Published:Updated:

தஞ்சை: `சிலவற்றைச் சொல்ல முடியவில்லை!' -போலீஸாரால் சித்ரவதைப்பட்ட ஆட்டோ டிரைவர்

ஆட்டோ டிரைவர்
ஆட்டோ டிரைவர்

மகேந்திரன் என்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்னை ஆட்டோவை விட்டி இறங்கச் சொன்னதுடன், ஆட்டோவிலிருந்த விவசாயியையும், `கீழே இறங்கு... இல்லை வாழை இலைகளைத் தள்ளிவிடவா' எனக் கேட்டார்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகனை போலீஸார் அடித்து கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருவையாறில் காய்கறி ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவருக்கு போலீஸாரால் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது.

போலீஸ் ஸ்டேஷன்
போலீஸ் ஸ்டேஷன்

ஆட்டோ டிரைவர் குமரகுருவிடம் பேசினோம். ``என்னோட சொந்த ஊர் திருப்பந்துருத்தி. நான் தஞ்சாவூர் தெற்குவீதியில் உள்ள ஸ்டாண்டில் இருந்தபடி ஆட்டோ ஓட்டி வருகிறேன். தினமும் எனக்கு 600 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அதை வைத்து என் குடும்பத்தை நடத்தி வருகிறேன். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஆட்டோ ஓட்ட முடியவில்லை, இதனால் வருமானத்துக்கும் வழியில்லாமல் போனது.

எங்க பகுதியில் வாழை, கீரை, காய்கறிகள் விளைச்சல் இருக்கும். அதனை அறுவடை செய்யும் விவசாயிகள் அவற்றை வயலில் இருந்து கடைத் தெருவிற்கு ஏற்றி வருவதற்கு ஆட்டோவை பயன்படுத்துவார்கள். நான் கடந்த ஏப்ரல் மாதம் திருபந்துருத்தி ஊராட்சியில் காய்கறி ஏற்றுவதற்கான வாகன பாஸ் வாங்கி கொண்டு ஒரு வாரத்திற்கு மேலாக வாழை இலை, காய்கறி, வாழைத்தார் உள்ளிட்டவற்றை ஏற்றி வந்தேன். அதில் தினமும் எனக்கு 100 ரூபாய் கிடைத்தது.

காவல் நிலையத்தில்  ஆட்டோ
காவல் நிலையத்தில் ஆட்டோ

இந்தநிலையில் ஏப்ரல் 26-ம் தேதி திருப்பந்துருத்தியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நடுக்காவேரி பகுதிக்குச் சென்று வாழைத்தார், வாழை இலை, கீரை உள்ளிட்டவற்றை விவசாயியுடன் சேர்த்து ஏற்றி வந்தேன். அப்போது நடுக்காவேரி காவல் நிலைய போலீஸார் மேட்டுச்சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

மகேந்திரன் என்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், என்னை ஆட்டோவை விட்டு இறங்கச் சொன்னதுடன், விவசாயியையும், `கீழே இறங்கு... இல்லை வாழை இலைக் கட்டுகளை கீழே தள்ளிவிடவா' எனக் கேட்டார். `சார் நான் காய்கறி ஏற்றுவதற்கான பாஸ் வைத்திருக்கிறேன். வெளியில் எங்கும் செல்லவில்லை. வயலில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவர் வீட்டுக்குத்தான் செல்கிறேன்' எனச் சொன்னேன்.

சாத்தான்குளம்: `ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸா... கொரோனா தன்னார்வலர்களா?’ - புதிய சர்ச்சை

எதையுமே காதில் வாங்காத மகேந்திரன், `இங்கிருந்து போ... இல்லை அடித்துவிடுவேன்' என்று தகாத வர்த்தைகளால் திட்டியதுடன் ரமேஷ் என்ற போலீஸிடம் வண்டியை ஸ்டேஷனுக்கு எடுத்துகிட்டு என்னையும் அழைத்துக்கொண்டு போகச் சொன்னார். ரமேஷ் ஆட்டோவை சரியாக ஓட்டவில்லை என்பதால் நானே ஓட்டுகிறேன் என்றேன். ஆனால், அவர் கேட்கவில்லை.

கொஞ்சம் தூரம் சென்றதும் 6 அடி ஆழம் உள்ள பெரிய பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்துவிட்டது. இதனால் ஆட்டோவுக்கும் சேதம் ஏற்பட்டது. உடனே நான் என் செல்போனை எடுத்தேன். அதற்குள் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சிலர், என் செல்போனை பிடுங்கினர். எனக்குக் கோபம் வந்துவிட்டது. `நான் ஆட்டோவை ஓட்டுகிறேன் எனச் சொன்னேன். நீங்க கேட்கவில்லை நான் என்ன கடத்தலா செய்தேன்... காய்கறிதானே ஏற்றி வந்தேன். என்னை எதற்கு ஏதோ குற்றவாளிபோல் நடத்துகிறீங்க... ஆட்டோவும் சேதமாகிவிட்டது. இப்ப செல்போனையும் பிடுங்கி வச்சுக்கிறீங்க' எனக் கேட்டேன்.

பாஸ்
பாஸ்

உடனே, போலீஸையே எதிர்த்து பேசுறியா எனக் கூறி என் சட்டை பிடித்தனர். உடனே நான் அமைதியாகிவிட்டேன். அதன் பிறகு அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோவை தூக்கிய பிறகு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். ஸ்டேஷனுக்கு சென்றதும் ரமேஷ், பார்த்திபன், ஊர்காவல்படையைச் சேர்ந்த போலீஸ் என மொத்தம் 5 போலீஸார் என்னை, வாடா போடா எனத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் சுற்றி நின்றுகொண்டு லத்தியால் அடித்தனர்.

`எனக்கு சுகர் இருக்கு, சாப்பாடு வேற சாப்பிடலை... கீழே விழுந்ததில வேற அடிப்பட்டிருக்கு... என்னை அடிக்காதீங்க' எனக் கெஞ்சினேன். எதையும் கேட்காத அவர்கள் திருடனை அடிப்பதுபோல் அடித்தனர். அத்துடன் `இந்த ஜென்மத்துல ஆட்டோவை எடுக்க முடியாதபடி செய்கிறோம் பார்' என்றனர். `செல்போனைக் கொடுங்க' எனக் கேட்டதற்கும் தரவில்லை.

Exclusive Evidence: `சாத்தான்'குள காக்கிகளின் கொலைப் பட்டியல்? Custodial Death | Elangovan Explains

ஆட்டோ பள்ளத்தில் விழுந்தவிட்ட ஆத்திரத்தில் கோபமாகப் பேசியதை தவிர, வேறு எந்த தவறும் நான் செய்யவில்லை. ஆனால், ஆட்டோவை வேகமாக ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிந்தனர். இது எனக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது.

தற்போது ஆட்டோ ஸ்டேஷனில் நிற்கிறது. திருவையாறு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 1 லட்ச ரூபாய்க்கான ஜாமீன் கொடுத்து ஆட்டோவை எடுத்துச் செல்ல நீதிமன்றத்தில் உத்தரவிட்டனர். அதற்குரிய வசதியும் வாய்ப்பும் இல்லாத்தால் ஆட்டோவை எடுக்க முடியவில்லை. இனி எடுக்க முடியுமா என்றும் தெரியவில்லை.

ஆட்டோ டிரைவர் குமரகுரு
ஆட்டோ டிரைவர் குமரகுரு

ஆட்டோ ஓடினாதான் என் குடும்பமே ஓடும். அது நின்றுவிட்டதால் எனது குடும்பமே முடங்கிவிட்டது. டீ குடிக்கக்கூட வழியில்லாத வகையில் என் நிலை இருக்கிறது. சாப்பாட்டிற்குகூட கையேந்துகிற நிலை ஏற்பட்டுவிட்டது. பல விஷயங்களை சொல்வதற்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. கடந்த 2 மாதமாக எனக்கான வலியை அதிகப்படுத்தியுள்ளது. இதனை தாங்க முடியாத நான் 10 தினங்களுக்கு முன் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தேன் என் மனைவிதான் என்னை காப்பாத்தினாள். எனக்கு ஆட்டோ கிடைத்துவிட்டால் போதும். எல்லாத்தையும் மறந்துட்டு என் வாழ்கையை புதுசா தொடங்கிடுவேன்" என்றார் கண்ணீருடன்.

இதுகுறித்து, தற்போது பாப்பாநாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனிடம் பேசினோம். ``ஊரடங்கு அமலில் இருக்கிற நேரத்தில் தனிமைப்படுத்தபட்ட பகுதியில் இருந்து வெளியே வந்தார். போலீஸ் பேரிகார்டர் வைத்து பணியிலிருந்தபோது ஆட்டோவை போலீஸ் மீது மோதுகிற மாதிரி வேகமாக வந்தார்.

சாத்தான்குளம்: அதிர்ச்சி ஆடியோ; சிக்கிய சிசிடிவி காட்சி! - கைதாகும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்?

இப்படி தடுப்பு அமைத்தால் எப்படி வண்டி ஓட்டுவது என எங்களிடம் சத்தம் போட்டார். அனுமதிக்கப்பட்ட பகுதியைத் தவிர பாஸை வைத்துக்கொண்டு மற்ற இடங்களுக்கும் சென்று வந்தார். அதற்காக அவர் மீது வழக்கு பதிந்ததுடன் வண்டியை பறிமுதல் செய்தோம். அவரை போலீஸ் யாரும் அடிக்கவில்லை. உரிய ஆவணத்தைக் காண்பித்து ஆட்டோவை எடுத்து செல்ல கூறியிருந்தோம். அதனை கொடுத்து அவர் ஆட்டோவை எடுத்துச் செல்லவில்லை. இது பழைய சம்பவம். நாங்க எங்க பணியைத்தான் செய்தோம்" என்றார் இயல்பாக.

அடுத்த கட்டுரைக்கு