Published:Updated:

`அம்மாவிடம் பழகாதே; எச்சரித்தும் கேட்காத ஆட்டோ டிரைவர்'- கொலை செய்த மகன்!

சென்னையில் அம்மாவுடன் பழகிய ஆட்டோ டிரைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட இடம்
ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட இடம்

சென்னை சிட்லபாக்கம் வேங்கை வாசல் பகுதியைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா (31). இவரின் அம்மா மெகபூபா. அன்சர் பாஷாவுக்கும் புளியந்தோப்பைச் சேர்ந்த பர்வீனுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அன்சர் பாஷாவுக்கும் பர்வீனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பர்வீன், குழந்தைகளோடு புளியந்தோப்பில் குடியிருந்துவருகிறார். அன்சர்பாஷா, விநாயகபுரத்தில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டிவந்தார்.

ஆட்டோ
ஆட்டோ

இந்நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த திருமணமான லட்சுமி (38) என்பவருடன் அன்சர் பாஷாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. இது லட்சுமியின் மகன் பெரிய அஜித்துக்குப் பிடிக்கவில்லை. அதனால் தன்னுடைய அம்மாவுடன் பழகுவதை நிறுத்தும்படி அன்சர்பாஷாவிடம் பெரிய அஜித் கூறினார். ஆனால், அதை அன்சர் பாஷா கேட்கவில்லை. அதன்காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இருவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அன்சர்பாஷாவைக் கொலை செய்ய பெரிய அஜித் திட்டமிட்டார். இந்தச் சமயத்தில் லட்சுமியுடன் அன்சர்பாஷா ராஜமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியான ரெட்ஹில்ஸ் ரோடு, ஸ்கூல் ரோடு சந்திப்பில் உள்ள வங்கியின் அருகில் ஆட்டோவில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இந்தத் தகவல் கிடைத்ததும் பெரியஅஜித் அவரின் கூட்டாளிகளோடு சம்பவ இடத்துக்கு வந்தார். அன்சர்பாஷாவுடன் பெரியஅஜித் தகராறு செய்தார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் ஆகியவற்றை கொண்டு அன்சர் பாஷாவை வெட்டினர்.

அன்சர் பாஷா
அன்சர் பாஷா

இதனால் அன்சர் பாஷா, ஆட்டோவைவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். அதை லட்சுமியும் அன்சர் பாஷாவின் அம்மா மெகபூபா ஆகியோர் அதிர்ச்சியோடு பார்த்தனர். தப்பி ஓடிய அன்சர் பாஷாவை வழிமறித்து வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த ராஜமங்கலம் போலீஸார் அன்சர் பாஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய பெரியஅஜித் மற்றும் அவரின் கூட்டாளிகளை போலீஸார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ``அன்சர் பாஷாவின் அம்மா மெகபூபா, அன்சர் பாஷாவின் பெண் தோழி லட்சுமி ஆகியோரின் கண் முன்னால் இந்தக் கொலை நடந்துள்ளது. அன்சர் பாஷாவைக் காப்பாற்ற அவர்கள் இருவரும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் பெரிய அஜித் தலைமையிலான கும்பல் கொலை செய்துவிட்டு தப்பிஓடிவிட்டது. இந்தக் கொலைச் சம்பவம், அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அன்சர் பாஷாவின் இடது பக்க பின்தலை, முகம் ஆகியவற்றில் வெட்டுக்காயங்கள் உள்ளன.

கொலை நடந்த இடத்தில் போலீஸ் விசாரணை
கொலை நடந்த இடத்தில் போலீஸ் விசாரணை

கடந்த 2017-ம் ஆண்டு அன்சர் பாஷாவுக்கும் பெரிய அஜித்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெரியஅஜித்தின் காதை அறுத்தது தொடர்பாக அன்சர்பாஷா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பழிவாங்க அன்சர்பாஷாவின் கைகளை பெரிய அஜித் கும்பல் வெட்டியது. இதுதொடர்பாகவும் வழக்கு நிலுவையில் உள்ளது. லட்சுமியுடன் அன்சர்பாஷா பழகியதே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெரியஅஜித், அவரின் சகோதரர் சின்னஅஜித் ஆகியோர் அஜித்தின் ரசிகர்கள். தற்போது சின்ன அஜித் சிறையில் உள்ளார்" என்றனர்.