அஸ்ஸாம் மாநிலத்தில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னுடைய சர்வீஸ் துப்பாக்கியால் சக காவல்துறை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் முக்கியமாக இந்த சம்பவம், சாரெய்டியோ மாவட்டத்தின் சோனாரி காவல் நிலையத்துக்குள்ளேயே நடந்திருக்கிறது.

இதில் குற்றம் சாட்டப்பட்டவராக அறியப்படும் அதே காவல் நிலைய கான்ஸ்டபிள் தீபக் காகதி, சக ஊழியர் ககுல் பாசுமாதாரியை காவல் நிலையத்திலேயே சுட்டுக்கொன்றார். அதையடுத்து தீபக் காகதியை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் இந்த சம்பவத்தை ஊடகத்திடம் உறுதிப்படுத்திய காவல் நிலைய ஆய்வாளர் யுவராஜ், ``கான்ஸ்டபிள் தீபக் காகதி தன்னுடைய சர்வீஸ் துப்பாக்கியைப் பயன்படுத்தி சக ஊழியரான ககுல் பாசுமாதாரியை சுட்டார்.

உடனடியாக மற்ற அதிகாரிகள் பாசுமாதாரியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்" எனத் தெரிவித்தார்.
மேலும், கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தீபக் காகதியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.