Published:Updated:

பூனை சகுனம்... உரசல் சவாரி... அனுசரணை பேச்சு!

ஆட்டோ ராணிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோ ராணிகள்

மூதாட்டிகளைக் குறிவைக்கும் ஆட்டோ ராணிகள்

பூனை சகுனம்... உரசல் சவாரி... அனுசரணை பேச்சு!

மூதாட்டிகளைக் குறிவைக்கும் ஆட்டோ ராணிகள்

Published:Updated:
ஆட்டோ ராணிகள்
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோ ராணிகள்
சமீபத்தில் ஒருநாள் காலை, பரபரப்பான நேரம்... சென்னை, தண்டையார்பேட்டையிலுள்ள வங்கியில் பென்ஷன் பணத்தை எடுத்துக்கொண்டு வயது முதிர்ந்த பெண்களான குப்பம்மாளும் மாலகொண்டம்மாவும் வெளியே வந்தார்கள். காலை வெயில் முகத்தில் அறைந்து, சுட்டெரிக்கவே... வங்கி வாசலில் நின்ற ஷேர் ஆட்டோவில் ஏறினார்கள். திடீரென்று மூன்று பெண்கள் எங்கிருந்துதான் வந்தார்கள் என்று தெரியவில்லை... விறுவிறுவென ஆட்டோவில் ஏறினார்கள். அதிலொரு பெண், ‘‘ஆயா... உங்க செயின் அறுந்துபோற மாதிரி இருக்கு பாருங்க...’’ என்று குப்பம்மாளிடம் கூறினார். அவரும் தடுமாற்றத்துடன், “ரொம்ப நன்றிம்மா” என்றபடி செயினைக் கழற்றித் தனது சுருக்குப்பையில் வைத்துக்கொண்டார். ஆட்டோவிலிருந்து இறங்கிய பிறகுதான் குப்பம்மாளின் சுருக்குப்பையிலிருந்த மூன்று பவுன் செயின் திருட்டுப்போயிருந்தது தெரிந்தது. மாலக்கொண்டம்மாவின் சுருக்குப்பையிலிருந்த பத்தாயிரம் ரூபாயையும் காணவில்லை. மூதாட்டிகள் இருவரும் விக்கித்துப்போனார்கள்! கதறி அழுதபடியே இருவரும் ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாள்களுக்குள் சத்யா என்ற மூதாட்டியிடம் இதே பாணியில் இரண்டு பவுன் தங்க செயினைத் திருடிச் சென்றார்கள் இரண்டு பெண்கள். மூதாட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி நகைகளைப் பறிக்கும் பெண்களைப் பற்றிய புகார்கள் தொடர்ந்து வரவே, விழித்துக்கொண்டது காவல்துறை. ஆட்டோவிலும் ஷேர் ஆட்டோவிலும்வைத்து கைவரிசையைக் காட்டுவதால், அவர்களுக்கு ‘ஆட்டோ ராணிகள்’ என்று பெயர் சூட்டிய அதிகாரிகள், அவர்களைப் பிடிக்க திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்தனர்.

பூனை சகுனம்... உரசல் சவாரி... அனுசரணை பேச்சு!

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இதேபோல மூதாட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி நகைகளைத் திருடிய பெண்கள் வழக்குகள் குறித்து தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் தகவல் சேகரிக்கப்பட்டது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு கும்பல் இதேபோல மூதாட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி நகைகளைத் திருடியது பழைய ரெக்கார்டுகள் மூலம் தெரியவந்தது. அப்போது அந்தக் கும்பலின் தலைவியை மட்டும் கைதுசெய்த போலீஸாரால், மற்ற பெண்களைக் கைதுசெய்ய முடியவில்லை. ஒருவேளை அந்தக் கும்பலைச் சேர்ந்த பெண்களாக இருக்குமோ என்று போலீஸ் சந்தேகப்பட்ட நிலையில்தான், தூத்துக்குடி மாவட்டத்தின் கிராமம் ஒன்றைச் சேர்ந்த பெண்கள் சிலர் இதையே தொழிலாகச் செய்துவரும் தகவல் கிடைத்தது. மேலும், அவர்கள் கும்பலாக ஊரிலிருந்து கிளம்பி கோயம்பேடு, மின்ட் ஆகிய இடங்களில் சந்தித்துக்கொள்ளும் ரகசியத் தகவலும் கிடைத்தது.

இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு போலீஸ் டீமும், மின்ட் பகுதியில் இன்னொரு டீமும் மஃப்டியில் கண்காணித்தனர். இதில், மின்ட் பகுதியில் சில பெண்களின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தின. அவர்களைப் பின்தொடர்ந்து சென்றபோது, திருவொற்றியூர் அருகே ஒரு மூதாட்டியிடம் நான்கு பெண்கள் கைவரிசையைக் காட்ட... அவர்களைக் கையும் களவுமாக ஸ்பாட்டிலேயே மடக்கியது போலீஸ். அவர்கள் கொடுத்த தகவலின்படி, மேலும் மூன்று பெண்கள் அதே பகுதியில் கைதுசெய்யப்பட்டனர். ஏழு பெண்களிடமும் போலீஸார் விசாரித்தபோது, அவர்கள்தான் இரண்டு குழுக்களாகப் பிரிந்து மூதாட்டிகளிடம் தங்க செயின், பணம் திருடியவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த வழக்கைக் கையாண்ட போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசியபோது, அந்தப் பெண்களின் திருட்டு யுக்திகள் குறித்து விவரித்தார். ‘‘தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் ஒரு குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த ராணியும் இசக்கியம்மாளும்தான் நகைப்பறிப்பு டீமின் தலைவிகள். களத்தில் பெண்கள் மட்டுமே இறக்கிவிடப்படுவார்கள். ராணியின் டீமில் திலகா, ராஜாமணி, மரியாள் ஆகியோரும், இசக்கியம்மாள் டீமில் லட்சுமி, உஷா ஆகியோரும் இருக்கிறார்கள். சொந்த ஊரிலிருந்து தொழிலுக்குப் புறப்படுவதற்கு முன்பு இந்தப் பெண்கள் தங்களின் குலதெய்வத்துக்குப் படையல் போட்டு பூஜை செய்வார்கள். புறப்படும்போது நாய், பூனை எதிர்ப்பட்டால் அன்றைய தினம் கிளம்ப மாட்டார்கள். அதற்கடுத்த நாள் சகுனம் பார்த்த பிறகே புறப்படுவார்கள்.

பூனை சகுனம்... உரசல் சவாரி... அனுசரணை பேச்சு!

மக்களோடு மக்களாக இருப்பதுதான் இவர்களின் ஸ்டைல். பிளாட்பாரத்தில் தீபாவளி சீஸன் பிஸினஸ் செய்வதாகக் கூறி, சென்னை, எம்.ஜி.ஆர் நகரில் வாடகைக்கு மூன்று வீடுகளை எடுத்திருக்கிறார்கள். ஒருமுறை வந்தால், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தங்குவார்கள். தினமும் வேலைக்குப் போவதுபோல கிளம்பி, திருட்டை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ஓய்வெடுப்பார்கள்.

நகைகளை அணிந்துகொண்டு தனியாக நிற்கும் மூதாட்டிகள்தான் இவர்களின் இலக்கு. மூதாட்டியிடம் இந்த டீமிலுள்ள பெண் ஒருவர் முதலில் நைசாகப் பேச்சுக் கொடுப்பார். மூதாட்டி எந்த ஊர், எங்கு செல்கிறார், குடும்பச் சூழல் என அனைத்தையும் பேசியே கறந்துவிடுவார். கூடவே, ‘பாட்டி... உங்க செயின் அறுந்து விழுற மாதிரி இருக்குது’ என்றோ... ‘ஐயோ... இந்தப் பக்கம் செயினை அறுத்துட்டு போறவங்க நிறைய பேரு பைக்குல சுத்துறாங்க’ என்று சொல்லியோ செயினைக் கழற்றி சுருக்குப்பையில் அல்லது கைப்பையில் வைக்கச் செய்துவிடுவார்.

மேலும், அந்த மூதாட்டியிடம் கறந்த அவரது சொந்தத் தகவல்களை, டீமிலுள்ள மற்ற பெண்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவிடுவார். வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்ததும், டீமிலுள்ள மற்ற பெண்கள் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அந்த வழியாக வருவார்கள். மூதாட்டியுடன் இருக்கும் பெண், அந்த ஆட்டோவைக் கைகாட்டி நிறுத்துவார். அதற்குள் மூதாட்டி செல்ல வேண்டிய இடத்தை விசாரித்து அறிந்துகொண்ட அந்தப் பெண், ‘நானும் அந்த வழியாகத்தான் போகணும்... வாங்க ஆட்டோவுலயே போயிடலாம்’ என்றபடி பாட்டியையும் ஆட்டோவில் ஏற்றுவார்.

டீமிலுள்ள இளவட்ட பெண்ணொருவர், ‘பின்னாடி இடமில்லை... நான் வேணா அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்’ என்று சொல்லி டிரைவர் சீட்டிலேயே நெருக்கமாக அமர்ந்துகொள்வார். டிரைவரை உரசிக்கொண்டே பேச்சு கொடுப்பதன் மூலம் அவரது கவனம் பின்சீட்டுக்குத் திரும்பாமல் அந்தப் பெண் பார்த்துக்கொள்வார். ஆட்டோவில் மூதாட்டி அருகில் அமர்ந்திருக்கும் இரு பெண்கள் ஏற்கெனவே வாட்ஸ்அப்பில் கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு, மூதாட்டியின் சொந்த கிராமம், சமூகம் மற்றும் உறவுகளைச் சொல்லி நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு பெண், மூதாட்டியின் பையிலிருந்து நகையை நைசாகத் திருடிவிடுவார்.

பூனை சகுனம்... உரசல் சவாரி... அனுசரணை பேச்சு!

மூதாட்டி இறங்க வேண்டிய இடத்தில் இறங்கியதும், அடுத்த ஸ்டாப்பில் இவர்கள் இறங்கிவிடுவார்கள். பிறகு அனைவரும் தனித்தனியாகப் பிரிந்து, வெவ்வேறு இடங்களில் ஆட்டோ பிடித்து, எம்.ஜி.ஆர் நகர் வீட்டுக்கு இரண்டு தெருக்கள் தள்ளி நிறுத்தச் சொல்லி, வீடு வந்து சேர்வார்கள். ஆட்டோவில் கும்பலாக ஏறியது, இறங்கியதை வைத்து தங்களை போலீஸ் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக இந்த டெக்னிக். அதேபோல பல ஆண்டுகள் பயிற்சியால் கண்ணிமைக்கும் நேரத்தில் சுருக்குப்பையிலிருந்தோ கைப்பையிலிருந்தோ இவர்களால் பொருளை எடுத்துவிட முடியும். செயினில் ‘எஸ்’ வடிவ கொக்கியை நகத்தைவைத்தே நொடியில் கழற்றவும் பயிற்சியெடுத்திருக்கிறார்கள். ‘யாரிடமாவது மாட்டிக்கொண்டால் கையில், காலில் விழுந்து தப்பிக்க வேண்டும்’ என்பது டீம் தலைவியின் முக்கியமான கட்டளை.

அதேபோல தாங்கள் காவல் நிலையத்தில் சிக்கிக்கொண்டால், சட்டப்படி வழக்கை எதிர்கொள்ள சில வழக்கறிஞர்களையும் இவர்கள் பேசிவைத்திருக்கிறார்கள். கடந்த இரு மாதங்களில் மட்டும் இந்த ஆட்டோ ராணிகள், சென்னையில் 15 மூதாட்டிகளிடம் நகைகளைப் பறித்துள்ளனர். அவர்களிடமிருந்து 200 கிராம் தங்க நகைகள், 10,000 ரூபாய் ரொக்கத்தைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றார்.

தனிப்படை போலீஸாரிடம் பேசியபோது மேலும் சில தகவல்களைச் சொன்னார்கள். ‘‘இந்த ஆட்டோ ராணிகள் போலீஸிடம் சிக்கினாலும் வாயைத் திறக்க மாட்டார்கள். பெண்கள் என்பதால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் போலீஸ் பாணியில் விசாரிப்பதிலும் சிக்கல் இருக்கிறது. எம்.ஜி.ஆர் நகர் வீட்டைச் சோதனையிட்டபோது, தங்க நகைகளை எடை பார்க்கும் மெஷின் ஒன்றையும் கைப்பற்றியிருக்கிறோம்.

இந்த டீமிலுள்ள பெண்களின் கணவர்கள்தான் நகைகளை உருக்குவது, புரோக்கர்களிடம் விற்பது போன்றவற்றை மேற்கொள்கிறார்கள். குறிப்பிட்ட அளவு திருட்டு நகை சேர்ந்ததும் கணவர்கள், இந்தப் பெண்களிடம் நகைகளை வாங்கிக்கொண்டு வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிடுவார்கள். தங்கள் மனைவிகள் ஒருவேளை போலீஸில் மாட்டினால்கூட, தாங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலை தங்களின் மனைவிக்கே சொல்ல மாட்டார்கள். சென்னை மட்டுமல்லாமல் கோவை, திருச்சி, மதுரை என அனைத்து மாவட்டங்களிலும் ஆட்டோ ராணிகள் மீது வழக்குகள் இருக்கின்றன” என்றனர்.

விதவிதமாக திருட்டுகள் நடக்கின்றன. ‘விழிப்பு’டன் இருப்பதைத் தவிர நமக்கு வேறு வழியேயில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism