Published:Updated:

மாற்றுத்திறனாளி கணவர் மர்ம மரணம்... திமுக கவுன்சிலர் மகனைக் குற்றம்சாட்டும் மனைவி!

சஞ்சய் காந்தி

அருப்புக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் மர்மமான முறையில் சுடுகாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாற்றுத்திறனாளி கணவர் மர்ம மரணம்... திமுக கவுன்சிலர் மகனைக் குற்றம்சாட்டும் மனைவி!

அருப்புக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் மர்மமான முறையில் சுடுகாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சஞ்சய் காந்தி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சஞ்சய் காந்தி(35). காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி கலைச்செல்வி(32). தனியார் கம்பெனியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இரவில் மாயமான சஞ்சய்காந்தி மறுநாள் காலையில் புளியங்குளம் சுடுகாட்டில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த மர்ம மரணம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சஞ்சய்காந்தியின் சந்தேக மரணம் குறித்து நம்மிடம் பேசிய அவர் மனைவி கலைச்செல்வி, ``என் கணவர் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்த ஒரு காரணத்துக்காகவே அவர் எங்கேயும் வேலைக்கு போகாம சொந்த நிலத்தில் விவசாயம் பாத்துட்டு இருந்தாரு. நான், பக்கத்திலேயே சின்னதா ஒரு கம்பெனியில டேட்டா என்ட்ரி வேலை பார்த்துகிட்டு இருக்கேன். எங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க.

சஞ்சய்காந்தி-கலைச்செல்வி
சஞ்சய்காந்தி-கலைச்செல்வி

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாங்க பத்து வருஷத்துக்கு முன்னாடி எங்க பூர்வீக இடத்தில் இருந்த ஓட்டு வீட்டை இடிச்சிட்டு புதுசா வீடு கட்டுனோம். மழைபெய்தால் பாதுகாப்பா இருக்கணும்னு வீடுக்கு முன்னாடி வராந்தாவில் கூலிங் ஷீட் போட்டோம். மழைத்தண்ணி வடிந்து பக்கத்து வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் இடையில இருக்குற சந்துல விழுற மாதிரி அமைச்சோம். ஆனா பக்கத்து வீட்டுல கூட்டு குடும்பமா இருக்குற நாராயணன், தேவகி, கண்ணன், ராஜேஸ்வரி, சுப்புலட்சுமி உள்ளிட்டவங்க எல்லாரும் சேர்ந்து அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சி கூலிங் ஷீட்ட வெட்டி விட்டாங்க. ஆரம்பத்துல இத சாதாரணமா விட்டுட்டோம். இப்போ சமீபத்துல பக்கத்து வீட்டைச் சேர்ந்தவங்க மார்ச் மாசம் வீட்டை விரிவாக்கம் பண்றதுக்கான வேலை செஞ்சாங்க. அப்போ 2 வீட்டுக்கும் இடையில் இருக்கிற சந்துல தளம் போடுவதற்கு அவங்க தோண்டும் போது ஒரு விஷயத்தை கவனிச்சேன்.

நாங்க வீடு கட்டுவதற்கு முன்னாடி இருந்த எங்க பூர்வீக வீடோட கால்வாய் அமைப்பு அவங்க தோண்டும்போது வெளியே தெரிஞ்சிது. அப்போ அந்த சந்து எங்களுக்கு சொந்தமான இடம்தான்னு நான் புரிஞ்சுகிட்டேன். இது சம்பந்தமா அவங்க கிட்ட நான் கேட்டப்போ என்னையும் என் கணவரையும் அடிச்சாங்க. இது சம்பந்தமா போலீஸ்ல புகார் கொடுத்தேன். போலீஸ் விசாரணை நடத்தி 2 பேரையும் சர்வே போடச்சொல்லி இடம் யாருக்கு என்று தெரிஞ்சுக்க தீர்வு சொன்னாங்க. இதுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க ஒத்து வரல. அதுக்கப்புறம் நான் ஆர்.டி.ஓ. ஆபிஸ்ல பணம் கட்டி சர்வேயரை வரவழைச்சி அளந்து பார்த்தப்போ சர்வே கல்லுபடி அந்த இடம் எங்களுக்கு சொந்தமானதுனு தெரிஞ்சிது. இந்த சர்வே நகலை போலீஸ் ஸ்டேசன்ல கொடுத்து மறுபடியும் பக்கத்து வீட்டுக்காரங்கள அழைச்சி பேசினாங்க.

அப்போ, இந்த சர்வே மேல எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நான் ஒருமுறை சர்வேப்போட்டு பார்க்கிறேன்னு சொன்னாங்க. நானும், சரி பாக்கட்டும்னு சொல்லிட்டு வந்தேன். இந்தநிலையிலதான் 28-ம் தேதி மாலை எதிர்தரப்புக்காரங்க சர்வேயரை அழைச்சுட்டு வந்து பார்த்தாங்க.

மர்மமான முறையில் இறந்த சஞ்சய்காந்தி
மர்மமான முறையில் இறந்த சஞ்சய்காந்தி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது நடந்து கொண்டிருக்கும்போதே எதிர்தரப்புக்கு ஆதரவாக ஆளுங்கட்சி தி.மு.க. கவுன்சிலர் மகன் பாபு அங்க வந்து பேசினார். அவர் உள்ளே வரும் போதே எனக்கு புரிஞ்சு போச்சு, ஏதோ பெருசா நடக்கப் போகுதுன்னு. ஒரு பாதுகாப்புக்காக நான் என் கையிலிருந்த மொபைல்ல நடக்கிற எல்லாத்தையும் யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுக்க ஆரம்பிச்சேன். எங்க ரெண்டு வீட்டுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றும்நிலையில் கவுன்சிலர் மகன் குறுக்கிட்டு `இடம் உங்களோடதா இருந்தால்தான் என்ன? விட்டு கொடுக்க வேண்டியதுதானே'ன்னு கோபமா பேசினாரு. அதுமட்டுமில்லாம பேசம போயிரு இல்ல கொன்றுவேன்னு மிரட்டினார். நான் வீடியோ எடுக்கிறது தெரிஞ்சுகிட்டு எடுத்த வீடியோவை டெலிட் பண்ணுனு சொல்லி ஒருமையில் பேசினாரு. இதெல்லாமே அந்த ரெக்கார்டுல இருக்கு.

தொடர்ந்து இரவு என் கணவர் சாப்பிட்டதுக்கு பிறகு வாழைப்பழம் வாங்கிட்டு வரேன்னு கடைக்கு போனவர் திரும்பி வரவே இல்ல. எப்போதுமே மனசு சரி இல்லனா அவரு கொஞ்ச நேரம் வெளியில சுத்திட்டு பக்கத்துல ஒரு தகர கொட்டகை இருக்கும் அந்த கொட்டகையில படுத்துக்கிடப்பார். ஆனா, அன்னைக்கு அவர் அங்கேயும் இல்ல. அதுவே எனக்கு வயித்துல புளிய கரைச்ச மாதிரி இருந்துச்சு. உடனே எங்க வீட்டு ஆளுங்களுக்கு போன்போட்டு அவரை காணல. தேடிப்பார்த்து சொல்லுங்கனு கேட்டேன். அதிகபட்சமா போனாக்கூட நள்ளிரவு 2 மணிக்குலாம் வீட்டுக்கு வந்திடுவார். ஆனால் அன்னைக்கு விடிய, விடிய அவர் வீட்டுக்கு வரவே இல்ல. சொந்தக்காரங்களும் பல இடங்களில் தேடிட்டு எங்கேயுமே அவர காணலனு சொன்னப்போ எனக்கு பாதி உசுரு போயிடுச்சு. காலைல 6 மணிக்கு என் சொந்தக்காரங்க போன்போட்டு புளியம்பட்டி சுடுகாட்டுல என் கணவர் உட்கார்ந்த நிலையில தூக்குல செத்து கிடக்கார்னு சொன்னாங்க. அந்த நிமிஷமே என் வாழ்க்கையே இருட்டா போச்சு.

காது கேட்காத, வாய் பேச முடியாத மனுஷன கல்யாணம் கட்டிக்கிட்டு இரண்டு குழந்தையும் பெத்துகிட்டு குடும்பத்தை நடத்தி வர எனக்கு இப்போ கணவர் இல்லைனும் போது என்ன செய்யறதுன்னே தெரியல. இரவுல சண்டை நடந்திருக்கு. காலையில என்னோட கணவர் மர்மமான முறையில் இறந்திருக்காரு. இதை பார்க்கும்போது அந்த கவுன்சிலர் மகனும், பக்கத்து வீட்டுக்காரங்களும் சேர்ந்துதான் என் கணவரை கொலை செஞ்சிருக்கனும். அவங்க மேல புகார் கொடுத்திருக்கேன்.

மர்மமான முறையில் இறந்த சஞ்சய்காந்தி
மர்மமான முறையில் இறந்த சஞ்சய்காந்தி

போலீஸ் வழக்கு பதிவு செஞ்சி விசாரணை நடத்திட்டு வாராங்க. ஆளுங்கட்சி கவுன்சிலர் மகனுங்கிறதால பணபலமும், செல்வாக்கும் அவங்களுக்கு நிறைய இருக்கு. ஆனால் எனக்கு இரண்டு பிள்ளைகள் மட்டும்தான் தஞ்சம். அதை தவிர என்கிட்ட எதுவும் இல்லை. தைரியம் கொடுக்குறதுக்கு கணவர்னு ஒருத்தர் இருந்தாரு அவரும் இப்போ இல்லாததால எனக்கு அரசாங்கம் துணை செய்யணும்" என்று தழுதழுத்த குரலில் அழுதபடியே பேசி முடித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் பேசினோம். ``சஞ்சய்காந்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. அந்த மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வந்து சேரவில்லை. அது வந்ததும் வழக்கின் நிலை தெரியும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism