Published:Updated:

56 பக்க மாந்திரீகக் கையேடு; ஃபோர்டு கார்!-புதுக்கோட்டை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் மந்திரவாதி

வசந்தியிடம் பறிமுதல் செய்யப்பட்ட கார்
வசந்தியிடம் பறிமுதல் செய்யப்பட்ட கார்

20 வருடங்களுக்கும் மேலாக மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்த வசந்தி பெண்களுக்கு வசிய மருந்து கொடுப்பது, சூனியம் வைப்பது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி தைலமரக் காட்டுக்குள் வைத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் பணக்காரராக ஆசைப்பட்டு தந்தையே மகளைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில், சிறுமியின் தந்தை பன்னீர் மற்றும் அவரது உறவினர் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய மந்திரவாதியை போலீஸார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

`சடங்கு, சம்பிரதாயம்; பெண் மந்திரவாதி!’ - கந்தவர்வகோட்டை சிறுமி கொலையில் சிக்கிய தந்தை
மந்திரவாதி வசந்தி
மந்திரவாதி வசந்தி

விசாரணையில், மந்திரவாதி வசந்தி, `உன் முதல் மனைவிக்குப் பிறந்த மூன்றாவது மகளைப் பூஜை நடத்தி, பலி கொடுத்தால், உன் வீட்டுப் பிரச்னைகள் எல்லாம் தீரும், வீட்டில் செல்வம் கொட்டும். சில மாதங்களிலேயே பணக்காரர் ஆகிவிடுவாய். உடனே இதைச் செய்' என்று கூறி ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதன்பேரிலேயே மூட நம்பிக்கையால், பெற்ற மகளையே பன்னீர் துடிக்கத் துடிக்கக் கொலை செய்திருக்கிறார். இதையடுத்து, மந்திரவாதியைக் கைது செய்த போலீஸார், இதுபோன்று மேலும் வேறு யாரையும் ஏமாற்றியுள்ளாரா, குழந்தைகள் ஏதும் இவரால் பலி கொடுக்கப்பட்டனவா என்பது குறித்துத் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலையில் காய்கறி வியாபாரம் செய்யும் மந்திரவாதி வசந்தி, யாருக்கும் சந்தேகம் வராதபடி, இரவு நேரங்களில் மட்டும் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் 20 வருடங்களுக்கும் மேலாக மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்த வசந்தி பெண்களுக்கு வசிய மருந்து கொடுப்பது, சூனியம் வைப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதையடுத்து, மந்திரவாதி வசந்தியைக் கைது செய்து திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

மந்திரவாதி வசந்தி, பறிமுதல் செய்யப்பட்ட கார்
மந்திரவாதி வசந்தி, பறிமுதல் செய்யப்பட்ட கார்

மேலும் அவரிடமிருந்து ஃபோர்டு கார், செல்போன், கருப்பு மை டப்பா, வெள்ளிக் காப்பு, மாந்திரீகத்திற்குப் பயன்படுத்திய நூல் சுற்றப்பட்ட தேங்காய், வெள்ளி தாயத்து, வெள்ளி ருத்ராட்ச மாலை, பாசி மாலை, 13 வெள்ளை நிறக் கோழிகள், 56 பக்கம் கொண்ட மாந்திரீகக் கையேடு, எரிந்த மரத்துண்டுகள் உள்ளிட்டவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு