Published:Updated:

`வேண்டுமென்றே தகராறு; இரவில் தாக்குதல்'- வாளையாறு பாலியல் வழக்கு குற்றவாளி மயங்கிய நிலையில் மீட்பு

காயம் அடைந்த வாளையாறு பாலியல் வழக்குக் குற்றவாளி
காயம் அடைந்த வாளையாறு பாலியல் வழக்குக் குற்றவாளி

குற்றவாளிகளில் ஒருவரான எம்.மது என்ற குட்டி மதுவை நேற்று இரவு சிலர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் மயங்கிய நிலையில் ரோட்டோரம் கிடந்தார்.

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கேரள மாநிலம் வாளையாறில் இரண்டு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து தூக்கில் தொங்கவிட்ட வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட குற்றவாளியைச் சிலர் கடுமையாகத் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள்
வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வாளையாறில் 2017-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி 14 வயதுள்ள சிறுமி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இரண்டு மாதத்துக்குப் பிறகு மார்ச் 4-ம் தேதி அந்தச் சிறுமியின் 9 வயது தங்கையும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். எட்டாத உயரத்தில் உள்ள உத்திரத்தில் சிறுமிகள் தூக்கில் தொங்கியதால் அது கொலை எனத் தெரியவந்தது. மேலும், பிரேதப் பரிசோதனையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கில் சிறுமிகளின் தாய் வழி உறவினரான மது, சிறுமிகளின் தந்தையின் நண்பர் ஷிபு, குட்டி மது என்ற எம்.மது, பிரதீப் குமார் மற்றும் சிறுவன் ஒருவன் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பிரதீப் குமார் என்பவர் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள நான்கு பேரையும் பாலக்காடு போக்ஸோ கோர்ட் கடந்த அக்டோபர் 25-ம் தேதி விடுவித்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் வாதாடிய அரசு வழக்கறிஞர் லதா ஜெயராஜை அரசு வக்கீல் பதவியில் இருந்து நீக்கி கேரள அரசு உத்தரவிட்டது.

காயம் அடைந்த வாளையாறு பாலியல் வழக்கு குற்றவாளி
காயம் அடைந்த வாளையாறு பாலியல் வழக்கு குற்றவாளி

இந்த நிலையில் பாலியல் குற்றவாளிகளை ஊருக்குள் சேர்க்க மாட்டோம் என்று சிலர் ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான எம்.மது என்ற குட்டி மதுவை நேற்று இரவு சிலர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் மயங்கிய நிலையில் ரோட்டோரம் கிடந்தார். இதுகுறித்து இன்று காலை சிலர் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். போலீஸார் அங்கு சென்று பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். சிலர் வேண்டுமென்றே தகராறு செய்து தன்னை தாக்கியதாகக் குட்டி மது தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு