Published:Updated:

சென்னை: `சமாதானமாக சென்றுவிடு என்றேன்; அதற்குள்...' - மகனின் மரணத்தால் கதறும் தந்தை

கொலை
கொலை ( Representational Image )

சென்னை மாங்காடு பகுதியில் ஆட்டோவும் பைக்கும் மோதிய தகராறில் டிரைவர் கொலை செய்யப்பட்டார்.

சென்னை ஐயப்பன்தாங்கல், பரணிபுத்தூர், சீனிவாசபுரம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். காவலாளியாக வேலை பார்த்துவருகிறார். இவரின் மகன் மாதவன் (19). இவர், 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாதவன், ஆட்டோவில் சென்றபோது கொளுத்துவாஞ்சேரியைச் சேர்ந்த சூர்யா என்பவர் பைக்கில் வந்திருக்கிறார். அப்போது பைக்கும் ஆட்டோவும் மோதிக்கொண்டன. அதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது சூர்யாவும் அவரின் நண்பர்களும் மாதவனிடம் சண்டை போட்டிருக்கிறார்கள்.

கொலை
கொலை
representational image

இந்தநிலையில் கொளுத்துவாஞ்சேரி சுடுகாடு பகுதியில் மாதவன், ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். இது குறித்து தகவலறிந்த மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மாதவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி (IPC 307) என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாதவனைக் கொலை செய்ய முயன்றதாக சூர்யாவையும் அவரின் நண்பர்கள் சரவணன் (29), ராஜேஷ் (24), உள்ளிட்ட ஐந்து பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் சிகிச்சை பெற்றுவந்த மாதவன் உயிரிழந்தார். அதனால் கொலை முயற்சி வழக்கை போலீஸார் கொலை வழக்காக மாற்றினர்.

மாதவனின் அப்பா சரவணன் மாங்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ``ஆட்டோ ஓட்டிவரும் என் மகன் மாதவனுக்கும் சூர்யா (19) என்பவருக்கும் வாகனங்கள் மோதியதில் தகராறு இருந்துவந்தது. அதனால், `என்றைக்கு இருந்தாலும் எங்கள் கையால்தான் உனக்கு சாவு’ என்று கூறி அடிக்கடி போனில் சூர்யா தரப்பு மிரட்டி வந்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னர் சூர்யாவும்ம் அவரின் நண்பர்களும் என் வீட்டுக்கு வந்தனர். அப்போது மாதவனைப் பார்த்து `உன்னை காலி செய்யாமல் விட மாட்டேன்’ என்று மிரட்டிவிட்டுச் சென்றனர். உடனே நான், `சூர்யாவிடம் மன்னிப்புக் கேட்டு சமாதானமாகச் சென்று விடு’ என்று மாதவனிடம் கூறினேன்.

சென்னை டு ஆந்திரா புல்லட் பயணம்! - ஐடி நிறுவன ஊழியர் கஞ்சா வியாபாரியாக மாறியது எப்படி?
எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்

6.9.2020-ல் சரவணன் குடும்பத்தோடு காட்டுப்பாக்கம் அம்மன் நகரிலுள்ள மாமியார் வீட்டுக்குச் சென்றேன். அப்போது, மாதவன், நண்பர்களைச் சந்திக்கச் சென்றார். இந்தச் சமயத்தில் மாமா மகன், ராஜ் என்பவர் எனக்கு போன் செய்து கொளுத்துவாஞ்சேரி சுடுகாடு அருகே மாதவன் ரத்தக்காயங்களுடன் சுயநினைவில்லாமல் கிடப்பதாகக் கூறினார். உடனே சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது மாதவனின் வலது முழங்கால், இடது குதிக்கால், வலது கை, தலை, காது, மூக்கு, வாய் ஆகிய இடங்களில் வெட்டுக் காயங்களுடன் கிடந்தார். அந்த இடத்தில் உடைந்த பீர் பாட்டில்கள் ரத்தக்கறையுடன் சிதறிக் கிடந்தன. இதையடுத்து மாதவனை மீட்டு பூந்மல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். பிறகு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி மாதவன் உயிரிழந்தார். எனவே, என் மகனை சூர்யா தரப்பு தாக்கியிருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மகன் இறந்த தகவல் கிடைத்ததும் சரவணன், `சமாதானமாகச் சென்றுவிடு என்று மாதவனிடம் கூறினேன். ஆனால் அதற்குள் அவனைப் பாவிபயல்கள் கொன்னுட்டாங்க' என்று கதறி அழுதுள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.

வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு