Published:Updated:

`காவல் நிலையத்திலேயே கைவரிசை; ஒரே மாடலால் குழப்பம்'- போதையால் வங்கி மேலாளர் சிக்கிய `காமெடி' கதை!

ஒரே மாடல் பைக் என்பதால் போதையில் காவலரின் டூவீலரை எடுத்துச் சென்ற கிளை மேலாளர் அருண்ராஜை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிசிடிவியில் சிக்கிய மேலாளர்
சிசிடிவியில் சிக்கிய மேலாளர்

சென்னை ஆயுதப்படை காவலர் அருண்குமார். இவர், கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், கடந்த 25ம் தேதி வெளியூர் செல்ல கிண்டி காவல் நிலையத்தில் என்னுடைய பைக்கை நிறுத்தினேன். ஆனால், அந்த பைக் காணவில்லை. எனவே, அதைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

பைக்
பைக்

அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். காவல் நிலையம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அருண்குமாரின் பைக்கை டிப்டாப் உடையணிந்த ஒருவர் எடுத்துச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் பெருங்களத்தூரைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் அருண்ராஜ் என்று தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து காவலர் அருண்குமாரின் பைக்கை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது கிண்டி போக்குவரத்து காவல்துறையினர் தனது பைக்கை பறிமுதல் செய்துவிட்டனர். அதன்பிறகு என்னுடைய பைக்கை எடுக்க வந்தபோதுதான் தவறுதலாக காவலர் அருண்குமாரின் பைக்கை எடுத்துச்சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அருண்ராஜை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அருண்ராஜ்
அருண்ராஜ்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அருண்ராஜ், அருண்குமார் ஆகிய இருவரின் பைக்குகளும் ஒரே மாடல். இதனால்தான் போதையில் அருண்ராஜ், தன்னுடைய பைக் எனக் கருதி காவலர் அருண்குமாரின் பைக்கை எடுத்துச் சென்றுவிட்டார். வீட்டுக்குச் சென்றபிறகு அவர் காவலர் அருண்குமாரின் பைக்கை காவல் நிலையத்தில் ஒப்படைக்கவில்லை. இதனால்தான் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றனர்.

ஒரே மாடல் பைக் என்றாலும் எப்படி சாவி வித்தியாசமாக இருக்குமே என்று கேட்டதற்கு, காவலர் அருண்குமாரின் பைக்கில் அந்த மாடலுக்குரிய சாவியைப் போட்டாலே திறந்துவிடுமாம். இதுதான் மேலாளர் அருண்ராஜ் வழக்கில் சிக்கியதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் போலீஸார்.