே இதில் முக்கியமான குற்றவாளி துரைமுருகன்தான் எனத் தெரியவந்தது.

ஜோயலிடமிருந்து தலைமறைவான துரைமுருகனின் செல்போன் எண்ணை போலீஸார் வாங்கினர். ஆனால், துரைமுருகனின் நம்பர் ஸ்விட்ச் ஆப்பில் இருந்தது. இதற்கிடையில் பல கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட துரைமுருகனின் அண்ணன் ஜெயராமனின் மகன் சுதந்திரராஜைத் தேடி வந்தோம். மொட்டை அடித்துக்கொண்டு போலீஸுக்கு போக்கு காட்டியவர், சமீபத்தில் பிடிபட்டார். அவரிடமிருந்து துரைமுருகனின் புதிய எண்ணை வாங்கினோம். துரைமுருகனின் தாயார், சந்தனம்மாள் உடல் நலமின்றி இருந்ததால் அவரை சிகிச்சைக்காக சென்னை, ராஜாஜி அழைத்துச் சென்று துரைமுருகன், தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக சுதந்திரராஜ் மூலம் தகவல் கிடைத்தது.

எஸ்.பி ஜெயக்குமார்- ஹென்றி திபேன்
எஸ்.பி ஜெயக்குமார்- ஹென்றி திபேன்

சுடப்பட்ட அன்று தூத்துக்குடியிலுள்ள தனது ஜெயில் நண்பர்கள் பலரிடம் செலவுக்குப் பணம் கேட்டிருக்கிறார். இதில் சிலர் கொடுத்த பணத்தின் மூலம் துரைமுருகன் தூத்துக்குடியில் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரது எண்ணின் செல்போன் டவரை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருந்தோம். முள்ளக்காடு அருகிலுள்ள கோவங்காட்டில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் வழியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் அவரது செல்போன் டவர் காட்டியது.

உடனடியாக அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றோம். ஆனால், எங்களையே அரிவாளால் தாக்கினார். இதையடுத்தே மூன்று முறை சுட்டோம். துரைமுருகனுடன் இருந்த திருச்சி ஆரோக்கியராஜ், தூத்துக்குடி ராஜா ஆகியோர் தப்பியோடினர். அவர்களைத் தேடி வருகிறோம்” என்றனர். துரைமுருகன் ஒரு ரவுடி என்றாலும் அவரை போலீஸார் என் கவுன்டரில் சுட்டதற்கு மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

என் கவுன்டர் செய்யப்பட்ட காட்டுப்பகுதி
என் கவுன்டர் செய்யப்பட்ட காட்டுப்பகுதி

இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றி திபேனிடம் பேசினோம், “தமிழகத்தில் ஒரு ஆட்கொல்லிப் புலியைப் பிடிப்பதற்குகூட, 20 நாட்கள் அவகாசம் எடுத்து அந்தப் புலியை உயிருடன் பிடித்திருக்கிறது வனத்துறை. ஆனால், ஸ்ரீபெரும்புதூரிலும், தூத்துக்குடியிலும் குற்றவாளியை ஒன்றன்பின் ஒன்றாக சுட்டுக்கொலை செய்திருக்கிறது காவல்துறை. சுடப்பட்ட துரைமுருகன்மீது பல வழக்குகள் இருக்கின்றன. அவர் குற்றவாளி என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ’எச்சரிக்கை விடுத்தோம். அதையும் மீறி எங்களை அரிவாளால் தாக்கினார் அதனால் தற்காப்புக்காகச் சுட்டோம்’ என்கின்றனர் போலீஸார்.

காயம்பட்ட உதவி ஆய்வாளர், காவலர் இருவருக்கும் சொல்லி வைத்தாற்போல இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு ரவுடி போலீஸை தாக்கினால் இப்படியா தாக்குவார்? தப்பியோட முயன்றபோது சுடப்பட்டார் என்றார், அவரது பின் தலையில்தானே குண்டு துளைத்திருக்க வேண்டும்? அவரது உடலில் காயங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினர் சொல்கிறார்கள். முன்பே கைது செய்து அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்று என்கவுன்ட்டர் செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் டேவிட் ராஜன்
சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் டேவிட் ராஜன்

முட்டுக்கீழ் சுட வேண்டும் என்பதுகூட இந்தக் காவல்துறைக்குத் தெரியாதா? குற்றவாளிகளை உயிருடன் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்துவதுதானே பொறுப்பான காவல்துறையின் பணி? கடந்த மாதம் ’ஸ்டார் மிங் ஆபரேஷன்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷனில் 3,325 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1,110 பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இதில், 2,526 பேரிடம், ’நாங்கள் எந்தக் குற்றத்திலும் ஈடுபட மாட்டோம்’ என எழுதி வாங்கியுள்ளதாக தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி மீடியாக்களில் பேட்டியளித்திருக்கிறார்.

உண்மையில் அந்த ஆபரேஷன் வெறும் கண்துடைப்பிற்காக மட்டுமே நடத்தப்பட்டது. தமிழத்திலுள்ள ஏ, ஏ-ப்ளஸ் பட்டியலில் உள்ள அரசியல் தொடர்புள்ள பல ரவுடிகள் கைது செய்யப்படவில்லை. அதேபோல துரைமுருகனை என்கவுன்ட்டர் செய்ததில் பிற ரவுடிகளுக்கு பயம் ஏற்பட்டுவிடும் என காவல்துறையினர் நினைக்கிறார்கள். உயிருடன் பிடிக்காமல் என்கவுன்ட்டர் செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு தவறான துப்பாக்கிக் கலாசாரம்” என்றார் காட்டமாக. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் பேசினோம், ”ரவுடி துரைமுருகனைச் சுற்றிவளைத்த தனிப்படையினர், சரணடைந்து விடுமாறு அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

என் கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் கிடந்த கத்தி, அரிவாள்
என் கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் கிடந்த கத்தி, அரிவாள்

அவர் போலீஸாரை அரிவாளால் தாக்க முயன்றார். பின்னர், வானத்தை நோக்கிச் சுட்டு எச்சரிக்கை விடுத்து மீண்டும் சரணடைந்துவிடுமாறு தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து முதலில் காவலர் டேவிட்ராஜனுக்கு இடது கையில் அரிவாளால் வெட்டு விழுந்தது, அடுத்து எஸ்.ஐ., ராஜபிரபுவுக்கும் இடது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையிலும்தான் துரைமுருகன் சுடப்பட்டார்” என்றார் அவர்.