Published:Updated:

ஃப்ரைடு ரைஸில் பாய்சன்; துப்பட்டாவால் கழுத்து நெரிப்பு- நள்ளிரவில் கொலை செய்த தோழிகள்?

எஸ்.மகேஷ்

`என் உயிர் நண்பன் துரோகம் செய்துவிட்டான்...' என நள்ளிரவில் உளறிய ஆட்டோ டிரைவர், மர்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்தார்.

நாகராஜ்
நாகராஜ்

சென்னை நெற்குன்றம், சக்திநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி காயத்ரி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நாகராஜும் சக்திநகர், 19-வது தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகேந்திரனும் உயிர் நண்பர்கள். மகேந்திரனின் மனைவி பானு. காயத்ரியும் பானுவும் தோழிகள்

காயத்ரி
காயத்ரி

நாகராஜ் வீட்டுக்கு அடிக்கடி மகேந்திரன் வருவார். இதில் காயத்ரிக்கும் மகேந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், நாகராஜுக்கும் காயத்ரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு காயத்ரி தன்னுடைய சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டார். கடந்த 10 நாள்களுக்கு முன், காயத்ரியிடமும் நாகராஜிடமும் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், இருவரும் சேர்ந்து வாழ முடிவுசெய்தனர்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதுபோல நாகராஜ்- காயத்ரி நட்புகுறித்து மகேந்திரன் பேசியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று, நாகராஜுக்கும் காயத்ரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர்,வீட்டுக்குள் நாகராஜின் காது, மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் அவர் இறந்துகிடப்பதாக கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையிலான போலீஸார் வந்து நாகராஜின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சந்தேக மரணம் என்ற பிரிவின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தநிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

நாகராஜ்
நாகராஜ்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நாகராஜும் காயத்ரியும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 10 நாள்களுக்கு முன்தான் இருவரும் சமரசமாகியுள்ளனர். நண்பன் துரோகம் செய்துவிட்டான் என்றும் அவனைக் கொலை செய்வேன் என்றும் நாகராஜ், போதையில் உளறியதாக காயத்ரி எங்களிடம் தெரிவித்துள்ளார். இந்தச் சமயத்தில்தான், மர்மமான முறையில் நாகராஜ் இறந்துள்ளார். நாகராஜ் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே நாகராஜ் மரணத்துக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.

நாகராஜ் மரணம்குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் காயத்ரி, மகேந்திரனின் மனைவி பானு ஆகியோரிடம் விசாரணை நடந்துவருகிறது. அவர்கள் கூறிய தகவல்களை போலீஸார் வாக்குமூலமாகப் பதிவுசெய்துள்ளனர். இந்த நிலையில், நாகராஜின் மரணம்குறித்து அவரின் அம்மா மதுரம்மா, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர், நம்மிடம், ``என் மகன் நாகராஜும் காயத்ரியும் சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்திவந்தனர். இந்தச் சமயத்தில் ஆட்டோ டிரைவர் மகேந்திரனின் நட்பு நாகராஜுக்கு கிடைத்தபிறகுதான், குடும்பத்தில் பல பிரச்னைகள் ஏற்பட்டன. காயத்ரியின் நடவடிக்கைகளும் மாறின.

நாகராஜ்
நாகராஜ்

இந்தச் சமயத்தில்தான், நாகராஜுக்கு காயத்ரி குறித்து ஒரு தகவல் தெரியவந்தது. காயத்ரிக்கு தன்னால் முடிந்த புத்திமதிகளை நாகராஜ் கூறினார். அதன்பிறகும் காயத்ரி மனம்மாறவில்லை. நாகராஜுக்கு ஃப்ரைடு ரைஸில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகும் நாகராஜின் உயிர் பிரியாததால், துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்துள்ளனர். நாகராஜ் இறந்த சமயத்தில் காயத்ரி எங்கு இருந்தார் என்ற ஒரே கேள்விக்கு மட்டும் விடைகிடைத்தால் போதும், என் மகன் மரணத்துக்கு யார் காரணம் என்பது தெரிந்துவிடும். அநியாயமாக என் மகனைக் கொலை செய்துவிட்டனர்" என்று கதறினார்.

போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``நாகராஜ் கொலை செய்யப்பட்டதாக அவரின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் நாகராஜ் மரணத்துக்கான காரணம் தெரிந்துவிடும். இதற்கிடையில் நாகராஜ் மனைவி காயத்ரி, மகேந்திரனின் மனைவி பானு ஆகியோரிடம் விசாரித்தபோது, அவர்கள் சில முக்கியத் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

 நாகராஜ்
நாகராஜ்

மேலும், நாகராஜ் வீடு அமைந்திருந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவில் முக்கியத் தடயம் கிடைத்துள்ளது. சம்பவத்தன்று அதிகாலை, நாகராஜ் வீட்டிலிருந்து தலையை மூடியபடி ஒரு பெண் வேகமாக நடந்து செல்கிறார். அந்தப் பெண் யார் என்பதைக் கண்டறிந்துவிட்டோம். அவரிடம் விசாரித்தால் நாகராஜ் மரணத்துக்கான காரணம் தெரிந்துவிடும்" என்றார்.