Published:Updated:

ஆவடி: சிறுவர்களைக் குறிவைக்கும் கொள்ளையர்கள்! - அச்சத்தில் பொதுமக்கள்

ஆவடியில் சிறுவர்களை ஏமாற்றி 10 சவரன் நகை, 10,000 ரூபாய் பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கோணாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (42). இவரின் மனைவி தமிழ்செல்வி (39). இந்தத் தம்பதிக்கு பரத்வாஜ் (14), கேசவன் (12) என இரு மகன்கள் உள்ளனர். நாராயணன் அதே பகுதியில் தையல் கடை நடத்திவருகிறார். கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாகப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால், சிறுவர்கள் இருவரும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாகப் பாடங்களைக் கவனித்துவந்தனர். இந்தநிலையில், நேற்றைய தினம் தம்பதியர் இருவரும் வழக்கம்போல் சிறுவர்களை வீட்டில் விட்டுவிட்டு, தையல் கடைக்குச் சென்றனர்.

வீட்டில் சிறுவர்கள் இருவரும் தனியாக இருந்த நிலையில், அவர்களை நோட்டமிட்டு கதவைத் தட்டிய மர்ம நபர்கள் சிலர் சிறுவர்களிடம், ``உங்கள் தந்தை எங்களிடம் கடன் பெற்றிருந்தார். அந்தப் பணத்தை இன்று வீட்டில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறியிருந்தார். அதனால்தான் வந்திருக்கிறோம்" என்று கூறியிருக்கின்றனர். அவர்களின் பேச்சை நம்பிய சிறுவர்கள் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

சிறுவர்களை ஏமாற்றிக் கொள்ளை
சிறுவர்களை ஏமாற்றிக் கொள்ளை
representational image
`தடுப்பூசி போட வந்துருக்கேன்' - ஆவடியில் சிறுவர்களை ஏமாற்றி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்

அதையடுத்து, போனில் நாராயணனிடம் பேசுவதுபோல் காட்டிக்கொண்ட மர்ம நபர்கள், ``உங்கள் தந்தை பீரோவிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கச் சொல்கிறார். எனவே, சீக்கிரமாக எடுத்து வாருங்கள்" என்று கூறி சிறுவர்களை நம்ப வைத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, சிறுவர்கள் இருவரும் பீரோவைத் திறக்க சென்றிருக்கின்றனர். அந்த நேரத்தில், அவர்களிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டு, திசைதிருப்பிய மர்ம நபர்கள் அவர்கள் வருவதற்குள் பீரோவைத் திறந்து, அதிலிருந்த பணம், நகைகளைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கின்றனர். மர்ம நபர்கள் பணத்தைத் திருடிக்கொண்டு தப்பியோடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்கள், கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்திருக்கின்றனர்.

இரவு 10 மணிக்குப் பூட்டிய வீடு; 11 மணிக்குக் கொள்ளை! - சுற்றுலா சென்ற பொறியாளர் வீட்டில் துணிகரம்

ஆனால், கொள்ளையர்கள் அதற்குள் இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், தையல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு விரைந்த தம்பதி இருவரும் பீரோவைச் சோதனை செய்தனர். அப்போது, கொள்ளையர்கள் 10 சவரன் தங்க நகை, 10,000 ரூபாய் ரொக்கத்தைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைச் சம்பவம் குறித்து நாராயணன் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

கொள்ளை
கொள்ளை
representational image

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இதே ஆவடி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுவர்களிடம், தடுப்பூசி போட வந்திருப்பதாகக் கூறி வீட்டுக்குள் நுழைந்து, மர்ம நபர் ஒருவர் நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றிருந்த நிலையில், மீண்டும் அதே பாணியில் அரங்கேறியிருக்கும் இந்தக் கொள்ளைச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு