Published:Updated:

பெங்களூர்: ஃபேஸ்புக் பதிவால் ஏற்பட்ட கலவரம்... அமைச்சர் எச்சரிக்கை - மனதை உருகவைக்கும் சம்பவங்கள்!

பெங்களூர் கலவரம்
பெங்களூர் கலவரம்

கடந்த 11-ம் தேதி இரவு பெங்களூர், புலிகேசி நகரில் வசிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவால் ஏற்பட்ட கலவரத்தின் மூலம் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு, 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் ஒட்டுமொத்த கர்நாடகாவையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூர் அருகேயுள்ள புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அகண்ட சீனிவாச மூர்த்தி. இவருடைய உறவினரின் மகனான நவீன் என்பவர் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றித் தவறாகச் சித்திரித்து சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்று பதிவிட்டு இருந்ததாகவும், அந்த ஃபேஸ்புக் பதிவுதான் கலவரத்துக்குக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

கலவரம்
கலவரம்

நவீன் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய பதிவு குறித்து அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகாரளிக்கச் சென்றுள்ளனர். ஆனால், அந்தப் புகாரை காவல் அதிகாரிகள் ஏற்க மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த மக்கள், கடந்த 11-ம் தேதி இரவு பெங்களூரு, புலிகேசி நகரில் வசிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென எம்.எல்.ஏ வீட்டின்மீதும், நவீன் வீட்டின்மீதும் பாட்டில்கள், கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எம்.எல்.ஏ வீட்டின் முன்பு இருந்த வாகனங்களையும் வீட்டையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். அந்த நேரத்தில், எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியும் நவீனும் அருகிலிருந்த காவல் நிலையத்துக்குள் சென்றுவிட்டதாகச் செய்தி பரவ, காவல்நிலையம் நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தின் மீதும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

காவல் நிலையத்தின்மீது பாட்டில்கள், கற்கள், டயர்கள், கட்டைகள், செங்கற்கள் ஆகியவற்றை வீசிச் சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த வாகனங்களையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இந்தச் செயலால் காவலர்கள் பலரும் காயமடைந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதோடு, தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றுள்ளனர். அப்போதும் கலவரம் கட்டுப்பாட்டில் வராமல் போனதால், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பெங்களூர் காவல் ஆய்வாளர் கமல் பண்ட் தெரிவித்துள்ளார். மேலும், `இந்தப் பிரச்னையில் அப்பகுதியில் இருந்த சுமார் 200 முதல் 250 வாகனங்கள் வரை தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் காவல்துறை வாகனங்களும் அடங்கும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையில் 75-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் 35-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

கலவரம்
கலவரம்

இந்த வன்முறைக்குக் காரணமாகக் கூறப்பட்ட நவீனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், வன்முறையில் ஈடுபட்டதாக 110 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி மற்றும் காவல் பைசந்திரா ஆகிய இடங்களில் வரும் சனிக்கிழமை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"கலவரத்தின்போது தீயிடப்பட்ட தகவல் கிடைத்ததையடுத்து நாங்கள் அங்கு சென்றோம். கே.ஜி.ஹள்ளி காவல்நிலையத்துக்கு அரை கிலோமீட்டருக்கு முன்பாக கும்பல் ஒன்று எங்களை வழிமறித்து, கற்களை வீசி அங்கு செல்லவிடாமல் தடுத்தார்கள்” என்று தீயணைப்புத்துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், "என்னுடைய ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை யாரோ ஹேக் செய்து தவறான தகவல்களைப் பதிவு செய்திருக்கின்றனர்” என்று நவீன் கூறியிருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவீனிடம் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கலவரம் குறித்துப் பேசியுள்ள எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தி, “சர்ச்சைக்குரிய முகநூல் பதிவில் எனக்கு உடன்பாடில்லை. மத நல்லிணக்கமே எனது கொள்கை” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ (சமூக ஜனநாயக கட்சி) அமைப்பின் முக்கியப் பிரமுகர் முஷாமில் பாஷா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதோடு, இந்தக் கலவரத்துக்குப் பின்னால் எஸ்.டி.பி.ஐ அமைப்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

சி.டி.ரவி
சி.டி.ரவி

இந்தச் சூழலில், உத்தரப்பிரதேசத்தில் செய்யப்பட்டதுபோல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடமிருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்யப்போவதாகக் கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், "பெங்களூருவில் நடந்த கலவரம் திட்டமிட்டே நடந்துள்ளது. பெட்ரோல் குண்டு, கற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். 300 வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. விசாரணை முழுமையாக நடந்த பிறகே உண்மை தெரியவரும். உத்தரப்பிரதேசத்தைப்போலவே கலவரம் செய்தவர்களிடமிருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மீரட்டைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர் ஷாஜீப் ரிஸ்வி என்பவர், புலிகேசி நகர் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் மகனான நவீனின் தலையைக் கொண்டு வரும் நபருக்கு 51 லட்சம் தருவதாகக் கூறியிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், நெகிழ்ச்சியான பல சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

`ஃபேஸ்புக் பதிவு; எம்.எல்.ஏ சர்ச்சை!’ - பெங்களூரை அதிரவைத்த திடீர் வன்முறை; 3 பேர் பலி

கலவரத்தின்போது அந்தப் பகுதியிலிருந்த இந்து கோயில்களுக்குப் போலீஸ் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில், ஷாம்புரா சாலையிலுள்ள அனுமன் கோயிலைச் சுற்றி, நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் நள்ளிரவு நேரத்தில் மனிதச் சங்கிலி முறையில் கைகோத்து அரணாக நின்றனர். உரிய நேரத்தில் கோயிலுக்கு பாதுகாப்பு அளித்ததால், அங்கு நடைபெறவிருந்த வன்முறை தடுக்கப்பட்டது.

இது குறித்து பாதுகாப்பில் ஈடுபட்ட முகமது காலித் கூறுகையில், "நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். அலுவலகத்திலிருந்து இரவில் வீடு திரும்பியபோது 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அனுமன் கோயில் அருகே நின்றிருந்தனர். ஆட்டோவில் வந்த சிலர் கல் மூட்டையைக் கொண்டுவந்தனர். அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் உடனே என் நண்பர்கள், உறவினர்களை அழைத்து விவரத்தைத் தெரியப்படுத்தினேன். பின்னர் அனைவரும் மனிதச் சங்கிலி அமைத்து, 11 மணியிலிருந்து நள்ளிரவு 2 மணி வரை அனுமன் கோயிலுக்குப் பாதுகாப்பாக நின்றோம். எங்களைப் பார்த்ததும், அந்த இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்’’ என்றார். கலவர நேரத்தில், இஸ்லாமிய இளைஞர்கள் இந்து கோயிலுக்கு காவல் அரணாக நின்ற புகைப்படங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

நவீனின் அம்மா
நவீனின் அம்மா

இது ஒருபுறமிருக்க, கலவரக்காரர்கள், நவீனின் வீட்டை முற்றுகையிட முயன்றபோது அவரின் தாய், சகோதரி, சகோதரியின் குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்கள். அப்போது அவரின் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்த இஸ்லாமிய இளைஞர்கள்தான் அவர்களுக்கு அரணாக நின்று அவரைக் காப்பாற்றியுள்ளனர். `அவர்கள் வரவில்லையெனில், நாங்கள் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டோம்’ என நவீனின் அம்மா கண்ணீர் மல்க, தனது நன்றியை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு