Published:Updated:

`இந்தப் பகுதியை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது!'- பா.ம.க பிரமுகர் கொல்லப்பட்ட பின்னணி

எம்.திலீபன்

பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்துள்ளது. தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல் மற்றும் பா.ம.க ஒன்றியச் செயலாளர் கருணாநிதி ஆகிய இருவரும் இப்பகுதியை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற கோஷ்டி பூசலால் கொலை நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட சரண் ராஜ்
கொலை செய்யப்பட்ட சரண் ராஜ்

தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பா.ம.க பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க ஒன்றியச் செயலாளரின் மகன் உள்ளிட்ட 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சரண்ராஜ்- தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல்
சரண்ராஜ்- தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே செட்டி குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சரண் ராஜ். இவர் நேற்று முன்தினம் இரவு கள்ளூர் கிராமத்திற்குச் சென்று திரும்பிய போது மர்மநபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கீழப்பழுவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் அருங்கால் கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் காவல்துறையினரிடம் சரணடைந்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அதே கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜோதிவேலின் மகன் பூவரசன், சூர்யா, அஜித், விஜயகுமார் ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்தனர். இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் அவர்களைத் திருச்சி மத்திய சிறையிலடைக்க அழைத்துச் சென்றனர்.

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்
அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

இந்த வழக்கை விசாரித்து வரும் காவலர்களிடம் பேசினோம். "பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்துள்ளது. தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல் மற்றும் பா.ம.க ஒன்றியச் செயலாளர் கருணாநிதி ஆகிய இருவரும் இந்தப் பகுதியை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற கோஷ்டி பூசல் நடந்துள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜோதிவேலின் மகன் பூவரசன் திருமானூர் பெட்ரோல் பங்கில் வைத்து சரண் ராஜ் என்பவர் வெட்டியிருக்கிறார். இதில் பூவரசினுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதில், முக்கியக் குற்றவாளியான சரண் ராஜ் தலைமறைவாக இருந்துள்ளார். இந்த நிலையில் அடிப்பட்ட ஜோதிவேலின் மகன் பூவரசன் சரண் ராஜைக் கொன்று பலி தீர்த்துள்ளார்" என்று தெரிவித்தனர்.