முதியவர் ஜபருல்லா என்பவர் காணாமல்போன விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஆட்கொணர்வு மனுவின்படி வெளிப்பட்ட விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான பின்னணித் தகவல்கள் தமிழக அளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தன. ஆசிரமம் அனுமதியின்றிச் செயல்பட்டது, 16 பேர் காணாமல்போனது, மனவளர்ச்சி குன்றியோர் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது, வளர்ப்பு குரங்குகள் மூலம் கடிக்கவைத்து கொடுமை செய்தது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தன.

எனவே, சர்ச்சைக்குள்ளான ஆசிரமத்திலிருந்து 142 பேர் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நலமாக இருந்தவர்கள் உறவினர்களுடன் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், மனநல சிகிச்சை தேவைப்படும் மனநலம் குன்றியோர் மாற்று காப்பகங்கள் மற்றும் ஆசிரமங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் சிலர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி, அன்பு ஜோதி ஆசிரமத்தின் கோட்டக்குப்பம் கிளையிலிருந்தும் 24 பேர் மீட்கப்பட்டனர். பாலியல்ரீதியாகக் கொடுமைகளுக்கு ஆளான பெண் மற்றும் விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் 13 பிரிவுகளின் கீழ் கெடார் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, ஜூபின் பேபி - மரியா தம்பதி உட்பட ஒன்பது பேர் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டனர்.
அந்த ஆசிரமத்தை மூட உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் பழனி, மற்ற ஆசிரமங்கள் மற்றும் காப்பகங்கள் முறையாகச் செயல்படுகின்றனவா என அதிரடி ஆய்வு மேற்கொள்ள எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த ஆசிரம விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள நான்கு தனிப்படை போலீஸ் அமைக்கப்படுவதாக ஆறிவிக்கப்பட நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றி உத்தரவிட்டார் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு. இதற்கிடையே, தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் ஆகியவை பாதிக்கப்பட்ட ஆசிரமப் பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி கோமதி நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சி.பி.சி.ஐ.டி டீம் வந்திருந்தது. விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா முன்னிலையில் அந்த வழக்குக்கான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி அருண் பாலகோபாலன் தலைமையிலான குழுவினர் மற்றும் தடவியல்துறை துணை இயக்குநர் சண்முகம் உள்ளிட்டோர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஒரே சமயத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சி.பி.சி.ஐ.டி எஸ்.பி அருண் பாலகோபாலன், "ஆய்வில் கூடுதல் ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. அவை முக்கியமானவையா என்பது விசாரணையில்தான் தெரிய வரும். கைதுசெய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து விசாரணையின்படி முடிவு எடுக்கப்படும். டி.ஜி.பி அவர்கள் நான்கு வழக்குகளை எங்களுக்கு டிரான்ஸ்ஃபர் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையைத்தான் மேற்கொண்டிருக்கிறோம். சி.பி.சி.ஐ.டி-யின் வழக்கமான முறைப்படி விசாரணை நடைபெறும்" என்றார்.