Published:Updated:

ஏடிஎம் மோசடி... மோசமான நிலையில் தமிழகம்! - தடுக்க என்ன வழி?

இ.லோகேஷ்வரி

ஏறக்குறைய 2.9 கோடி ரூபாயை ஏடிஎம் மோசடியில் இழந்துள்ளது டெல்லி. ஏடிஎம் மோசடி நடந்த மாநிலங்களின் பட்டியலில் இடம்பெறாத மாநிலங்கள் அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், திரிபுரா மட்டுமே. இந்த மாநிலங்களில் ஒரு ஏடிஎம் மோசடிகூட நடந்தது இல்லை.

ஏடிஎம் மோசடி
ஏடிஎம் மோசடி

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏடிஎம் மோசடிகளில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தலைநகர் டெல்லியைவிட மகாராஷ்ட்ரா மற்றும் தமிழகம் ஏடிஎம் மோசடிகளில் அதிக அளவிலான தொகையை இழந்துள்ளது.

ATM
ATM

ஏடிஎம் மோசடிகள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், மகாராஷ்ட்ரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு கிட்டத்தட்ட 200-க்கும் அதிகமான ஏ.டி.எம் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. ஏ.டி.எம் மோசடி மூலமாக அம்மாநிலம் மட்டும் 4.81 கோடி ரூபாயை இழந்துள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இங்கு 3.63 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், அதிகபட்சமாகத் தலைநகர் டெல்லியில் ஏ.டி.எம் மோசடி தொடர்பாக 179 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால், தற்போது அந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள பட்டியலில், ஏறக்குறைய 2.9 கோடி ரூபாயை ஏ.டி.எம் மோசடியில் டெல்லி இழந்துள்ளது.

ATM
ATM

ஏ.டி.எம் மோசடி நடந்த மாநிலங்களின் பட்டியலில் இடம்பெறாத மாநிலங்கள் அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், திரிபுரா மட்டுமே. இந்த மாநிலங்களில் ஒரு ஏ.டி.எம் மோசடிகூட நடந்ததில்லை. 2017-18-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2018-19-ம் நிதியாண்டில் ஏ.டி.எம் மோசடியால் இழந்த தொகையின் எண்ணிக்கை ரூ.21.4 கோடியாகக் குறைந்துள்ளது.

2017-18-ம் ஆண்டில் ஏ.டி.எம் மோசடியில் 65.3 கோடி ரூபாய் பண இழப்பு நடந்துள்ளது. அதிகபடியான ஏ.டி.எம் மோசடிகள், ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி, ஏ.டி.எம் கார்டு தகவல்களை காப்பி செய்வது நடக்கிறது எனத் தெரிய வந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பாதுகாவலர்கள் இல்லாத ஏ.டி.எம் மையங்களுக்கு வரும் ஏ.டி.எம் மிஷினைப் பயன்படுத்தத் தெரியாதவர்களைக் குறிவைத்து, ஏ.டி.எம் கார்டுகளை மாற்றியும் மோசடிகள் நடக்கின்றன.

ATM Card Forgery: நெக்கொலேய், போரீஸ், லியுபேமிர்
ATM Card Forgery: நெக்கொலேய், போரீஸ், லியுபேமிர்

போலி கால்சென்டர்கள் மூலம், வங்கி ஏஜென்ட் எனக் கூறி அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றும் மோசடி செய்யப்படுகிறது. இந்த நிலையில், பல்கேரியாவைச் சேர்ந்த நெக்கொலேய், போரீஸ், லியுபேமிர் ஆகியோர் சென்னை காரப்பாக்கத்தில் தங்கியிருந்து போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து வந்துள்ளனர்.

போலி கார்டுகளைவைத்து, சென்னையில் உள்ள ஏ.டி.எம் மிஷின்களில் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட போலி ஏ.டி.எம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

online frauds
online frauds

அதோடு, சென்னையில் கொள்ளையடித்த சுமார் ரூ. 18 லட்சம் ரூபாய் இந்திய பணத்தை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி, இவர்கள் தங்கும் விடுதியில் வழங்கப்பட்ட லாக்கரில் வைத்துள்ளனர். இதுபோன்ற ஏ.டி.எம் கொள்ளைகள் தமிழகமெங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

பொதுத்துறை வங்கி கூட்டமைப்பைச் சேர்ந்த தாமஸ் ப்ராங்கோ கூறுகையில், ''ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை கவலையளிக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக இந்தியக் காவல் துறைக்குப் போதுமான பயிற்சி இல்லை. ஆன்லைன் மோசடி, ஏ.டி.எம் மோசடிகள் அதிகம் நடக்கக் காரணமாக அமைகிறது.

தாமஸ் ப்ராங்கோ
தாமஸ் ப்ராங்கோ

வங்கி மோசடிகளில் பணத்தை இழந்த பலர், காவல் துறையில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எந்த முடிவும் கிடைக்காதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழக காவல் துறை உடனடியாகத் தொழில்நுட்ப வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

உலக அளவில் வங்கி மோசடிகள் எப்படி நடக்கிறது, அதை மற்ற நாடுகள் எப்படித் தடுக்கின்றன என்பதை அறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் செயல்பட வேண்டும். அதேநேரத்தில், வங்கிகளின் ஏ.டி.எம்-களில் காவலர்கள் வேலையில் இருந்தார்கள். ஆனால், இன்று அவர்களை நீக்கிவிட்டு கேமரா வைத்துள்ளார்கள்.

RBI
RBI

இதனால் குற்றங்கள் அதிகரிக்கும். கேமரா இருப்பதால், குற்றங்கள் கண்டுபிடிக்க வசதியாக இருக்குமே தவிர, அதைத் தடுக்க முடியாது. அதோடு, கேமராவைச் சுலபமாக ஹேக் செய்ய முடியும். தொழில்நுட்பங்களுக்காகவும், அதைப் பாதுகாப்பாகக் கையாளவும் வங்கிகள் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். காவல் துறையும் வங்கி மோசடிகள் நடக்காமல் இருக்க, இதுபோன்ற வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்'' என்றார்.