Published:Updated:

சென்னை: `நம்பிச் சொன்னேன்; முழுசா ஏமாத்திட்டாங்க..!' - கதறிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்

ஓய்வு பெற்ற அரசு ஊழியரை ஏமாற்றிய மர்மநபர்
ஓய்வு பெற்ற அரசு ஊழியரை ஏமாற்றிய மர்மநபர் ( representational imagebrdசதாசிவம் )

சென்னையில் ஒரே நாளில் மூன்று பேரின் வங்கிக் கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் பணத்தை மர்மநபர்கள் எடுத்திருக்கிறார்கள். அவர்களில் ஓய்வு பெற்ற ஓர் அரசு ஊழியரை நம்பவைத்து ஏமாற்றியிருக்கிறார்கள்.

சென்னை கோட்டூர்புரம், எல்லையம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம் (65). இவர் டிஎன்பிஎஸ்சி-யில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு இந்தியன் வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கிறது. இவரின் செல்போனுக்கு 16.8.2020 அன்று ஒரு போன் கால் வந்திருக்கிறது. அதில் பேசியவர், தன்னை வங்கி மேனேஜர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார். அதை சதாசிவமும் முழுமையாக நம்பியிருக்கிறார். பின்னர் அந்த நபர், வழக்கம்போல, `உங்களின் ஏடிஎம் கார்டு காலாவதியாகிவிட்டது. அதனால் அதைப் புதுப்பிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணுகிறேன்.

மோசடி
மோசடி
Representational Image

உங்கள் ஏடிஎம் கார்டிலுள்ள நம்பர்களைச் சொல்லுங்கள்’ என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்ட சதாசிவமும் ஏடிஎம் கார்டின் முன்பக்கம், பின்பக்கத்திலுள்ள நம்பர்களைக் கூறியிருக்கிறார். அதன் பிறகு ஆதார் கார்டு நம்பர்களை அந்த நபர் கேட்டதும் அதையும் சதாசிவம் தெரிவித்திருக்கிறார். `அடுத்து உங்களின் செல்போனுக்கு வரும் எஸ்எம்எஸ்களில் உள்ள நம்பர்களைச் சொல்லுங்கள்’ என்று அந்த மர்ம நபர் கூறியிருக்கிறார். அதையும் சதாசிவம் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு அவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ்கள் தொடர்ச்சியாக செல்போனுக்கு வந்துள்ளன. அதைப் பார்த்து சதாசிவம் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இது குறித்து வீட்டிலுள்ளவர்களிடம் சதாசிவம் கூறியபோது, `உங்களிடம் பேசியது வங்கி மேலாளர் அல்ல, வங்கி மோசடிக் கும்பலைச் சேர்ந்த ஆள்’ என அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் சதாசிவம், தான் ஏமாந்ததை உணர்ந்தார். பின்னர் அவர் தன்னுடைய செல்போனுக்கு வந்த எஸ்எம்எஸ்-களோடு கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்குச் சென்று விவரத்தைக் கூறி, புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 1,03,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பட்டுள்ளார். புகாரின்பேரில் கோட்டூர்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து வங்கி மோசடி கும்பலைத் தேடிவருகின்றனர்.

மோசடி
மோசடி
representational image

சதாசிவத்தின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்த மோசடிக் கும்பல், மீண்டும் அவரை 17-ம் தேதி காலையில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறது. அப்போது, `உங்கள் ஏடிஎம் கார்டு எக்ஸ்பயரியாகிவிட்டது, அதை ரெனுவல் செய்யணும், உங்கள் ஏடிஎம் கார்டு நம்பர்ஸைச் சொல்லுங்க’ என்று கூறியுள்ளனர். அதைக் கேட்ட சதாசிவம், `ஏன்டா இப்படி ஏமாத்துறீங்க...’ என்று செல்போனிலேயே திட்டிவிட்டு இணைப்பை துண்டித்திருக்கிறார். மோசடி கும்பல் நினைத்தாலும் இனிமேல் அவரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. ஏனென்றால், அவரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பது புததாக போன் செய்த மோசடிக் கும்பலுக்குத் தெரியவில்லை என்பதுதான் ஏதார்த்தம்.

இது குறித்து சதாசிவம் கூறுகையில், ``எனக்கு வயதாகிவிட்டதால், பேங்க்கிலிருந்து மேனேஜர் பேசுவதாகக் கூறியதும், ஏடிஎம் கார்டின் முழு விவரங்களையும் நம்பிச் சொல்லிவிட்டேன். ஆனால், என்னை முழுசா ஏமாத்திட்டாங்க" என்று கண்ணீர்மல்கக் கூறினார்.

ஓரே நாளில்...

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சதாசிவத்தை ஏமாற்றிய வங்கி மோசடிக் கும்பல், சென்னை அயனாவரம் பங்காரு தெருவில் குடியிருக்கும் சுகன்யா (25) என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டிருக்கிறது. அப்போது சுகன்யாவிடமும் அதே டயலாக்கைக் கூறி, ஏடிஎம் கார்டு விவரங்களைக் கேட்டிருக்கிறது. வங்கியிலிருந்துதான் பேசுகிறார்கள் என்று நம்பிய சுகன்யாவும் ஏடிஎம் கார்டு விவரங்களைக் கூறியிருக்கிறார். இந்த போன் கால் அழைப்புக்குப் பிறகு சுகன்யா, ஏடிஎம் சென்டருக்கு பணம் எடுக்கச் சென்றிருக்கிறார்.

ஏடிஎம்
ஏடிஎம்

அப்போது சுகன்யாவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது. `அக்கவுன்ட்டில் 70,000 ரூபாய் இருந்ததே...’ என்று யோசித்த சுகன்யா, வங்கிக்குச் சென்று விவரத்தைக் கேட்டார். அப்போதுதான் அவரின் வங்கி கணக்கிலிருந்த பணம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனால் சுகன்யாவும் அயனாவரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதைப்போல சென்னை தரமணியைச் சேர்ந்த டாக்டர் லீலா ராமகிருஷ்ணனின் வங்கிக் கணக்கிலிருந்து 35,000 ரூபாயை வங்கி மோசடிக் கும்பல் நூதனமுறையில் எடுத்திருக்கிறது. இது குறித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``வங்கி மோசடிக் கும்பல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தொடர்ந்து மக்கள் ஏமாந்துவருகின்றனர். வடமாநிலங்களைச் சேர்ந்த ஒரு நெட்வொர்க்தான் இந்த மோசடியில் ஈடுபட்டுவருகிறது. சமீபத்தில்கூட வேலூரில் இந்த மோசடிக் கும்பலின் ஆளில்லாத அலுவலகம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மோசடிக் கும்பல்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துகொண்டுதான் வருகிறது. எனவே, வங்கி தொடர்பான போன் அழைப்புகளை மக்கள் நம்ப வேண்டாம்" என்றனர்.

ஒரே நாளில் சென்னையில் மூன்று பேரிடம் வங்கி மோசடிக் கும்பல் பணத்தை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு