Published:Updated:

“உன் மக எவனோட ஓடிப்போனானு தெரிஞ்சுக்கிட்டு வா!”

தீக்குளித்த ஆட்டோ டிரைவர்
பிரீமியம் ஸ்டோரி
தீக்குளித்த ஆட்டோ டிரைவர்

அவமானப்படுத்திய காக்கிகள்... தீக்குளித்த ஆட்டோ டிரைவர்

“உன் மக எவனோட ஓடிப்போனானு தெரிஞ்சுக்கிட்டு வா!”

அவமானப்படுத்திய காக்கிகள்... தீக்குளித்த ஆட்டோ டிரைவர்

Published:Updated:
தீக்குளித்த ஆட்டோ டிரைவர்
பிரீமியம் ஸ்டோரி
தீக்குளித்த ஆட்டோ டிரைவர்
காவல் நிலையங்களில் புகார் கொடுக்கச் செல்பவர்கள் சந்திக்கும் அவமான அனுபவங்களைக்கொண்டு, விதவிதமாக ஆயிரம் எபிசோடுகள் எழுதலாம். அதிலும், ‘மகளைக் காணவில்லை’ என்று புகார் கொடுக்கச் செல்பவர்களை வன்சொற்களால் போலீஸ் வதைக்கும் விதம் சகிக்க இயலாதது. அப்படியொரு சம்பவம்தான் சென்னை சேலையூரிலும் நிகழ்ந்திருக்கிறது. ‘மகளைக் காணவில்லை’ என்று புகார் அளித்து, மூன்று நாள்களாகியும்கூட எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போலீஸாரின் அலட்சியத்தாலும் அவமானத் தாலும், காவல் நிலைய வாசலிலேயே தீக்குளித் திருக்கிறார் சேலையூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சீனிவாசன்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கணவனை இழந்த துக்கத்தில், மூலையில் முடங்கிக்கிடந்த சீனிவாசனின் மனைவி ரம்யாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் பேசினோம். ‘‘டிசம்பர் 2-ம் தேதி நைட், என்னோட 13 வயசு மக, தூங்காம வீட்ல டி.வி பார்த்துக்கிட்டிருந்தா. கோவமான என் வீட்டுக்காரர், டி.வி-யை ஆஃப் பண்ணிட்டு தூங்கப் போயிட்டார். காலைல அஞ்சு மணிக்குப் பார்த் தப்போ, மகளைக் காணோம்’’ என்றவர், மேற்கொண்டு பேச முடியாமல் கதறி அழ, ரம்யாவைத் தேற்றிய அவரின் அம்மா மலர், மேற்கொண்டு நடந்ததைச் சொன்னார்...

“உன் மக எவனோட ஓடிப்போனானு தெரிஞ்சுக்கிட்டு வா!”

‘‘அங்க இங்கனு தேடிட்டு, சேலையூர் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம். மூணு நாளா என் மருமகன் அலைஞ்சும், ஒண்ணும் தகவல் இல்லை. 6-ம் தேதி அன்னிக்கு ஸ்டேஷன்ல கேட்கப்போனவர், அங்கேயே பெட்ரோல் ஊத்தி பத்த வெச்சுக் கிட்டார். ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போயும் பிரயோஜன மில்லை, துடிதுடிச்சு இறந்துட்டார். இப்ப குடும்பமே நடுத்தெருவுல நிக்குது. ஒரு சாவு ஆனப்புறம்தான் போலீஸ் வேகமா ஸ்டெப் எடுத்து, 9-ம் தேதி மேட்டுப்பாளையத்துலருந்து என் பேத்தியையும், அந்தப் பையனையும் அழைச்சுக்கிட்டு வந்திருக்காங்க. இதை மொதல்லயே பண்ணியிருந்தா என் மருமவன் உசுரு போயிருக்காது’’ என்று அவரும் விசும்பலோடே பேசினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ‘இந்தியன் மக்கள் மன்ற’ தலைவர் வாராகி, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் சேலையூர் சரக உதவி கமிஷனரிடம் மனு கொடுத்திருக்கிறார். அவரிடம் பேசினோம். ‘‘ஆட்டோ டிரைவர் சீனிவாசனோட இந்த முடிவுக்கு, சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்தான் காரணம். எடுத்த எடுப்புலயே இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ‘உன் மக யாரோட ஓடினா? பொண்ணை வளர்க்கத் தெரியாம வளர்த் துட்டு... இங்க வந்து எங்க உயிரை வாங்கறே’னு ஆரம்பிச்சு ஆட்டோ டிரைவர் சீனிவாசனை அவமானப்படுத்துற வகையில பேசியிருக்காரு. அதனால, புகார் கொடுத்த ஆட்டோ டிரைவர் மனமுடைஞ்சிருக்காரு. அதுக்குப் பிறகும், தன்னோட மகள் பத்தின தகவல் ஏதும் கிடைச்சிருக்குதானு கேட்க இன்ஸ்பெக்டரைச் சந்திச்சிருக்காரு. ‘மொதல்ல உன் சுத்துவட்டாரத்துல தேடு... யார்கூட ஓடிப்போனானு விசாரிச்சுட்டு வா. நடவடிக்கை எடுக்குறேன்’னு இன்ஸ்பெக்டர் சொல்லியிருக்காரு.

சீனிவாசன்
சீனிவாசன்

6-ம் தேதி இன்ஸ்பெக்டரை ஆட்டோ டிரைவர் சந்திச்சப்ப, ‘எங்களுக்கு இதைவிட நெறைய வேலைங்க இருக்குது. உன் பொண்ணு யாரை இழுத்துட்டுப் போனானு தெரிஞ்சுக்கிட்டு வா. இல்லன்னா, அவளே ரெண்டு மூணு நாள்ல வீட்டுக்கு வந்துருவா’னு கோபத்தோட சொல்லி யிருக்காரு. மகளைக் காணலைனு துக்கத்துலயிருந்த ஆட்டோ டிரைவர், ‘மகள் கிடைக்கலைன்னா நானும் என் பொண்டாட்டியும் தற்கொலை பண்ணிக்குவோம்’னு சொல்லியிருக்காரு. அதற்கு இன்ஸ்பெக்டர், ‘மொதல்ல அதைச் செய்யி. பொண்ணை வளர்க்கத் தெரியாத உனக்கு அதுதான் சரி’னு சொல்லியிருக்காரு. அதுக்கு அப்புறம்தான் போலீஸ் ஸ்டேஷன் வாசல்லேயே பெட்ரோல் ஊத்திக் கிட்டு ஆட்டோ டிரைவர் சீனிவாசன் தற்கொலை செஞ்சுருக்காரு.

பெண்கள் மற்றும் குழந்தைங் களுக்கு எதிரா இழைக்கப்படும் குற்றங்களுக்கு, உடனடியா நடவடிக்கை எடுக்கணும்னு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருக்குது. 13 வயசு சிறுமியைக் காணலைனு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காம, மன உளைச்சல்ல சிறுமி யோட தந்தை தற்கொலை செஞ்சுக்கக் காரணமா இருந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மேல ‘கொலைக் குற்ற வழக்கு’ பதிவு செஞ்சு நடவடிக்கை எடுக் கணும். இது தொடர்பா நீதிமன்றத்துலேயும் வழக்கு தொடர இருக்கேன்.

ஆட்டோ டிரைவர் சீனிவாசன், காவல் நிலைய வாசல்லதான் பெட்ரோல் ஊத்திக் கொளுத்திக் கிட்டாரு. ஆனா, சீனிவாசன் மரணம் தொடர்பா அவரோட மனைவி ரம்யா கொடுத்த புகார்ல ‘சம்பவம் நடந்த இடம், சேலையூர் காமராஜர் சாலை, ஆர்.கே.ரெசிடென்ஸி’னு குறிப்பிடப் பட்டிருக்கு. இந்தச் சம்பவத்துலருந்து தப்பிக்க, போலீஸார் இப்படி மாத்தி எஃப்.ஐ.ஆர் பதிவு செஞ்சிருக்காங்க’’ என்றார் ஆதங்கமாக.

ரம்யா
ரம்யா

இது குறித்து சேலையூர் இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம் செல்போனில் பேசினோம். ‘‘ஆட்டோ டிரைவர் சீனிவாசன் புகார் கொடுத் ததும், நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டோம். சீனிவாசனின் மகளைக் கண்டுபிடித்துவிட்டோம்’’ என்றார். அவரிடம், ‘‘உங்கள்மீது புகார் அளிக்கப் பட்டிருக்கிறதே...’’ என்று கேட்டபோது, அதற்கு பதிலளிக்காமல் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

போலீஸாரின் அத்துமீறலுக்கு உதாரணமாக இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. சென்னை வடபழனி பேருந்து நிலையத்தில் இரவில் தனியாக நின்றுகொண்டிருந்த மருத்துவமனைப் பெண் ஊழியரிடம் எம்.ஜி.ஆர் நகர் தலைமைக் காவலர் ராஜு, பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். குடிபோதையில் இருந்த அவர் பொதுமக்களிடம் சிக்கி, இப்போது அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகியிருக்கிறார்.

காவல்துறையின் அதிகாரமும் ஆயுதங்களும் மக்களைக் காப்பதற்கு... கொல்வதற்கு அல்ல!