திருமுல்லைவாயல் அருகே அயப்பாக்கம், அய்யப்பன் நகர், ஓம் சக்தி தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ (34). ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி அபிராமி (32). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பாக்கியராஜின் நண்பர் பிரதீப் (30). ஆட்டோ டிரைவர். பாக்கியராஜும் பிரதீப்பும் அதே பகுதியிலுள்ள ஒரு சாலையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர்.

மது அருந்திக்கொண்டிருந்த இருவரையும் போலீஸார் பிடித்தனர். அப்போது பாக்கியராஜ், `என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றால் பாட்டிலை உடைத்து தற்கொலை செய்துகொள்வேன்’ என மிரட்டினார். அதன்படி பீர்பாட்டில் ஒன்றை பாக்கியராஜ் போலீஸாரின் கண்முன்னால் உடைத்தார். மதுபோதையில் பாக்கியராஜ் அப்படிச் செய்கிறார் என போலீஸார் கருதினாலும், அதைத் தடுக்க முயன்றனர். அந்தச் சமயத்தில் பீர்பாட்டிலை எடுத்து தன்னுடைய கழுத்தில் பாக்கியராஜ் குத்திக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தாலும், பாக்கியராஜை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால், பாக்கியராஜ் உயிரிழந்தார். இது குறித்து திருமுல்லைவாயல் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாக்கியராஜின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து பாக்கியராஜ் மரணம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இந்த நிலையில், ஆட்டோ டிரைவர் பாக்கியராஜின் மரணத்துக்கு இன்னொரு காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது, ஆட்டோ டிரைவர் பாக்கியராஜ் வைத்திருந்த ஐ போன் ஒன்றை போலீஸார் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால் போலீஸாருக்கும் ஆட்டோ டிரைவர் பாக்கியராஜுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அருகில் கிடந்த பீர்பாட்டிலை எடுத்து கழுத்தை பாக்கியராஜ் அறுத்துக்கொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் அந்தத் தகவலை போலீஸார் உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணைக்குப் பிறகுதான் பாக்கியராஜ் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.