Published:Updated:

அஸ்ஸாம்: திருமணத்துக்கு மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு! - ஏற்கெனவே திருமணமானவரின் வெறிச்செயல்

பெண்மீது ஆசிட் வீச்சு
பெண்மீது ஆசிட் வீச்சு

அஸ்ஸாம் மாநிலத்தில் திருமணத்துக்கு மறுத்த பெண் மீதி ஆசிட் ஊற்றிய 50 வயது நபரை காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள்.

அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திப்ருகரில் (Dibrugarh) வசிக்கும் 32 வயது பெண், கடந்த ஞாயிறு அன்று பணி முடித்து வீடு திரும்பியபோது அமோலபட்டி (Amolapatty) பகுதியில் ஆசிட் வீசி தாக்கப்பட்டிருக்கிறார். படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ரிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள்.

குற்றம்
குற்றம்
representational image

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். இது குறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய திப்ருகரின் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பிதுல் செட்டியா (Bitul Chetia), ``இந்தச் சம்பவம் தொடர்பாக புத்ததேவ் தாஸ் (50) (Buddhadev Das) என்பவரை சாந்திபரா (Shantipara) பகுதியில் கைதுசெய்திருக்கிறோம். முதற்கட்ட விசாரணையில், முன்பே ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இருந்தது தெரியவந்திருக்கிறது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், ``காயமடைந்த அந்தப் பெண்ணுக்கு முகம் மற்றும் இடது தோள்பட்டையில் காயங்கள் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அஸ்ஸாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது அந்தப் பெண் குணமடைந்துவருகிறார். கைதுசெய்யப்பட்ட நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்" என்று கூறினார்.

பெண்மீது ஆசிட் வீச்சு
பெண்மீது ஆசிட் வீச்சு

புத்ததேவ் தாஸ் அந்தப் பெண்ணை திருமணம் செய்யக் கூறி வற்புறுத்தியதாகவும், அதற்கு அந்தப் பெண் தொடர்ந்து மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்தப் பெண்ணின் மீது ஆசிட் ஊற்றியிருக்கிறார். புத்ததேவ் தாஸுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு