Published:Updated:

6 முறை தோல்வி; 7வது முறை வெற்றி!- ஆவடி இரட்டைக் கொலையில் துப்பு துலங்கியது எப்படி?

ஆவடியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 11 மாதங்களாகக் கொலையாளிகளை போலீஸார் தேடிவந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கணவன், மனைவி என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை வழக்கில் கைதான கணவன், மனைவி
கொலை வழக்கில் கைதான கணவன், மனைவி

சென்னையை அடுத்த ஆவடி, ஐயப்பன் நகர் சேக்காடு மெயின் ரோடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் குடியிருந்துவந்தவர் ஜெகதீசன் (67). இவரின் சொந்த ஊர் நெல்லை. அரசு அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி விலாசினி (58). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த வழக்கை அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர்கள் காளிராஜ், ஜெய்கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

கொலை வழக்கில் கைதான கணவன், மனைவி
கொலை வழக்கில் கைதான கணவன், மனைவி

விசாரணையில் ஜெகதீசன், விலாசினியை கொலை செய்தது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், அரிலோவா பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (28), அவரின் மனைவி பூவலட்சுமி (22) ஆகியோர் எனத் தெரியவந்தது. சுரேஷ்குமாரும் பூவலட்சுமியும் ஜெகதீசன் வீட்டில் ஒருவாரமாகத்தான் தங்கியிருந்து வேலைபார்த்து வந்துள்ளனர். இதனால் இவர்கள் குறித்த விவரங்கள் போலீஸாருக்குத் தெரியவில்லை. இருப்பினும் தனிப்படை அமைத்து போலீஸார் தேடிவந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் சுரேஷ்குமார், பூவலட்சுமியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``ஆவடியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சுரேஷ்குமார், பூவலட்சுமி குறித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சுரேஷ்குமார் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திர மாநிலக் காவல்துறையில் 20க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சுரேஷ்குமார், ஆவடியில் ஜெகதீசனைச் சந்தித்து அவரின் வீட்டில் குடும்பத்தோடு ஒருவாரம் தங்கியிருந்துள்ளார்.

கொலை வழக்கில் கைதான கணவன், மனைவி
கொலை வழக்கில் கைதான கணவன், மனைவி

ஜெகதீசனும் அவரின் மனைவி விலாசினியும் தனியாக இருப்பதை நோட்டமிட்ட சுரேஷ்குமார் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சமயத்தில் சுரேஷ்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் விலாசினி, அவரை வேலையிலிருந்து நிறுத்த முடிவு செய்துள்ளார். இதனால்தான் ஜெகதீசனையும் விலாசினியையும் கொலை செய்துவிட்டு நகைகள், பணத்தைக் கொள்ளையடித்ததாக சுரேஷ்குமார், பூவலட்சுமி வாக்குமூலமாகக் கூறியுள்ளனர்.

சுரேஷ்குமார், பூவலட்சுமி அவரின் 3 வயது மகன் ஆகியோர், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் தலைமறைவாக இருக்கும் ரகசிய தகவல் தனிப்படை போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக விமானம் மூலம் தனிப்படை போலீஸார் டெல்லி சென்று அங்கிருந்து காரில் ஹரித்துவாருக்குச் சென்றனர். அங்கு கங்கை நதிகரைப் பகுதியில் குடிசை வீட்டுக்குள் சுரேஷ்குமார் குடும்பத்தினருடன் குடியிருந்ததைக் கண்டுபிடித்தோம். பிறகு அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவந்தோம். கொள்ளையடித்த நகைகளையும் பணத்தையும் செலவழித்துவிட்டதாகக் கூறினர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த கொலை வழக்கை இந்த ஆண்டு அக்டோபரில் கண்டுபிடித்துவிட்டோம்.

கொலை செய்யப்பட்ட ஜெகதீசன், மனைவி விலாசினி
கொலை செய்யப்பட்ட ஜெகதீசன், மனைவி விலாசினி

இந்தக் கொலை வழக்கை துப்பறிய இரவுபகல் பாராமல் கஜினி முகமது போல 6 முறை பல மாநிலங்களுக்குத் தனிப்படை போலீஸார் சென்றனர். 7வது முறையாக சுரேஷ்குமார், பூவலட்சுமியைக் கைது செய்துவிட்டோம். அவரின் மகனை சுரேஷ்குமாரின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்" என்றனர். சுரேஷ்குமார், பூவலட்சுமியைக் கைது செய்ய விசாகப்பட்டினம் போலீஸார் பெரிதும் உதவியாக இருந்துள்ளனர்.

சுரேஷ்குமார் இருப்பிடத்தைக் கண்டறிய துருப்புச் சீட்டாக இருந்தது ஒரு செல்போன் நம்பர் மட்டும்தான். அந்த நம்பரில் முதலில் தொடர்பு கொண்டபோது ஹரித்துவாரரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பேசினார். அவரிடம் விவரத்தைக் கூறியபிறகுதான் சுரேஷ்குமார் அங்கு இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் கொலை வழக்கில் சிக்கிய சுரேஷ்குமார், பூவலட்சுமி தங்களுடைய உறவினர்கள் யாரிடமும் செல்போனில் பேசாமல் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் காவல்துறையினருக்குப் பயந்து செல்போன்களை அதிகளவில் பயன்படுத்தாமல் இருந்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.