Published:Updated:

`வங்கி அதிகாரியின் திருமண விளையாட்டு!' -தாலி கட்டுவதற்கு 5 நிமிடங்களுக்குமுன் சிக்கிய மணமகன்

ஆந்திராவில் தாலி கட்டுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் வங்கி உதவி மேலாளரான மணமகன் மோகன கிருஷ்ணாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மணமகன் மோகனகிருஷ்ணா
மணமகன் மோகனகிருஷ்ணா

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார் மோகன கிருஷ்ணா. இவருக்கும் கர்னூல் மாவட்டம் நந்தியாலாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கோயிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் மணமகள், மணமகன் வீட்டினர் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.

திருமணம் நடைபெறவிருந்த கோயில்
திருமணம் நடைபெறவிருந்த கோயில்

மணமகன் மோகன் கிருஷ்ணா, புதுமாப்பிள்ளை கெட்அப்பில் மணமேடையில் காத்திருந்தார். மணமகளும் அங்கு வந்ததும் மந்திரங்கள் சொல்லப்பட்டன. தாலி கட்ட 5 நிமிடங்களுக்கு முன் அங்கு போலீஸார் நுழைந்தனர். சினிமாவில் வருவதைப் போல, `திருமணத்தை நிறுத்துங்கள்' என்று கூறியபடி வந்த போலீஸார் நேராக மணமகன் மோகனகிருஷ்ணாவிடம் சென்றனர். அவரிடம், `உங்கள் மீது புகார் வந்துள்ளது' என்று போலீஸார் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக மணமகள் வீட்டினர் பதற்றமடைந்தனர்.

இதையடுத்து, `ஏன் தகராறு செய்கிறீர்கள், எந்த நடவடிக்கை எடுத்தாலும் தாலி கட்டியபிறகு எடுங்கள்?' என உறவினர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர். இதை ஏற்காத போலீஸார், `மணமகனுக்கு ஏற்கெனவே திருமணம் நிச்சயக்கப்பட்டுவிட்டது. அதை மறைத்து இன்னொரு பெண்ணை அவர் திருமணம் செய்யப்போவதாக எங்களுக்கு ஆதாரத்துடன் தகவல் வந்துள்ளது' என்று கூறினர். இந்தத் தகவல் மணமகள் வீட்டினரை இன்னும் அதிர்ச்சியடையவைத்தது.

காவல் நிலையம்
காவல் நிலையம்

இதையடுத்து மணமேடையிலிருந்த மோகனகிருஷ்ணாவை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. மணமகளும் அவரின் வீட்டினரும் சோகத்தோடு வீடு திரும்பினர். மணமகன் மோகனகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்திய போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மணமகன் மோகனகிருஷ்ணா, ஆந்திராவைச் சேர்ந்த இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். அந்தப் பெண்ணின் வீட்டினரிடம் வரதட்சணையாக ரூ.12 லட்சம், 8 சவரன் தங்க நகைகளை வாங்கியுள்ளார். பிறகு அந்தப் பெண்ணுடன் மோகன கிருஷ்ணாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறிவிட்டு இன்னொரு பெண்ணுக்கு அவர் தாலிகட்ட தயாராகியுள்ளார். இந்தத் தகவல் கிடைத்ததும் மாப்பிள்ளையைக் கைது செய்துள்ளோம்" என்றனர்.

`ஐசியுவில் திருமணம்... மூன்றாவது நாளே எஸ்கேப்!' - போலீஸுக்குத் தண்ணிகாட்டும் புனே இளைஞர்

வங்கி அதிகாரி மோகனகிருஷ்ணாவின் முழு விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். மோகன கிருஷ்ணாவின் குடும்பத்தினர் போலீஸாரிடம் எவ்வளவோ கெஞ்சியும் போலீஸார் மனமிரங்கவில்லை. அதேநேரத்தில், `நல்லவேளை தப்பித்தோம்' என்று மணமகள் வீட்டினர் மண்டபத்திலிருந்து வெளியேறினர்.