Published:Updated:

வேலூர்: சந்தன மரங்களை வெட்டிக் கடத்த முயற்சி! - சித்தூரைச் சேர்ந்த 2 பேருக்குச் சரமாரி அடி

பிடிபட்ட நபர்கள்
News
பிடிபட்ட நபர்கள்

வேலூர் அருகேயுள்ள செங்காநத்தம் மலையில், சந்தன மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற சித்தூரைச் சேர்ந்த இரண்டு பேர் பிடிபட்டனர்.

வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள செங்காநத்தம் மலையில் நான்கைந்து கிராமங்கள் இருக்கின்றன. மூலக்கொல்லைப் பகுதிக்கு வரக்கூடிய மலையின் அடிவாரத்தில் வனத்துறை சார்பில் காப்புக்காடும் பராமரிக்கப்பட்டுவருகிறது. இந்தக் காப்புக்காட்டில் செம்மரம், தேக்கு, புங்கன், வேம்பு போன்ற மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. போக்குவரத்துப் பகுதி என்பதால், காப்புக்காட்டிலிருக்கும் மரங்களை வெட்டிக் கடத்துவது எளிதான காரியம் கிடையாது. வனத்துறையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால், மலைக்கு நடுவில் அமைந்திருக்கும் பட்டா நிலங்களிலிருந்து மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகின்றன. நேற்று இரவு, மேல் செங்காநத்தம் முருகன் கோயில் அருகிலிருக்கும் பட்டா நிலத்துக்குள் புகுந்த இரண்டு பேர் சந்தன மரங்களை வெட்டிக்கொண்டிருந்தனர்.

பிடிபட்ட நபர்கள்
பிடிபட்ட நபர்கள்

சத்தம் கேட்டு, அதே ஊரைச் சேர்ந்த இளங்கோ என்பவர் நண்பர்கள் சிலருடன் சென்று பார்த்திருக்கிறார். ஊர்க்காரர்களைப் பார்த்ததும், மரம் வெட்டிக்கொண்டிருந்த இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்து, சரமாரியாகத் தாக்கினர். தகவலறிந்ததும், சத்துவாச்சாரி போலீஸார் செங்காநத்தம் மலைக்கு விரைந்து சென்று, கிராம மக்களின் பிடியிலிருந்த இரண்டு பேரையும் மீட்டனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சுதாகர் (45), சாம்ராஜ் (43) என்பது தெரியவந்தது. இருவரையும் வனத்துறையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். வழக்கமாக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆந்திர மாநிலம் சென்று செம்மரக் கடத்தலில் சிக்குவார்கள். இப்போது, அங்கிருந்து தமிழகம் வந்து கடத்துவதும் தொடர ஆரம்பித்திருக்கிறது. பிடிபட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz