Published:Updated:

2 க்ளு... சிசிடிவி காட்சி; தண்ணீர்த் தடயம்!- நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கின் விறுவிறு சேஸிங்

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையைத் திசை திருப்பும் வகையில் கொலையாளி மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து நெல்லை போலீஸார் குற்றவாளியைக் கைது செய்திருக்கிறார்கள்.

கணவர் முருகசங்கரனுடன் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி
கணவர் முருகசங்கரனுடன் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி

தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கை விசாரித்த போலீஸார் தொடக்கத்தில் இதை ஆதாயத்துக்காக நடத்தப்பட்டதாகவே கருதினார்கள். காரணம், உமா மகேஸ்வரி கழுத்தில் கிடந்த நகைகளைக் காணோம் என்றதும் போலீஸார் இந்த முடிவுக்கு வந்தார்கள். வட மாநிலக் கொள்ளையர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்கிற முடிவுக்கு போலீஸார் வந்தார்கள்.

உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி

அதனால் சுற்றுப் புறங்களில் வாடகை வீடு எடுத்துத் தங்கியிருந்து வேலை செய்து வந்த வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அழைத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினார்கள். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அப்போது தான், வெறும் 10 பவுன் நகை, 10,000 ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது. உடனடியாக இதை ஆதாயக் கொலை இல்லை என்கிற முடிவுக்கு வந்த போலீஸார் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.

சிக்கிய தடயங்கள்!

கொலை நடந்த வீட்டின் வரவேற்பு அறையில், உள்ளே வந்தவருக்குத் தண்ணீர் கொடுத்த அடையாளங்கள் இருந்தன. அதனால் கொலையாளிகள் உமா மகேஸ்வரிக்கு தெரிந்தவர்கள் என்று கருதப்பட்டது. பொதுவாக அறிமுகம் இல்லாதவர்களை உமா மகேஸ்வரியின் கணவர் முருகசங்கரன் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லையாம். ஆனால், நன்கு அறிமுகமானவர்கள் என்பதாலேயே வீட்டின் உள்ளே அனுமதித்துள்ளனர்.

கொலை நடந்த வீட்டில் அதிகாரிகள் விசாரணை
கொலை நடந்த வீட்டில் அதிகாரிகள் விசாரணை

அதனால்தான் கடைசிவரை உள்ளேயே தங்கியிருந்து கொலையைச் சாவகாசமாகச் செய்ததுடன் தடயங்கள் அனைத்தையும் அழித்து விட்டுச் சென்றுள்ளார். தண்ணீர் குடித்த பாத்திரம், சுவர்கள், தண்ணீர் குழாய்கள் என எதிலும் கைரேகை இல்லாதவாறு அனைத்தையும் அழித்துவிட்டார். திடீரெனப் புகுந்த கொள்ளையன் இப்படி சாவகாசமாகக் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்கிற முடிவுக்கு போலீஸார் வந்தார்கள்.

காட்டிக் கொடுத்த பிரேத பரிசோதனை! அறிக்கை!

கொலையாளி அரிவாள் எதையும் பயன்படுத்தவில்லை. சாதாரண கத்தியை வைத்து கொலையைச் செய்திருப்பது தெரியவந்தது. கூலிப்படையினர் என்றால் அரிவாளுடன் சென்று வெட்டியிருப்பார்கள். ஆனால், அறிமுகமானவர் என்பதாலேயே சிறிய கத்தியை மட்டும் மறைத்து எடுத்துச் சென்றுள்ளார். அதற்கு ஏற்ற வகையில் உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இன்ச் அளவுக்குக் கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் ஆகியோரின் உடம்பில் 40 கத்திக் குத்துகள் விழுந்துள்ளன. பொதுவாக அதிக ஆத்திரம் இருந்தால் மட்டுமே இந்த அளவுக்கு கத்திக் குத்துகள் விழுந்திருக்கும். இந்த அளவுக்கு ஆத்திரம் கொண்ட நபர் யாராக இருந்திருக்கும், அதற்கான காரணம் என்ன என்பதுவும் போலீஸாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. உறவினர்கள் பலரிடமும் விசாரணை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் போலீஸாருக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியது.

சிசிடிவி கேமரா இல்லாத சோகம்!

கொலை நடந்த வீடு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருக்கிறது. அருகில் அதிக வீடுகள் இல்லை. ஆனாலும் உமா மகேஸ்வரி வீட்டில் சிசிடிவி கேமரா வசதி எதுவும் செய்யப்படவில்லை. அதனால் கொலையாளியை அடையாளம் காண்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பொதுவாக எந்தவொரு கொலையாளியுமே ஒரு கொலையைச் செய்தால் தன்னையும் அறியாமல் தடயத்தை விட்டுச் செல்வது வழக்கம். ஆனால் இந்தக் கொலை நடந்த வீட்டில் க்ளூ எதுவும் கிடைக்காதது காவல்துறையினருக்கு ஏற்பட்ட பெரும் சோகம்.

கொலையாளி பயன்படுத்திய கார்
கொலையாளி பயன்படுத்திய கார்

பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருந்தும் சிசிடிவி கேமரா இல்லாதது மட்டும் அல்லாமல் சில சொத்துகளில் வில்லங்கம் இருந்ததுவும் போலீஸ் விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. ரியல் எஸ்டேட் அதிபர்கள் சிலரை அழைத்து விசாரணை நடத்தியும் போலீஸுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் குடும்பத் தகராறு எதுவும் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது.

பணிப்பெண் கொலையும், பரபரப்பு திருப்பமும்!

உமா மகேஸ்வரி கொலையில் என்ன நடந்திருக்கிறது என்றே தெரியாமல் போலீஸ் குழம்பியது. ஒரு துப்பும் இல்லாமல் ஆறு நாள்கள் கடந்தது. இதனிடையே, கொலையான பணிப்பெண் மாரியம்மாள், உமா மகேஸ்வரியின் வீட்டில் வேலை செய்யவில்லை. அவரது மகள் வீட்டில் வேலை செய்துள்ளார். மகள் வெளியூரில் உள்ள கல்லூரியில் பணியாற்றுவதால் வீட்டுச் சாவியை உமா மகேஸ்வரி வீட்டுக்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கம். அப்படி வரும்போது அவரையும் கொலை செய்திருக்கிறார்கள். கொலை வழக்கு தொடர்பாக 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு விட்டது.

சிக்கிய சிசிடிவி ஆதாரம்
சிக்கிய சிசிடிவி ஆதாரம்

பழைய குற்றவாளிகள் யாராவது இந்தக் கொலையைச் செய்திருப்பார்களா என விசாரிக்கப்பட்டது. கத்தியால் குத்திக் கொலை செய்யும் குற்றவாளி யார் என்பது குறித்த தேடலிலும் போலீஸார் ஈடுபட்டார்கள். ஆனாலும், கொலையின் ஒவ்வொரு விஷயத்திலும் திருப்பங்கள் ஏற்பட்டதால் ஒரு வாரமாகியும் முன்னேற்றம் ஏற்படவே இல்லை. இந்த நிலையில் அருகில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் டவர்களை ஆய்வு செய்ததில் முக்கியத் தடயங்கள் சிக்கின.

சிக்கிய நபர்!

சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அருகில் இருந்த ஹோட்டலின் முன்பு நின்றிருந்த ஸ்கார்பியோ கார் குறித்த தகவல் திரட்டப்பட்டது. அத்துடன், அங்குள்ள செல்போன் டவரில் பேசப்பட்ட செல்போன் நம்பர் மூலமாகவும் விசாரணை நடந்தது. ஸ்கார்பியோ கார் ஓனரும், சந்தேகத்துக்கு இடமான செல்போன் உரிமையாளரும் ஒருவரே என்பது காவல்துறைக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. அந்தத் தகவல் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினார்கள்.

கைது செய்யப்பட்ட கார்த்திகேயன்
கைது செய்யப்பட்ட கார்த்திகேயன்

அரசியல் ரீதியாக தேர்தலில் சீட் வாங்கிக் கொடுக்க பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதால் உமா மகேஸ்வரி கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தி.மு.க-வைச் சேர்ந்த ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளரான சீனியம்மாளிடம் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். ஒரு வாரம் தாமதம் ஏற்பட்ட போதிலும், கடைசியாக சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் குற்றவாளி என்பதை நெல்லை மாநகர காவல்துறை கண்டுபிடித்து கைது செய்துள்ளது. ஆதாரம் எதுவும் இல்லாமல் திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட நிலையில் இருந்த காவல்துறையினரின் தீவிர விசாரணையால் இந்த வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு இருப்பதால் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.