சென்னை: காதலுக்கு எதிர்ப்பு; தோசைக்கரண்டியால் அடித்துக் குழந்தை கொலை! - நாடகமாடிய இளைஞர் கைது

ஆவடியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியின் அக்காவைப் பழிவாங்க, அவரின் மகனை தோசைக்கரண்டியால் அடித்தே கொலை செய்த உறவினரை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னை, புளியந்தோப்பு சாஸ்திரி நகர், 12-வது தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (32). இவர், சேலத்தில் தங்கியிருந்து அங்கிருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி பாக்கியலட்சுமி (26). இவர் மீன் வியாபாரம் செய்துவருகிறார். இந்தத் தம்பதியருக்கு பிரகாஷ்ராஜ் (5), கோகுல்ராஜ் (2) என இரண்டு மகன்கள். பாக்கியலட்சுமியின் தங்கை பவானி (20). இவரின் காதல் கணவர் அருண்குமார் (22). அவர், டீ வியாபாரம் செய்துவருகிறார்.

கடந்த ஜூலை மாதம், 18-ம்தேதி அருண்குமார், தனது மனைவி பவானியுடன் ஆவடி, ராஜீவ்காந்தி நகர், வள்ளலார் தெருவிலுள்ள வீட்டுக்குக் குடிபெயர்ந்தார். தங்கையின் வீட்டுக்கு பாக்கியலட்சுமி, தன்னுடைய மகன் கோகுல்ராஜை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். செப்டம்பர் 5-ம் தேதி கோகுல்ராஜ் வீட்டின் முன்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது படிகட்டிலிருந்து கோகுல்ராஜ் விழுந்துவிட்டதாக எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கோகுல்ராஜைப் பரிசோதித்த டாக்டர்கள், `இது படிக்கட்டிலிருந்து விழுந்த காயங்கள் இல்லை. யாரோ தாக்கியதுபோலத் தெரிகிறது' எனக் கூறியதுடன், ஆவடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார் கூறுகையில், `` பவானியை அருண்குமார் காதலித்தபோது, அதற்கு பாக்கியலட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எதிர்ப்புகளுக்கிடையே பவானியை அருண்குமார் கரம்பிடித்தார். ஆனால், பாக்கியலட்சுமியின் மீது அருண்குமாருக்கு ஆத்திரம் இருந்திருக்கிறது.

சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த பாக்கியலட்சுமிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் எனக் கருதிய அருண்குமார், வெளியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கோகுல்ராஜை தோசைக்கரண்டியால் தாக்கியிருக்கிறார். அதில் பலத்த காயமடைந்த கோகுல்ராஜ், கதறி அழுதிருக்கிறார். அப்போது நல்லப்பிள்ளைபோல அருண்குமார், படியிலிருந்து கோகுல்ராஜ் கீழே விழுந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியிருக்கிறார். அதை உண்மை என பாக்கியலட்சுமியும் பவானியும் நம்பியிருக்கிறார்கள். ஆனால் டாக்டர்கள் கண்டுபிடித்தால், அருண்குமாரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்னர் குழந்தை கோகுல்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால், அருண்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்திருக்கிறோம்" என்றனர்.
அருண்குமார் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது.