Published:Updated:

`ஜெகதீசன் நல்லவர்; ஆனால் விலாசினி..?'- ஆவடி இரட்டைக் கொலையில் கைதான தம்பதி அதிர்ச்சி வாக்குமூலம்

ஆவடி இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட தம்பதியர் போலீஸாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தம்பதியினர் ஜெகதீசன், விலாசினி
கொலை செய்யப்பட்ட தம்பதியினர் ஜெகதீசன், விலாசினி

சென்னை ஆவடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஜெகதீசன், அவரின் மனைவி விலாசினி ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பரில் கொலை செய்யப்பட்டனர். 11 மாதங்களுக்குப் பிறகு ஜெகதீசன் வீட்டில் தங்கியிருந்த கணவன் சுரேஷ்குமார், மனைவி பூவலட்சுமி என இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பிறகு இந்தக் கொலை வழக்கில் போலீஸார் துப்பு துலக்கியுள்ளனர். போலீஸ் விசாரணையில் சுரேஷ்குமாரும் அவரின் மனைவி பூவலட்சுமியும் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

இரட்டைக் கொலை வழக்கில் கைதான தம்பதி
இரட்டைக் கொலை வழக்கில் கைதான தம்பதி

சுரேஷ்குமார் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``என்னுடைய சொந்த மாநிலம் ஆந்திரா. டிரைவர் வேலை செய்துவந்தேன். கொள்ளை வழக்குகளில் ஆந்திர மாநில போலீஸாரிடம் பலதடவை சிக்கி கைது செய்யப்பட்டுள்ளேன். கடந்த ஆண்டு விசாகப்பட்டினம் போலீஸாரிடமிருந்து தப்பிய நான், மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு சென்னை வந்தேன். அப்போதுதான் டாஸ்மார்க் பாரில் ஜெகதீசனைச் சந்தித்தேன். அவரிடம் நான் வேலை கேட்டேன். குடும்பத்தோடு நான் கஷ்டப்படுவதைப் பார்த்த ஜெகதீசன் எனக்கு வேலை கொடுத்தார்.

6 முறை தோல்வி; 7வது முறை வெற்றி!- ஆவடி இரட்டைக் கொலையில் துப்பு துலங்கியது எப்படி?

அவரின் பண்ணை வீட்டில் நான் குடும்பத்துடன் தங்க இடமும் கொடுத்தார். வீட்டில் ஜெகதீசன், அவரின் மனைவி மட்டுமே தங்கியிருந்தனர். மேலும், வீட்டைப் புதுப்பித்துக்கொண்டிருந்தார் ஜெகதீசன். அவர் வேலைக்காக பணம் கொடுப்பதை நான் பார்த்தேன். இதனால் ஜெகதீசனிடம் அதிகளவில் பணம் இருப்பதை தெரிந்துகொண்டேன். தினமும் மாலை நானும் ஜெகதீசனும் மது அருந்த வெளியில் செல்வோம். எனக்கு அவர்தான் மது வாங்கிக் கொடுப்பார்.

இரட்டைக் கொலை வழக்கில் கைதான தம்பதி
இரட்டைக் கொலை வழக்கில் கைதான தம்பதி

இந்தச் சமயத்தில் என்னால் ஜெகதீசன் அதிகம் மதுகுடிப்பதாக விலாசினி கருதினார். அதனால் என்னை வேலையிலிருந்து நீக்கும்படி ஜெகதீசனிடம் கூறினார். அதற்கு அவரும் சம்மதித்தார். வேலையைவிட்டு நீக்கினால் எங்கே செல்வது என்று தெரியவில்லை. சம்பவத்தன்று ஜெகதீசனும் நானும் மது அருந்த சென்றோம். ஆனால் நான் மது அருந்தாமல் குடிப்பது போல நடித்தேன். வழக்கத்தைவிட அதிகமாக ஜெகதீசன் மது அருந்தினார். இருவரும் வீட்டுக்கு வந்தோம். அப்போது வழக்கம் போல என்னை விலாசினி திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான், மாடிப்படியின் அருகில் இருந்த இரும்புக் குழாயால் விலாசினியின் தலையில் அடித்தேன். இதில் அவர் மயங்கிவிழுந்தார்.

அவரின் சத்தம் கேட்டு அங்கு வந்த ஜெகதீசனையும் அடித்தேன். பிறகு என் மனைவி பூவலட்சுமி விலாசினி அணிந்திருந்த நகைகளைக் கழற்றினார். நான் வீட்டுக்குள் சென்று பீரோவிலிருந்த 20,000 ரூபாயை எடுத்தேன். பிறகு குடும்பத்தோடு அங்கிருந்து ஜெகதீசனின் பைக்கில் தப்பினோம். பைக்கில் சென்றால் மாட்டிக் கொள்வோம் என்று கருதிய நான் நடுவழியில் பைக்கை நிறுத்திவிட்டு ஆட்டோவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தோம். அங்கிருந்து ரயில் மூலம் பல இடங்களுக்குச் சென்றோம். அப்போது நகைகளை விற்றுச் செலவழித்தோம். இறுதியில் ஹரித்துவாருக்கு வந்து ஆட்டோ ஓட்டிவந்தேன். ஆனால் போலீஸார் என்னைப் பிடித்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.

போலீஸாரைப் பாராட்டும் துணை கமிஷனர் ஈஸ்வரன்
போலீஸாரைப் பாராட்டும் துணை கமிஷனர் ஈஸ்வரன்

எதற்காக ஜெகதீசன், விலாசினியைக் கொலை செய்தாய்? என்று சுரேஷ்குமாரிடம் போலீஸார் கேட்டதற்கு, ``ஜெகதீசன் ரொம்ப நல்லவர். நான் தலைமறைவாக இருக்க அவரின் வீடே சரியாக இருக்கும் எனக் கருதினேன். ஆனால், விலாசினியால்தான் இருவரையும் கொலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது" என்று கூறியுள்ளார். சுரேஷ்குமாரையும் பூவலட்சுமியையும் பிடிக்க ஹரித்துவாருக்குச் சென்ற தனிப்படை போலீஸார் பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக, சுரேஷ்குமார் தங்கியிருந்த கங்கை நதிகரையின் ஓரத்தில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. அதில், எங்கு சுரேஷ்குமார் குடும்பத்தோடு தங்கியிருக்கிறார் என்ற விவரம் முதலில் தனிப்படை போலீஸாருக்குத் தெரியவில்லை. இதனால் ஒவ்வொரு வீடாக சுரேஷ்குமாரின் புகைப்படத்தோடு போலீஸார் சென்று விசாரித்துள்ளனர். அப்போது சுரேஷ்குமாரின் வீட்டை அங்குள்ள ஒருவர் அடையாளம் காட்டியுள்ளார். அதன்பிறகுதான் அங்கு சென்ற போலீஸார், சுரேஷ்குமாரையும் அவரின் மனைவி பூவலட்சுமியையும் பிடித்துள்ளனர். தாயும் தந்தையும் கொலை வழக்கில் சிறைக்குச் சென்றதால் அவரின் 3 வயது மகன் ஆதரவின்றி தவித்துவருகிறார்.