Election bannerElection banner
Published:Updated:

சென்னை: 4 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணனுக்காகப் பழிவாங்கிய தம்பி! - டிரைவர் கொலையில் திடீர் திருப்பம்

 கொலை
கொலை

அவமானத்தில் அண்ணன் தற்கொலை செய்துகொண்டததால் அதற்குக் காரணமான ஆட்டோ டிரைவரை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தம்பி பழிவாங்கியிருக்கிறார்.

சென்னை திருவல்லிக்கேணி, வெங்கடேசபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் நவீன் (28). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 23.4.2021-ம் தேதி இரவு பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது மூன்று பேர் அங்கு வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நவீனைக் கத்தியால் குத்தினர். அவர்களிடமிருந்து தப்பிக்க நவீன் வீட்டிலிருந்து தெருவுக்கு ஓடிவந்தார். ஆனால் அவரை விரட்டிக்கொண்டு மூன்று பேர் வந்தனர். நவீனின் அலறல் சத்தம் கேட்டு அவரின் சகோதரர் வினோத், வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அப்போது தம்பியை மூன்று பேர் கத்தியோடு விரட்டிக்கொண்டு வருவதைப் பார்த்த வினோத், சத்தம் போட்டார். அதனால் பொதுமக்கள் அங்கு கூடினர்.

கொலை
கொலை

அதைப் பார்த்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அதன் பிறகு நவீனை மீட்ட வினோத் அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இது குறித்து வினோத் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 341, 307 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``வாடகை ஆட்டோ ஓட்டிவந்த நவீன், அதே தெருவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். சம்பவத்தன்று இரவு அந்த வீட்டுக்கு நவீன் சென்றிருக்கிறார். அப்போது அந்த வீட்டுக்குள் நுழைந்த மூன்று பேர் நவீனைக் கத்தியால் குத்தியிருக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பி வெளியில் ஓடி வந்த நவீனை, அவரின் சகோதரர் வினோத் காப்பாற்றியிருக்கிறார். வினோத் அளித்த புகாரில் நவீனைக் கத்தியால் குத்தியது திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கார்த்திக் (28), பிரகாஷ் (28), பழனி (49) என்று குறிப்பிட்டிருந்தார்.

வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் மனைவிக்கு பாலியல் டார்ச்சர் - அ.ம.மு.க நிர்வாகி கொடூரக் கொலை
கைது
கைது

அதன் அடிப்படையிலும், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையிலும் விசாரணை நடத்தினோம். பின்னர் பழனி, கார்த்திக் பிரகாஷ் ஆகியோரிடம் விசாரித்தோம். விசாரணையில் அவர்கள் நவீனைக் கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டனர். இந்தச் சமயத்தில் 26-ம் தேதி நவீன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றியிருக்கிறோம்.

பழனியின் சகோதரர் நாகலிங்கம். இவருக்கும் நவீனுக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துவந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நாகலிங்கத்தை நவீன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவமானத்தில் நாகலிங்கம் தற்கொலை செய்திருக்கிறார். அதனால் நாகலிங்கம் மரணத்துக்குக் காரணமான நவீனைக் கொலை செய்ய பழனி தன்னுடைய கூட்டாளிகளுடன் திட்டமிட்டிருக்கிறார். இதையடுத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நவீன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கார்த்திக், பிரகாஷ் ஆகியோர் மீது ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றனர்.

பழிக்குப் பழியாக ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு