Published:Updated:

பெங்களூரு: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! - 68 வயது பூசாரி கைது

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள தனது மகளின் வீட்டில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெங்களூரில் 68 வயது கோயில் பூசாரி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

வெங்கடரமணப்பா (68) என்பவர், தனது மனைவியுடன் கர்நாடகா மாநிலம், சிக்கபல்லபுராவில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். இவருடைய இரண்டு மகள்களும் கோயில் பூசாரிகளை மணந்தவர்கள். அவர்களில் ஒருவர் கர்நாடகா மாநிலத்திலுள்ள தேவனஹள்ளியிலும், இன்னொருவர் யெலஹங்காவிலும் வசித்துவருகின்றனர்.

தேவனஹள்ளியிலுள்ள சௌடேஸ்வரி கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் வசிக்கும் தன்னுடைய மகளைப் பார்ப்பதற்காக வெங்கடரமணப்பா அடிக்கடி செல்வது வழக்கம். சில நாள்களுக்கு முன்னர் மகள் வீட்டுக்குச் சென்ற அவர், அங்கு தங்கியிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

சௌடேஸ்வரி கோயில் பூசாரியான அவருடைய மருமகன், வெளியூருக்குச் சென்றுவிட்டார். இதனால், அந்தக் கோயிலில் தினசரி பூஜைகளை வெங்கடரமணப்பா செய்திருக்கிறார். இந்தநிலையில், கடந்த 24-ம் தேதி மாலை 4:30 மணியளவில், 10 வயது சிறுமி அந்தப் பகுதியில் விளையாடுவதைப் பார்த்த வெங்கடரமணப்பா, அந்தச் சிறுமியிடம் இனிப்புகளைக் கொடுத்து தன் மகள் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ``சிறுமியின் குடும்பம் அவருடைய மகளின் வீட்டுக்கு அருகிலேயே வசித்துவந்தது. சிறுமியின் தந்தை பழைய பொருள்களை வாங்கும் கடை நடத்திவருகிறார். வெங்கடரமணப்பா இனிப்பு கொடுக்கும் சாக்கில் சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சிறுமி நீண்டநேரமாக வீடு திரும்பாததால், குடும்பத்தினர் கவலையடைந்து, அவளைத் தேடத் தொடங்கினர். கோயிலுக்கு வெளியே பூக்களை விற்கும் ஒரு பெண், அந்தச் சிறுமி பூசாரியின் வீட்டுக்குள் செல்வதைப் பார்த்ததாகக் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.

சிறுமியின் குடும்பத்தினர் வீட்டுக்குச் சென்றபோது, ​​சிறுமி அழுதுகொண்டே வெளியே வருவதைப் பார்த்திருக்கிறார்கள். அதன் பிறகு, சிறுமி நடந்த சம்பவத்தைக் குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, எங்களுக்கு அந்தப் பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியிருக்கிறோம். சிறுமி, அவருடைய பெற்றோருடன் மருத்துவப் பரிசோதனைக்காக உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்’’ என்றும் கமிஷனர் சி.கே.பாபு தெரிவித்தார்.

சிசிடிவி காட்சிகள், பூ விற்பவரின் சாட்சியத்தின் அடிப்படையில், போலீஸார் வெங்கடரமணப்பாவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து பூசாரி வெங்கடரமணப்பா மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீஸார் கைதுசெய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு