Published:Updated:

`தூக்குக் கயிறாக மாறிய பெட்ஷீட்' - சிறையில் விபரீத முடிவெடுத்த அயனாவரம் சிறுமி வழக்கின் ஆயுள் கைதி

தற்கொலை
News
தற்கொலை ( மாதிரிப் படம் )

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பழனி என்ற கைதி இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில், 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி 2018-ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடுக்குமாடிக் குடியிருப்பின் லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், சுரேஷ், எரால்பிராஸ், அபிஷேக், சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பாபு, பழனி, தீனதயாளன், ராஜா, சூர்யா, குணசேகரன், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேரை போலீஸார் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர். இவர்கள் மீது போக்ஸோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலைமுயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகா வழக்குபதிந்து விசாரணை நடத்தினார்.

அரசு வழக்கறிஞர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகா
அரசு வழக்கறிஞர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரையில் 11 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு வழங்கினார். வழக்கு விசாரணையின்போது குற்றம் சுமத்தப்பட்ட 10-வது நபரான பாபு, மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, 16 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சுமத்தப்பட்ட 15-வது நபரான தோட்டக்காரர் குணசேகரன் விடுதலை செய்யப்பட்டார்.

முதல் குற்றவாளி ரவிக்குமார் (56), 2-வது குற்றவாளி சுரேஷ் (32), 5-வது குற்றவாளி அபிஷேக் (28), 11-வது குற்றவாளி பழனி (40) ஆகிய 4 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. (இவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தண்டனையின்படி, அரசின் சலுகைகளைப் பெற முடியாது. சாகும்வரை சிறையிலேயேதான் இருக்க வேண்டும்). 3-வது குற்றவாளியான ராஜசேகருக்கு (48) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. (இவர், தண்டனைக் காலம் முடிந்தபிறகு மாநில அரசின் சலுகைகளைப் பெற விண்ணப்பிக்க முடியும். நன்னடத்தை அடிப்படையில் ராஜசேகர் விடுதலையாக வாய்ப்புள்ளது).

புழல் சிறை
புழல் சிறை

மீதமுள்ள குற்றவாளிகளில் 4-வது குற்றவாளியான எரால்பிராஸுக்கு 7 ஆண்டுகளும் மற்றவர்களுக்கு 5 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்புக்குப்பிறகு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தோட்டக்காரரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசுத் தரப்பு முடிவு செய்தது. அதேபோல தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பிலும் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், ஆயுள் தண்டனைக் கைதியான பழனி, புழல் மத்திய சிறை 1-ல் பிளாக்-1ல் அடைக்கப்பட்டிருந்தார். அங்குள்ள உள்ள கழிவறைக்குச் சென்ற பழனி, ஜன்னலில் பெட்ஷீட்டை கிழித்து கயிறு போல் திரித்து தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். பழனி, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த சக கைதிகள், சிறைக் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பழனியை மீட்ட சிறைக்காவலர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து புழல் போலீஸார், பழனியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் கைதானவர்கள்
அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் கைதானவர்கள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அயனாவரம் சிறுமி வழக்கில் 11-வது குற்றவாளியான பழனி, புளியந்தோப்பு, காந்தி நகரைச் சேர்ந்தவர். தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு பழனி, மனஉளைச்சலில் இருந்துவந்துள்ளார். அதற்கு சிகிச்சையும் பெற்றுவந்தார். இந்தச் சமயத்தில்தான் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். அயனாவரம் சிறுமி வழக்கில் 10-வது குற்றவாளியான பாபு என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தார். 11-வது குற்றவாளியான பழனி, தற்போது இறந்துள்ளார்" என்றனர்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி பழனி சிறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.