ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர், தன்னுடைய பெற்றோரிடம் கண்ணீர்மல்க ஒரு தகவலைத் தெரிவித்தார். அதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மகளை அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கிருந்த போலீஸாரிடம், ``என்னுடைய மகள், 11-ம் வகுப்பு படித்துவருகிறார். மாலை நேரத்தில் இசை கற்க சாமுவேல் என்பவரின் வீட்டுக்குச் செல்வார். அங்கு என்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை நடந்திருக்கிறது. எனவே, ஆசிரியர் சாமுவேல்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தனர் மாணவியின் பெற்றோர்.

இதையடுத்து ஆவடி அனைத்து மகளிர் போலீஸார், மாணவியிடம் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி, ``ஆசிரியர் சாமுவேல் என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். பின்னர் அவர்மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``புகாரளித்த மாணவி, கடந்த சில ஆண்டுகளாக இசைப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர் சாமுவேலிடம் இசை கற்கச் சென்றிருக்கிறார். அப்போது மாணவியைக் காதலிப்பதாக சாமுவேல் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதை மாணவிக்குத் தெரியாமல் வீடியோவும் எடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் சாமுவேலின் தொல்லை அதிகரித்தால், இசை கற்க மாணவி செல்லவில்லை. அதனால், அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மாணவியை ஆசிரியர் சாமுவேல் மிரட்டியிருக்கிறார். அதன் பிறகே மாணவி, தனக்கு நடந்த கொடுமைகளை வீட்டில் சொல்லியிருக்கிறார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி சாமுவேலைக் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.