Published:Updated:

சென்னை: ஆயிரம் ரூபாய்க்காக நடந்த கொலை! - துப்பு துலங்கிய பின்னணி

கொலை
கொலை ( Representational Image )

சென்னையில் கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் போதையிலிருந்த ஆட்டோ டிரைவர், நண்பனைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு எஸ்கேப்பாகியுள்ளார்.

சென்னை வளசரவாக்கம், ராமலிங்கவள்ளார் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர் (40). இவரின் மனைவி ரோகினி (38). இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கிஷோர்குமார் (19), மீர்தூன்வேல் (13) என 2 மகன்கள் உள்ளனர். வேலைக்கு எதுவும் செல்லாமல் தனசேகர், மதுவுக்கு அடிமையானார். அதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு ரோகினி, தன்னுடைய அம்மா வீட்டுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சென்றுவிட்டார்.

கொலை
கொலை
representational image

எப்போதாவது மனைவி, மகன்களை தனசேகர் பார்க்கச் செல்வார். அப்போதும் மனைவியிடம் செலவுக்குப் பணம் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2.9.2020-ல் மனைவி, மகன்களைப் பார்க்க தனசேகர் வளசரவாக்கத்துக்குச் சென்றுள்ளார். அங்கு மகன்களிடம் பேசிவிட்டு பிறகு தன்னுடைய வீட்டுக்குச் சென்றுள்ளார். 6.9.2020-ல் அசோக்நகரில் விக்டர் என்பவரின் வீட்டில் தனசேகர், அவரின் நண்பர் வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அதன்பிறகு ரமேஷ் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மறுநாள் காலையில் விக்டர், வந்து பார்த்தபோது தனசேகர், பேச்சு மூச்சு இன்றி மல்லாந்த நிலையில் கட்டிலில் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து அசோக்நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையிலான போலீஸார் தனசேகரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனசேகரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் மனைவி ரோகினி, அசோக்நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது தனசேகருடன் மது அருந்திய ரமேஷ் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மது பாட்டில்கள்
மது பாட்டில்கள்
representational image

இந்தநிலையில் வழக்கறிஞர் ஒருவர், ரமேஷை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்போது போலீஸாரிடம், தனசேகரை நான்தான் நைலான் கயிற்றால் நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதன்பேரில் போலீஸார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். பின்னர் ரமேஷிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தனசேகர், ரமேஷ், விக்டர் ஆகிய மூன்று பேர் நண்பர்கள். அசோக்நகர், 7-வது அவென்யூவில் உள்ள விக்டர் வீட்டில் மது அருந்துவது வழக்கம். சம்பவதன்று ரமேஷ், தனசேகர் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது, போதையிலிருந்த தனசேகர், தன்னிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய ரமேஷிடம், பணத்தைத் திரும்ப கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ், பிறகு தருகிறேன் என்று கூறியுள்ளார். அதனால் தனசேகர், அசிங்கமாக ரமேஷைத் திட்டியுள்ளார். போதையிலிருந்த ரமேஷ், அருகில் கிடந்த நைலான் கயிற்றை எடுத்து தனசேகரின் கழுத்தை நெரித்துள்ளார். அதில் மூச்சு திணறி தனசேகர் இறந்ததும் ரமேஷ் தப்பி ஓடிவிட்டார். தற்போது ரமேஷைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

கொலை
கொலை
representational image
சென்னை: தாயைக் கத்தியால் குத்திய மகன்! - பாசத்தை மறைத்த சொத்து

தனசேகரின் மனைவி ரோகினி கொடுத்த புகாரில், ``வேலைக்கு எங்கும் செல்லாத தனசேகர், நண்பர்களுடன் மது அருந்திவந்தார். அதனால் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டேன். தனசேகரனுக்கு சொந்தமாக தி.நகரில் வீடு உள்ளது. அந்த வீட்டின் கீழ்பகுதியில் உள்ள கடையை வாடகைக்கு விட முடிவு செய்து அட்வான்ஸ் வாங்கினேன். அதற்கு தனசேகரின் அப்பா எதிர்ப்பு தெரிவித்தார். அதனால்தான் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன். என் கணவர் தனசேகர் மரணம் குறித்து எனக்கு தகவல் கிடைத்ததும் அங்குச் சென்று பார்த்தேன். அப்போது அவரின் கழுத்தில் காயங்கள் உள்ளன. எனவே கணவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் ரூபாய் கடனைத் திரும்பி கேட்ட தகராறில் நண்பனை ஆட்டோ டிரைவர் கொலை செய்த சம்பவம் அசோக்நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு