Published:Updated:

திருவாரூர்: ஏ.டி.எம் மெஷினிலிருந்து பணம் கொள்ளை; சிசிடிவி-யால் சிக்கிய நபர்!

திருவாரூர்
திருவாரூர்

வங்கி அலுவலர்கள் வந்து பார்த்தபோது, இதில் ரூ.2,05,700 கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை செயல்பட்டுவருகிறது. இதனுடன் ஏ.டி.எம் மையமும் செயல்பட்டுவருகிறது. இங்குள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் கடந்த 14-ம் தேதி பணம் நிரப்புவதற்காக, வங்கி அலுவலர்கள் வந்து பார்த்தபோது, இதில் ரூ.2,05,700 கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. மெஷினை உடைக்காமலேயே பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது யாராக இருக்கும் என்று வங்கி அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இது தொடர்பாக, திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் வங்கித் தரப்பில் புகாரளிக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட இளையராஜா
கைதுசெய்யப்பட்ட இளையராஜா

விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கடந்த 12-ம் தேதி வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் துப்புரவுப் பணியாளர் இளையராஜா என்பவர், காலை 8 மணிக்கு வங்கியின் மேலாளர் அறைக்குச் சென்று அங்கிருந்த ஏ.டி.எம் மெஷினின் சாவியையும், பாஸ்வேர்டு எழுதிவைத்திருந்த பேப்பரையும் எடுத்துச் செல்வது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். இவர்தான் ஏ.டி.எம் மெஷினிலிருந்து பணத்தைத் திருடிச் சென்றதாக குற்றம்சாட்டுகிறார்கள். இது குறித்து இளையராஜாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஏ.டி.எம் மெஷினிலிருந்து பணம் திருடியதை அவர் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். இளையாராஜாவிடமிருந்து 1,80,700 ரூபாய் மீட்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு