`உங்களுக்குப் புது லோன் ஆஃபர் வேணுமா?'
`உங்க பேங்க் அக்கவுன்ட்டை வெரிஃபிகேஷன் செய்ய சில தகவல்கள் தேவைப்படுது...'
`உங்க சேலரி அக்கவுன்ட்டுக்கு கிரெடிட் கார்டு லோன் ஆஃபர் சாங்ஷன் ஆகியிருக்கு...'


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுபோன்று `ஆஃபர்கள்' மற்றும் `விவரங்கள் சரிபார்ப்பு' என்ற பெயரில் போலியான நபர்களிடமிருந்து சபலத்தை அல்லது சந்தேகத்தைத் தூண்டும் வகையிலான அழைப்புகளோ, குறுஞ்செய்திகளோ அவ்வப்போது நமக்கு வருவதுண்டு. அப்போது சமயோஜிதமாக முடிவெடுக்காமல், இத்தகைய `மாய வலை'யில் சிக்கிப் பணத்தையும் நிம்மதியையும் இழப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அந்தப் பட்டியலில் சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் இப்போது சிக்கியிருக்கிறார். அவருக்கு நேர்ந்த கதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளரான அந்தப் பெண், கணவரைப் பிரிந்து வாழும் சிங்கிள் பேரன்ட். `உடனடி லோன் ஆப்' என்பது போன்ற வலைதளத்தின் பெயரில், குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் என்று சில தினங்களுக்கு முன்பு அவருக்குக் குறுஞ்செய்தி வந்திருக்கிறது. இதுதொடர்பாக அவரிடம் தொலைபேசியிலும் யாரோ பேசியுள்ளனர். அதை நம்பிய அந்தப் பெண், லோன் கிடைக்கும் என்ற ஆசையில், எதிர்த்தரப்பில் பேசியவரின் வார்த்தைகளை நம்பி, அவர் கேட்டதுபோலவே தனது அடையாள அட்டை மற்றும் புகைப்படத்தை அனுப்பியிருக்கிறார்.

பின்னர், சில தினங்கள் கழித்து மீண்டும் அந்தப் பெண்ணிடம் பேசியவர்கள், முன்பணமாக 3,000 ரூபாய் கட்டினால் உடனடியாக லோன் தருகிறோம் என்று கூறியுள்ளனர். தனக்குக் கடன் வேண்டாம் என்று அந்தப் பெண் கூறியிருக்கிறார். அதன்பிறகுதான் பிரச்னையே தொடங்கியிருக்கிறது. அந்தப் பெண்ணின் புகைப்படத்தைத் தவறான முறையில் மார்பிங் செய்து, அவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தக் குற்றத்துக்குக் காரணமானவர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
படிப்பறிவில்லாத அந்தத் தூய்மைப் பணியாளரின் நிலை வேதனையைத் தரும் நிலையில், சென்னையில் கடந்த வாரம் நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் அச்சத்தை மேலும் அதிகப்படுத்துகின்றன. வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்களுக்கு அடுத்தடுத்து குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அதைத் திறந்து பார்த்தவுடனேயே, அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டிருக்கிறது.

``அதிகரித்து வரும் இதுபோன்ற குற்றங்களை உடனடியாகத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லாதது. ஆனால், நாம் விழிப்புடன் இருந்தால், கயவர்கள் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளாமல் நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்" என்று சூழலின் யதார்த்தம் சொல்கின்றனர் துறை சார்ந்த வல்லுநர்கள். வங்கிப் பெயரில் நடக்கும் இதுபோன்ற மோசடிகளிலிருந்து தப்பிப்பதற்கான ஆலோசனைகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த தனியார் வங்கியின் தென் மண்டல பொது மேலாளர் மணியன் கலியமூர்த்தியிடம் பேசினோம்.
``அரசு வங்கி, தனியார் வங்கி, கூட்டுறவு வங்கி என எந்த வங்கியாக இருந்தாலும், தங்கள் வாடிக்கையாளர்களிடம் வங்கிக் கணக்குத் தொடர்பாகத் தொலைபேசி வாயிலாக எந்த விவரங்களையும் கேட்கக் கூடாது என்று உறுதியான வரையறை இருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்புகள் எல்லா வங்கிகளிலும் முகப்பிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படி, `வங்கிக் கணக்கு விவரங்கள், ரகசியக் குறியீட்டு எண், பாஸ்வேர்டு உட்பட பாதுகாப்பு சார்ந்த எந்த விவரங்களையும் குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி வாயிலாக நாங்கள் கேட்க மாட்டோம்' என்று மாதம்தோறும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு வங்கியுமே தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சில வங்கிகள் ஏஜென்சி நிறுவனங்களுடன் சேர்ந்து, லோன் கொடுக்க வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் வேலைகளைச் செய்கின்றன. இவர்களின் பிரதான இலக்கு மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள்தான். அடிக்கடி போன் செய்து புதிய லோன் ஆஃபர்கள் குறித்து நம்மிடம் சொல்லி ஆசைகளைத் தூண்டுவார்கள். அவர்களில் சிலர் முறையாகத் தகவலைச் சொல்லி, மெயில் மற்றும் வங்கிக்கு நேரில் வரவழைத்து லோன் பெறுவதற்கான வழிமுறைகளைக் கூறுவார்கள். ஆனால், அதுபோன்ற ஏஜென்சி நிறுவனங்கள் மூலமாகவும் மோசடி வேலைகள் அதிகம் நடக்கின்றன. ஆன்லைன் வாயிலாகக் கடனுதவி வழங்கும் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. அவர்கள் சில ஆயிரம் முதல் பல ஆயிரம் வரை லோன் கொடுக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படாத அந்த நிறுவனங்களும் மக்களுக்குக் கடன் வழங்குகின்றன. ஆனால், அவற்றின் நம்பகத்தன்மை குறித்து வெளிப்படைத்தன்மை இருப்பதாகத் தெரியவில்லை.
சம்பந்தப்பட்ட வங்கியில் நமக்கு லோன் தர முன்வந்தால், அந்த விவரத்தையும், அந்த லோன் குறித்த தகவலைப் பேசவிருக்கும் வங்கியின் 'Relationship Manager' குறித்தும் வாடிக்கையாளரின் மெயிலுக்கு முதலில் தகவல் அனுப்பப்படும். பிறகு, 'லேண்டுலைன்' போன் வாயிலாக மட்டுமே Relationship Manager வாடிக்கையாளரிடம் பேசுவார். லோன் ஆஃபர் தொடர்பாக எந்த அழைப்பு வந்தாலும், அதைச் சம்பந்தப்பட்ட வங்கியில் உறுதிசெய்துகொள்வது நல்லது" என்றவர், பண விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து தன் அனுபவத்திலிருந்து சொன்னார்.

``15 ஆண்டுகளுக்கு முன்பு. எனக்கு லாட்டரியில் கோடிக்கணக்கில் பணம் விழுந்திருக்கிறதென ஒரு மெயில் வந்தது. `இது உண்மை தானோ..?' என்று ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி, வங்கி அதிகாரிகளிடம் பேசினேன். `இது உங்க பணமா?' என்று திருப்பித் திருப்பிக் கேட்டனர். `லாட்டரியே வாங்காத நீங்க, சம்பந்தமில்லாத வகையில பணம் வர்றதை எப்படி நம்பலாம் / அந்தப் பணத்துக்கு ஆசைப்படலாம்' என அவர்கள் சொல்லும் அர்த்தம் பின்புதான் எனக்குப் புரிந்தது. அதுபோலத்தான் பணம் என்றதுமே அது கடனாகவோ, பரிசாகவோ எப்படிக் கிடைத்தாலும் நம்மில் பலரும் சபலப்பட்டுவிடுகின்றனர்.
கிரெடிட் கார்டு அல்லது லோன் தருகிறோம் என்றால், `அந்தக் கடனைப் பெறும் நிலையில் நம் வருமான வாய்ப்புகள் இருக்கின்றனவா, அதை உரிய காலத்தில் நம்மால் கட்ட முடியுமா, அது இப்போது நமக்கு அவசியம் தேவைதானா' உள்ளிட்ட பல கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொள்வது நல்லது. குறிப்பாக, அவசியத் தேவைக்குப் போக, வேறு எங்கும் நம் தொலைபேசி எண்ணைக் கொடுக்கக் கூடாது. மீறிக் கொடுக்கும் பட்சத்தில், நம் தொலைபேசி எண் `டேட்டா'வாக மோசடி செய்பவர்களின் கைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. அப்படி ஒரே நேரத்தில் பல ஆயிரம் எண்களுக்கு மெசேஜ் அல்லது இணையதள லிங்க் அனுப்பி வலை விரிப்பார்கள்.

படித்த, படிக்காதவர்கள் மற்றும் பணத்தேவைக்காக எதிர்பார்த்து இருப்பவர்கள் பலரும், தூண்டிலில் சிக்கிய மீன்போல உடனே அந்த வலையில் அகப்பட்டுவிடுகின்றனர். நம்மை ஏமாற்றும் நோக்கத்தில் எதிர்த்தரப்பில் பேசுபவர், நாம் ஆணா அல்லது பெண்ணா என்பதை வைத்தும், நாம் பேசும் அணுகுமுறையை வைத்தும் நம்மிடம் தகவல்களைத் திரட்டிவிடுவார். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே மோசடி செய்யும் நபர்களுக்கு 'டேட்டா'வாக மாறும். எனவே, பொதுமக்களாகிய நாம்தான் இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
செல்போன், கணினி பயன்பாட்டின் மூலமாக நமது மெயில் ஐ.டி மற்றும் தொலைபேசி எண்ணை, சிலர் சுலபமாக எடுத்து விடுகின்றனர். இதுபோன்ற மோசடி நபர்கள் தொழில்நுட்ப விஷயத்தில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். புதுப்புது வழிகளில் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. எனவே, ஒரேநாளில் அவர்களை யெல்லாம் கட்டுப்படுத்திவிட முடியாது" என்று ஆதங்கத்துடன் கூறும் கலியமூர்த்தி, இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்துப் பேசினார்.

``வங்கியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு வரும் எந்தத் தகவலாக இருந்தாலும், `லேண்டுலைன்' போன் வாயிலாகத்தான் தெரிவிக்கப்படும். வங்கிப் பரிவர்த்தனை மற்றும் லோன் விவரங்கள் குறித்து செல்போன் வாயிலாக யாராவது பேசினால் மிகுந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டும். வங்கியிலிருந்து அழைத்திருந்தால், பாதுகாப்புக்கு உட்படாத தகவல்கள் தேவைப்பட்டால் அதை வங்கியின் மெயில் ஐ.டி-க்குத்தான் அனுப்பச் சொல்வார்கள். இதை வைத்தே அந்த அழைப்பின் உண்மைத்தன்மையை ஓரளவுக்கு உறுதிசெய்துவிடலாம். தவிர, நம் வங்கி எண், ரகசிய குறியீடு, ஓ.டி.பி எண், அடையாள அட்டைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உட்பட்ட எந்த விவரங்கள் கேட்கப்பட்டாலும், உடனே சுதாரித்துக்கொண்டு அந்த எண்ணை 'Spam' அல்லது 'Fraud' என்று 'ட்ரூகாலர்' ஆப் மூலமாக டைப் செய்துவிடலாம். இதனால், வேறு வாடிக்கையாளர் ஏமாறுவதைத் தடுக்க முடியும்.
கணினி, கம்ப்யூட்டர் பயன்பாடு எதுவாக இருந்தாலும், `Save Password' ஆப்ஷனை க்ளிக் செய்யாமல், தேவைக்கேற்ப 'லாகின்' செய்வது நம் தகவல்கள் திருடுபோவதைக் குறைக்க உதவலாம். நமக்குப் பரிச்சயமில்லாத புதிய தொலைபேசி எண்ணிலிருந்து லிங்க் வடிவில் தகவல் வந்தால், அதை ஒருபோதும் திறந்து பார்க்கக் கூடாது. உடனே அதை டெலிட் செய்துவிடுவது நல்லது. வங்கிப் பரிவர்த்தனையில் ஏதாவது சரிபார்ப்பு தேவைப்பட்டால், வங்கிக்கு நேரில் சென்று சரிசெய்யலாம் அல்லது வங்கியின் இணையதளத்துக்குள் சென்று கோரிக்கையைப் பதிவிடலாம்; சரிசெய்யலாம்.

வங்கிப் பெயரில் வந்த குறுஞ்செய்தி அல்லது மெயில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தால், உடனே வங்கியை நாடலாம். எச்சரிக்கையுடன் இருந்தும் ஏதாவதொரு விதத்தில் பண விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை நாடுவதுடன், காவல்துறையினரின் உதவியையும் நாட வேண்டும். மாறாக, தவறான முடிவுகளை எடுப்பது எந்த விதத்திலும் தீர்வாகாது" என்று வலியுறுத்தி முடித்தார்.