அஸ்ஸாம் மாநிலம், திங் மாவட்டத்தில் சலோனாபோரி கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் மீன் விற்பனையாளரான சஃபிகுல் இஸ்லாமை, கடந்த வெள்ளிக்கிழமையன்று படத்ரவா போலீஸார் கைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். பின்னர் சஃபிகுல் காவல் நிலையத்தில் திடீரென உயிரிழந்ததையடுத்து, குடிபோதையிலிருந்த சஃபிகுல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துவிட்டதாக போலீஸார் அவர் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த சஃபிகுல் குடும்பத்தினர் படத்ரவா காவல் நிலையத்துக்கு தீ வைத்திருக்கின்றனர். பின்னர் இந்தச் சம்பவத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமையன்று ஆஷிகுல் இஸ்லாம் என்பவரை, காவல் நிலையத்துக்கு தீ வைக்கத் தூண்டியதாக வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். இந்த நிலையில், ஆஷிகுல் இஸ்லாமுடன் போலீஸார் இன்று அதிகாலை அவரது வீட்டில் சோதனை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில், திடீரென சாலை விபத்தில் ஆஷிகுல் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய காவலர் ஒருவர், ``ஆஷிகுல் இஸ்லாமுடன் விசாரணை நடத்தியபோது, அவர் தன்னுடைய வீட்டில் ஆயுதங்கள் வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில், அவரது வீட்டில் சோதனை நடத்தலாம் என ஆஷிகுல் இஸ்லாமுடன் அவரது வீட்டுக்குச் சென்றோம். பின்னர் சோதனை முடித்துவிட்டுக் காவல் நிலையத்துக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஆஷிகுல் தப்பிக்க முயன்று காரிலிருந்து வெளியில் குதித்தபோது, பின்னால் வந்துகொண்டிருந்த எஸ்கார்ட் வாகனம் மோதி உயிரிழந்தார்" எனக் கூறினார்.
ஆனால், ஆஷிகுல் இஸ்லாமின் உறவினர்கள் அவர் காவலர்களால் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
