Published:Updated:

நடிகர் வடிவேல் பாணியில் மாறுவேடமிட்ட `வெல்டிங்' ராஜ்குமார் சிக்கியது எப்படி?

நடிகர் வடிவேல் பாணியில், சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க பர்தா அணிந்து வந்த வெல்டிங் ராஜ்குமாரை போலீஸார் பிடித்தனர்.

வெல்டிங் ராஜ்குமார்
வெல்டிங் ராஜ்குமார்

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது. இரவு நேரத்தில், அந்த ஏடிஎம் அருகே பர்தா அணிந்த பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாகச் சென்ற ரோந்து போலீஸார், ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க அந்தப் பெண் வந்திருப்பதாகக் கருதினர். ஆனால், அவரின் தலையில் ஆண்கள் அணியும் ஹெல்மெட் இருப்பதைப் பார்த்த போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி
எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி

இதையடுத்து, பர்தா அணிந்தவரிடம் போலீஸார் விசாரிக்க, ஏ.டி.எம் மையம் அருகே போலீஸ் வாகனத்தை நிறுத்தினர். அதைப் பார்த்ததும் அந்தப் பெண் அங்கிருந்து ஓட்டம்பிடித்தார். இதனால், போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. போலீஸார், பர்தா அணிந்தவரை விரட்டிச்சென்று பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில், ஏடிஎம் மையத்தின் அருகில் வெல்டிங் மற்றும் கட்டிங் இயந்திரங்கள் கிடந்தன. அதையும் போலீஸார் கைப்பற்றினர். பர்தா அணிந்தவரிடம் போலீஸார் விசாரித்தபோது, ஆணின் குரல் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான் பர்தா அணிந்தது பெண் அல்ல ஆண் என்று தெரியவந்தது.

எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி
எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``வேளச்சேரி 100 அடி சாலையில் ரோந்துப் பணிக்காகச் சென்றபோது, எஸ்.பி.ஐ ஏடிஎம் அருகில் சந்தேகப்படும்படியாக பர்தா அணிந்தபடி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது, வேளச்சேரி காந்தி சாலையில் குடியிருந்துவரும் ராஜ்குமார் (24) என்று தெரியவந்தது. இவர், வெல்டிங் கடை வைத்திருக்கிறார். சம்பவத்தன்று இவர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர், பர்தா அணிந்து வந்துள்ளார்.

அந்தச் சமயத்தில், ரோந்து போலீஸார் அவ்வழியாக வந்ததால், போலீஸாரிடம் சிக்காமலிருக்க ஹெல்மெட்டை தலையில் அணிந்துள்ளார். இதனால்தான் ராஜ்குமார் சிக்கிக்கொண்டார். அவரிடமிருந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கப் பயன்படுத்தும் கட்டிங் இயந்திரத்தைப் பறிமுதல்செய்துள்ளோம். ராஜ்குமார் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்றும் விசாரித்துவருகிறோம்" என்றார்.

வெல்டிங் ராஜ்குமார்
வெல்டிங் ராஜ்குமார்

ராஜ்குமார் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``நான் வெல்டிங் கடை நடத்திவருகிறேன். அதன்மூலம் போதிய வருமானம் கிடைக்கவில்லை. மேலும், ஆடம்பரமாக வாழ கடன் வாங்கினேன். அதனால், கடன்தொல்லையால் சிரமப்பட்டுவந்த நான், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டேன். சிசிடிவி கேமராவில் சிக்காமலிருக்கத்தான் பர்தா அணிந்து முகத்தை மூடினேன்.

ஆள்நடமாட்டம் குறைந்த பிறகு பர்தாவை அணிந்தபடி, பைக்கில் ஏடிஎம் மையத்துக்கு வந்தேன். தற்போது, ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால், வாகனச் சோதனையில் சிக்கிக்கொள்வோம் என்றுதான் ஹெல்மெட் அணிந்துவந்தேன். பைக்கை ஏடிஎம் மையத்தைவிட்டு சில மீட்டர் தூரத்தில் நிறுத்தினேன். அதன்பிறகு, ஏடிஎம் மையத்துக்கு நடந்துவந்து நோட்டமிட்டேன். நான் பர்தா அணிந்திருந்ததால் என்னை அடையாளம் காண முடியாது என்று நம்பினேன். ஆனால், ஆண்கள் அணியும் ஹெல்மெட்டால் சிக்கிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

வெல்டிங் ராஜ்குமார்
வெல்டிங் ராஜ்குமார்

வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் ஏடிஎம் மையத்தில் காவலாளி இல்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. காவலாளி இல்லை என்பதை சில நாள்களாக நோட்டமிட்ட ராஜ்குமார், பர்தா அணிந்து வந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். `போக்கிரி' படத்தில் நடிகர் விஜய்யை கண்காணிக்க நடிகர் வடிவேல் பல கெட்டப்பில் வருவார். அப்போது, அவரின் தலை மீதுள்ள கொண்டையை அவர் மறைக்காமல், விஜய் தரப்பினரிடம் சிக்கிக்கொள்வார். அந்தச் சம்பவத்தைப் போல கொள்ளையடிக்க, ராஜ்குமார் பர்தா அணிந்துவந்துள்ளார். ஆனால், ஆண்கள் அணியும் ஹெல்மெட்டால் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.

ராஜ்குமார், ஏடிஎம் மையத்தின் அருகில் நீண்ட நேரம் நின்றுகொண்டிருப்பதை நுண்ணறிவு பிரிவு காவலர் பாஸ்கர் என்பவர்தான் முதலில் கவனித்துள்ளார். உடனடியாக அவர், ரோந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ராஜ்குமார் பர்தா அணிந்திருந்ததால் அவரை பெண் என்று கருதிய காவலர் பாஸ்கர், அவரைப் பிடிக்க பெண் போலீஸாரையும் ரோந்து போலீஸாருடன் வரவழைத்திருந்தார். ராஜ்குமார் போலீஸாரிடம் சிக்கியபிறகு, அவர் ஆண் என்று தெரியவந்தது.

வெல்டிங் ராஜ்குமார்
வெல்டிங் ராஜ்குமார்

சென்னையில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்துக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தாலும் வங்கி நிர்வாகம் இன்னமும் காவலாளிகளை நியமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால்தான், காவலாளி இல்லாத ஏடிஎம் மையங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிவருகின்றனர். வேளச்சேரி எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்தில்கூட நுண்ணறிவுப் பிரிவு காவலர் பாஸ்கர் மட்டும் தகவல் கொடுக்கவில்லை என்றால், கொள்ளை நடந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால், கொள்ளைச் சம்பவத்தைத் தடுத்த காவலர் பாஸ்கரை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.