Published:Updated:

சென்னை:`என் மனைவி அசிங்கப்படுத்திவிட்டாள்!' - தம்பியைக் கொலை செய்த ஆட்டோ டிரைவர்

கொலை செய்யப்பட்ட செந்தில்
கொலை செய்யப்பட்ட செந்தில்

`என் மனைவி என்னை அசிங்கமாகத் திட்டியதோடு, செருப்பால் அடித்ததாள். அதற்குக் காரணமான தம்பியைக் கொலை செய்தேன்' என்று ஆட்டோ டிரைவர் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர், லாலா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்திருக்கும் புகார் மனுவில் கூறியிருப்பதாவது. ``நான் பெட்டிக் கடை நடத்திவருகிறேன். ரேணுகா என்பவரை அவரின் கணவர் வீரப்பன் இறந்த பிறகு 35 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டேன். ரேணுகாவுக்கு பழனி (38), செந்தில்குமார் (36) என இரண்டு மகன் உள்ளனர். பழனி, மரியாள் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமாருக்கு கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்துவைத்தோம். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

கொலைக்குப் பயன்படுத்திய கல்
கொலைக்குப் பயன்படுத்திய கல்

அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்துவந்தோம். பழனியின் மனைவி மரியாளுக்கும் செந்தில்குமாருக்கும் தவறான நட்பு இருந்தது. அதனால் மனவருத்தத்தில் இருந்த செந்தில்குமாரின் மனைவி தற்கொலை செய்துகொண்டார். பழனிக்கும் செந்தில்குமாருக்கும் அடிக்கடி சண்டை வரும். பழனியின் மனைவி மரியாள், கோபித்துக்கொண்டு தன்னுடைய அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகும் மரியாளுக்கும் செந்தில்குமாருக்கும் பழக்கம் தொடர்ந்துள்ளது.

30.8.2020-ல் பழனிக்கும் செந்தில்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பழனியை செந்தில்குமார் பிடித்துக்கொள்ள மரியாள், தகாத வார்த்தைகளால் திட்டியதோடு செருப்பால் அடித்துள்ளார். அதனால், பழனிக்கு செந்தில்குமார் மீதான கோபம் அதிகமானது. `என்றைக்கு இருந்தாலும் செந்தில்குமாரைக் கொல்லாமல் விடமாட்டேன்' என்று பழனி கூறிவந்தார். இந்தச் சமயத்தில் கடந்த 1-ம் தேதி இரவு 11:15 மணியளவில் நான் கடையை மூடிவிட்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன்.

எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்

செந்தில்குமார் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது பெரிய கல்லை தூக்கிக்கொண்டு ஓடி வந்த பழனி, வீட்டுக்குள் சென்று அதைச் செந்தில்குமாரின் தலையில் போட்டுவிட்டான். செந்தில்குமாரின் அலறல் சத்தம் கேட்டு நான் வீட்டுக்குள் சென்றேன். அப்போது செந்தில்குமார், ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்துபோனான். என்னைத் தள்ளிவிட்டுவிட்டு பழனி ஓடி விட்டான். கொலைக்குப் பயன்படுத்திய பெரிய கல், செந்தில்குமாரின் தலை அருகிலேயே கிடந்தது. உடனடியாக நான் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தேன். செந்தில்குமாரைக் கொலை செய்த பழனிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து, செந்தில்குமாரின் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார். பின்னர் தலைமறைவாக இருந்த பழனியை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது பழனி, போலீஸாரிடம் ``எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தீ விபத்தில் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதைத் தனக்குச் சாதகமாக செந்தில்குமார் பயன்படுத்திக் கொண்டார். காதலித்து திருமணம் செய்துகொண்ட என் மனைவி மரியாளும் எனக்கு துரோகம் செய்துவிட்டாள். சில தினங்களுக்கு முன்னர் என் தம்பி கண்முன்னால் என்னுடைய மனைவி என்னை அசிங்கமாகத் திட்டியதோடு, செருப்பால் அடித்தாள். அதனால்தான் தம்பி என்றுகூடப் பாராமல் செந்தில்குமாரைக் கொலை செய்தேன்.’’

பழனி
பழனி
சென்னை: `நான்தான் ஹவுஸ் ஓனர்’ - வாடகைக்குக் குடியிருந்தவர்கள் அதிர்ச்சி... மூவரால் ஏமாந்த 100 பேர்

இது குறித்து மயிலாப்பூர் போலீஸார் கூறுகையில், ``செந்தில்குமார், ஆட்டோ டிரைவராக இருக்கிறார். அவருக்கும் அண்ணன் மனைவி மரியாளுக்கும் ஏற்பட்ட தவறான நட்பே, இந்தக் கொலைக்கு முக்கியக் காரணம். மரியாளிடம் விசாரணை நடத்தியிருக்கிறோம். பழனி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். பிரேத பரிசோதனைக்குப் பிறகு செந்தில்குமாரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட பழனியும் ஆட்டோ ஓட்டிவருகிறார். விசாரணையில் இன்னொரு முக்கியத் தகவல் கிடைத்தது. செந்தில்குமாரும் மரியாளும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பழனிக்கு அனுப்பி அவரை வெறுப்பேற்றியிருக்கின்றனர். அதுவும் பழனிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.

அண்ணியுடன் ஏற்பட்ட தவறான நட்பால், ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு