Published:Updated:

`தடுப்பூசி போட வந்துருக்கேன்' - ஆவடியில் சிறுவர்களை ஏமாற்றி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்

சிறுவர்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்!
சிறுவர்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்!

வீட்டில் தனியாக இருந்த சிறுவர்களிடம் மாநகராட்சியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்த வந்திருப்பதாகக் கூறி உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், தனியறையில் அவர்களை அடைத்துவிட்டு, பீரோவிலிருந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் கணபதி நகரைச் சேர்ந்தவர் லோகநாதன் (33). இவரின் மனைவி புஷ்பலதா (27). இந்தத் தம்பதிக்கு மணிகண்டன் (11), மோனிஷ் (9) என இரு மகன்கள் உள்ளனர். லோகநாதன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவருகிறார்.

நேற்றைய தினம், லோகநாதன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், புஷ்பலதாவும் வீட்டில் பிள்ளைகளை விட்டுவிட்டு தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. பெற்றோர் இருவரும் வெளியில் சென்றுவிட்ட நிலையில், சிறுவர்கள் இருவரும் மொபைல்போனில் ஆன்லைன் வகுப்பில் பாடங்களை கவனித்து வந்தனர். காலை 10:30 மணிக்கு, லோகநாதனின் வீட்டுக் கதவை சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தட்டியிருக்கிறார்.

சத்தம் கேட்டு கதவைத் திறந்த சிறுவர்கள் யார் என்று விசாரிக்க, இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர், ``கொரோனா தடுப்பூசி செலுத்த மாநகராட்சியிலிருந்து வந்திருக்கிறேன். வீட்டில் உங்கள் பெற்றோர் இல்லையா, தடுப்பூசி தொடர்பாக விவரம் தேவைப்படுகிறது. உங்கள் ஆதார் அட்டைகளை எடுத்து வாருங்கள்" என்று கூறியிருக்கிறார். அந்த நபரை சுகாதாரத்துறை ஊழியர் என்று நம்பிய சிறுவர்கள் அவரை அழைத்து வீட்டின் சோபாவில் அமரவைத்துவிட்டு, பீரோவிலிருந்து ஆதார் அட்டைகளை எடுத்துக் காண்பித்திருக்கின்றனர். அதை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மர்ம நபர், திடீரென சிறுவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக வீட்டின் அறை ஒன்றில் அடைத்துவிட்டு, பீரோவிலிருந்து தங்க நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டின் பிரதான கதவையும் தாழிட்டுவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றிருக்கிறார்.

நகை கொள்ளை!
நகை கொள்ளை!
Representational image

அதையடுத்து, அறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் இருவரும், ஜன்னல்வழியாக அக்கம்பக்கத்தினரைக் கத்தி கூச்சலிட்டு அழைத்தனர். சிறுவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவைத் திறந்து அவர்களை மீட்டு உடனடியாக அவர்களின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து வீட்டுக்கு வரவழைத்தனர். வீட்டுக்கு விரைந்த லோகநாதனும் புஷ்பலதாவும் பீரோவைச் சோதனை செய்தனர்.

மும்பை: 10-வது மாடியில் நடந்த கொள்ளை; பின்புறமாக ஏறிச் சென்ற `ஸ்பைடர்மேன்' திருடன்!

அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த நான்கு சவரன் தங்க நகைகள் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, இருவரும் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் இந்த நூதன கொள்ளைச் சம்பவம் குறித்துப் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார். லோகநாதனின் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போலீஸார், சிறுவர்களை விசாரித்துவிட்டு தற்போது லோகநாதனின் வீட்டருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமியைத் தேடிவருகின்றனர்.

பட்டப்பகலில் மாநகராட்சி ஊழியர் என்ற போர்வையில் வீட்டுக்குள் நுழைந்து சிறுவர்களை அடைத்துவிட்டு, மர்ம நபர் நகைகளைக் களவாடிச் சென்றிருக்கும் சம்பவம் அந்தப் பகுதி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு