Published:Updated:

சென்னை: `ஏடிஎம் கொள்ளைக் கும்பலின் தலைவன் யார்?!’ - நடித்துக் காட்டியதை வீடியோ எடுத்த போலீஸ்

எஸ்.பி.ஐ ஏடிஎம்
எஸ்.பி.ஐ ஏடிஎம்

நாடு முழுவதும் நடந்த எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டவரின் தகவல் போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது. ஹரியானாவிலிருந்து கார் மூலம் புதுச்சேரிக்கு வந்த கொள்ளைக் கும்பல் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

நாடு முழுவதுமுள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மையங்களிலுள்ள பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் நூதன முறையில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்துப் புகாரளித்தனர். இதையடுத்து கூடுதல் கமிஷனர் (தெற்கு) கண்ணன் மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் ஹரியானாவில் முகாமிட்டு ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய அமீர் அர்ஷ் என்பவரை 23.6.2021-ம் தேதி கைதுசெய்து, அவரிடமிருந்து 4.5 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தது. அமீர் அர்ஷ் அளித்த தகவலின்படி ஹரியானா மாநிலம், பல்லப்கார்க் பகுதியைச் சேர்ந்த வீரேந்திர ராவத் (23) என்பவரை 27.6.2021-ம் தேதி போலீஸார் கைதுசெய்தனர்.

வீரேந்திர ராவத்
வீரேந்திர ராவத்

இவர்கள் இருவரும் அளித்த தகவலின்படி நசீம் உசைனை போலீஸார் பிடித்திருக்கின்றனர். அவரிடம் விசாரித்தபோது ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு தலைவனாகவும் மூளையாகவும் செயல்பட்டவன் குறித்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது. அதனால் அவனைப் பிடிக்க தி.நகர் துணை கமிஷனர் ஹரிகரன் பிரசாத் தலைமையிலான போலீஸார் ஹரியானாவிலேயே முகாமிட்டிருக்கின்றனர். இதற்கிடையில் அமீர் அர்ஷை போலீஸார் காவலில் எடுத்து, சென்னையில் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஏடிஎம் கொள்ளை நடந்த பெரியமேடு எஸ்.பி.ஐ., ஏடிஎம் மையத்துக்கு அமீர் அர்ஷை போலீஸார் நேற்று அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது ஏடிஎம் மையத்திலுள்ள பணம் டெபாசிட் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணத்தைக் கொள்ளையடித்தது எப்படி என்பதை அவர் செயல்முறை விளக்கம் அளித்தார். அதை போலீஸார் வீடியோவாகப் பதிவு செய்தனர். பிறகு அமீர் அர்ஷிடம் கொள்ளைக் கும்பலின் தலைவன் யார், எங்கெல்லாம் கொள்ளையடித்தீர்கள் என விசாரித்தனர். அதேபோல வீரேந்திர ராவத், நசீம் ஆகியோரிடமும் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான அமீர் அர்ஷ்
ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான அமீர் அர்ஷ்

இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். ``ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தில் இதுவரை மூன்று பேரைப் பிடித்திருக்கிறோம். ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்க ஏடிஎம் கார்டுகளுடன் இவர்கள் தமிழகத்துக்கு ஹரியானாவிலிருந்து வந்திருக்கின்றனர். நசீம் என்பவன், தன்னுடைய சொந்த ஜீப்பில் ஹரியானாவிலிருந்து புதுச்சேரிக்கு கூட்டாளிகளுடன் வந்திருக்கிறான். பிறகு புதுச்சேரியிலிருந்து வரும்போது சாலையிலிருந்த எஸ்.பி.ஐ ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்தபடியே அந்தக் கும்பல் சென்னை வந்திருக்கிறது. அவர்களிடம் விசாரித்தபோதுதான் சென்னையில் மட்டுமல்ல, புதுச்சேரியிலும் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. பிறகு நசீம், தன்னுடைய கூட்டாளிகளுடன் ஜீப்பில் சென்னையிலிருந்து, பெங்களூருக்குச் சென்று ஹரியானாவுக்கு சென்றிருக்கிறான். அப்போதும் அந்தக் கும்பல் சென்ற வழியிலுள்ள ஏடிஎம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறது.

ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு சதக்கத்துல்லா என்பவன் தலைவனாக இருந்தது தெரியவந்திருக்கிறது. இவன்தான் ஏடிஎம் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டிருக்கிறான். ஹரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு சதக்கத்துல்லா, ஏடிஎம் கொள்ளை குறித்து பயிற்சி அளித்திருக்கிறான். கொள்ளையடித்த பணத்தை உடனுக்குடன் வங்கி மூலம் அனுப்பிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வங்கிக் கணக்குகளை முடக்கியிருக்கிறோம். விசாரணை முடிவில்தான் எவ்வளவு ரூபாய் கொள்ளைபோனது என்ற விவரம் தெரியவரும். ஏடிஎம் கொள்ளைக் கும்பலின் தலைவன் சிக்கினால்தான் எத்தனை ஆண்டுகளாக இந்தக் கொள்ளை நடந்துவந்தது என்ற தகவலும் தெரியவரும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு