Published:Updated:

சென்னை: 7 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட செப்டிக் டேங்க் - சிறுவனின் உயிரைப் பறித்த சோகம்

சிறுவன் மோகன்ராஜ்
சிறுவன் மோகன்ராஜ்

சென்னையை அடுத்த ஆவடியில் ஏழு ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட செப்டிக் டேங்க் மூடப்படாததால் மழைநீர் தேங்கி நின்றது. அதில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த ஆவடி அருகேயுள்ள வெள்ளானூர், ஆர்ச் அந்தோணி நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (34). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி சங்கீதா (29). இந்தத் தம்பதியரின் மகன் மோகன்ராஜ் (6). மோகன்ராஜ், அந்தப் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்துவந்தான். இவர்கள் கடந்த ஆண்டு வெள்ளானூர் பகுதிக்குக் குடிவந்தனர்.

சிறுவன் மோகன்ராஜ்
சிறுவன் மோகன்ராஜ்

கமலக்கண்ணனின் வீட்டுக்கு அருகே வீடு கட்டும் பணி நடந்துவருகிறது. இதற்காக ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் செப்டிக் டேங்க் தோண்டப்பட்டிருக்கிறது. ஆனால், அதை மூடிவைக்கவில்லை. இந்தநிலையில் நிவர் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் செப்டிக் டேங்க் நிரம்பியது. மழையால் அந்தப் பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. வீட்டின் அருகே மோகன்ராஜ் நேற்று மாலை விளையாடிக்கொண்டிருந்தான்.

வெளியில் சென்ற மோகன்ராஜ், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பெற்றோர் அவனைத் தேடினர். அப்போது வீட்டின் அருகேயுள்ள செப்டிக் டேங்க்கில் மோகன்ராஜ் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்த பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மோகன்ராஜை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Vikatan
சிறுவன் மோகன்ராஜ்
சிறுவன் மோகன்ராஜ்

அங்கு சிறுவனைப் பரிசோதித்த டாக்டர்கள் மோகன்ராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து ஆவடி டேங்க் பேட்டரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வீட்டின் உரிமையாளரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு