Published:Updated:

`பெட்ரோல் போட்டால் காசு கேட்கிற' - ஊழியர்களுக்கு வெட்டு, சூறையாடப்பட்ட பங்க்

எஸ்.மகேஷ்

சென்னை அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் செயல்பட்டுவருகிறது. இங்கு 10 பேர் பைக்கில் நேற்றிரவு வந்தனர். அவர்கள் பெட்ரோல் போட்டனர். அதன் பிறகு, அவர்கள் புறப்பட்டனர். அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பணம் கேட்டனர். அவர்கள், `யாரிடம் பணம் கேட்கிறாய், நாங்க யாரென்று தெரியுமா' என்று கூறியபடி அரிவாள், கத்தியால் பெட்ரோல் பங்க் ஊழியர்களை வெட்டினர். இதனால் மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பெட்ரோல் பங்க்கில் தாக்குதல்
பெட்ரோல் பங்க்கில் தாக்குதல்

வெட்டுப்பட்ட ஊழியர்கள், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால், பைக்கில் வந்த கும்பல் அவர்களை விரட்டிவிரட்டி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. இதையடுத்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த ஊழியர்கள் 3 பேரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஒருவரின் உடல்நலம் மோசமானது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், போலீஸார் விசாரணை நடத்திவிட்டு சென்ற பிறகு, மீண்டும் அதே கும்பல் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பெட்ரோல் பங்க்குக்கு வந்தது. அவர்கள், எங்களை போலீஸிடம் காட்டிக்கொடுக்கிறீயா' என்று ஆவேசமாகக் கூறியபடி பெட்ரோல் பங்க்கை சூறையாடினர். பெட்ரோல் போட வந்த வாடிக்கையாளர்களையும் அந்தக் கும்பல் விட்டுவைக்கவில்லை; அவர்களையும் சரமாரியாகத் தாக்கியது.

பெட்ரோல் பங்க்கில் தாக்குதல்
பெட்ரோல் பங்க்கில் தாக்குதல்

இதுகுறித்தும் பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வருவதற்குள் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியது. பெட்ரோல் பங்க்கை இரண்டு முறை தைரியமாகச் சூறையாடிய கும்பல் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பீர்க்கன்காரணை காவல் நிலையம்
பீர்க்கன்காரணை காவல் நிலையம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``பெட்ரோல் பங்க்குக்கு வந்த கும்பல் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அவர்களிடம் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்துள்ளன. பெட்ரோல் பங்க்கில் நடந்த மோதலில் 7 பேருக்கு அடி உதை, 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் கஞ்சா விற்பனை தொடர்பாக இரண்டு கும்பல்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதில் ஒரு தரப்பைச் சேர்ந்த ஒருவரைத் தேடி இன்னொரு கும்பல் பெட்ரோல் பங்க்குக்கு வந்துள்ளது. தேடிவந்த நபர் கிடைக்காத ஆத்திரத்தில்தான் அந்தக் கும்பல் வாடிக்கையாளர்களையும் ஊழியர்களையும் தாக்கியுள்ளது. அவர்கள் வந்த வாகன எண் அடிப்படையில் அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். அதோடு வெட்டுப்பட்ட ஊழியர்களிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளோம்" என்றனர்.

சூறையாடப்பட்ட பெட்ரோல் பங்க்
சூறையாடப்பட்ட பெட்ரோல் பங்க்

சூறையாடப்பட்ட பெட்ரோல் பங்க்கில் ஆங்காங்கே ரத்தத் துளிகள் சிதறிக்கிடந்தன. மேலும், தாக்குதல் நடத்திய கும்பலுக்கு பயந்து சிலர் பைக்குகளை பெட்ரோல் பங்க்கில் ஆங்காங்கே விட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களின் பைக்குகள் அநாதையாக அங்கு கிடந்தன. பெட்ரோல் பங்க்கில் இரவில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.