Published:Updated:

புதுக்கோட்டை: பெண் அதிகாரியிடம் செயின் பறிக்க முயற்சி! -எதிர்த்து போராட, தப்பியோடிய இளைஞர்

சுபாஷினி அணிந்திருந்த தாலி செயினை இளைஞர் பறிக்க முயன்றிருக்கிறார். சுதாரித்துக்கொண்ட சுபாஷினி இளைஞரின் கையைத் தட்டிவிட்டு, அவரின் கையையும் கடித்துவைத்தார். தொடர்ந்து, செயினைப் பறிக்க முயன்றபோது, சுபாஷினி சத்தம் போட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இயங்கிவருகிறது. இங்கு கீரமங்கலம் அருகே பெரியாளூரைச் சேர்ந்த சுபாஷினி என்பவர் சி.இ.ஓ-வாக பணியாற்றிவருகிறார். அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் இந்த தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தைப் பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், தென்னங்கன்றுகள் தனக்கு வேண்டும் என்று கூறிக்கொண்டு நேற்று மாலை நிறுவனத்துக்குச் சென்ற இளைஞர் ஒருவர் சி.இ.ஓ-வைப் பார்த்திருக்கிறார். அப்போது, சி.இ.ஓ-விடம் தகவல்களைப் பெற்றுக்கொண்ட அந்த இளைஞர், குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டிருக்கிறார்.

உடனே, சி.இ.ஓ அருகே உள்ள அறையிலிருந்த தண்ணீர் கேனை எடுத்துக் கொடுப்பதற்காக உள்ளே சென்றிருக்கிறார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்த அந்த இளைஞர், சுபாஷினி அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றிருக்கிறார். சுதாரித்துக்கொண்ட சுபாஷினி, இளைஞரின் கையைத் தட்டிவிட்டு, அவரின் கையையும் கடித்துவைத்தார்.

தென்னை வணிக வளாகம்
தென்னை வணிக வளாகம்

தொடர்ந்து, செயினைப் பறிக்க முயன்றபோது, சுபாஷினி சத்தம் போட்டிருக்கிறார். அதைக் கேட்டு அந்தப் பகுதி வழியாகச் சென்றவர்கள் சிலரும் ஓடிவந்தனர். செயினைப் பறிக்க முடியாத அந்த வாலிபர், சுபாஷினியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தலைதெறிக்கத் தப்பி ஓடினார். சுபாஷினிக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, "வழக்கமாக அலுவலகத்துக்கு வரும் விவசாயிகள் அங்குள்ள பதிவேட்டில் பெயர், ஊர் விவரங்களுடன் பதிவு செய்துதான் உள்ளே வருவார்கள். இரண்டு மூன்று அலுவலகர்கள் இருக்கும் இடத்தில் சம்பவத்தின போது சி.இ.ஓ மட்டும்தான் இருந்திருக்கிறார். பதிவேட்டில் தனது பெயர் ஆனந்த், கூத்தாடிவயல் என்றும் போலியான செல்போன் நம்பரையும் கொடுத்திருக்கிறார் அந்த இளைஞர். சில தினங்களாகவே சுபாஷினியையும், அலுவலகத்தையும் நோட்டமிட்டு யாருமில்லாத நேரத்தில் திட்டமிட்டே நகையைக் கொள்ளையடிக்க அவர் வந்திருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது" என்றார்கள். தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் விவசாயிபோல அலுவலகத்துக்குள் புகுந்து சி.இ.ஓ-விடமே நகை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு