Published:Updated:

`போலி ஏ.டி.எம் கார்டு; சிக்கிய வங்கி மேலாளர்'- இறந்த பெண்ணின் கணக்கில் சுருட்டப்பட்ட ரூ.25 லட்சம்

வங்கிக் கணக்கில் பணம் ஏதும் செலுத்தாமல், ஏடிஎம் மூலம் மட்டும் பணம் எடுத்ததுதான் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து விசாரித்ததில், பிஎஸ்என்எல் அதிகாரி எமிலி சோலா இறந்தது தெரியவந்தது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜமால் முகமது கல்லூரி கிளை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜமால் முகமது கல்லூரி கிளை

திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றியவர், எமிலி சோலா. இவர், திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஜமால் முகமது கல்லூரி கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தார். அந்தக் கணக்கில், சுமார் 30 லட்ச ரூபாய்க்குமேல் டெபாசிட் செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு, எமிலி சோலா உடல்நலக் குறைவால் இறந்துபோனார்.

பணம்
பணம்

இறந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து, ஏடிஎம் கார்டு மூலம் கடந்த ஆறு மாதங்களாகப் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், பி.எஸ்.என்.எல் அதிகாரி எமிலி சோலா கடந்த இரண்டு வருடங்களாக எவ்வித பணமும் செலுத்தவில்லை. வங்கிக்கு நேரடியாக வரவும் இல்லை. இந்நிலையில், ஏடிஎம் இயந்திரம் மூலம் மட்டும் பணம் எடுப்பது மட்டும் தெரியவந்தது.

இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்தனர். அதில், எமிலி சோலா கடந்த 2014-ல் மரணமடைந்தது தெரிந்தது. அதையடுத்து, பணம் எடுத்தவர்கள் குறித்த விசாரணை தொடங்கியது.

அப்போதுதான், அதே வங்கியில் மேலாளராகப் பணிபுரியும் திருச்சி, வயலூரை அடுத்த நாச்சிகுறிச்சி, நாகப்பா நகரைச் சேர்ந்த ஷேக் மொய்தீன் என்பவரும் வங்கியின் உதவி மேலாளரான சின்னதுரையும் சேர்ந்து, போலி ஆவணங்கள் மூலம் ஏடிஎம் கார்டு பெற்று, எமிலி சோலா வங்கியில் டெபாசிட் செய்து வைத்திருந்த 25 லட்சத்து 8 ஆயிரத்து 50 ரூபாயை எடுத்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.

ATM
ATM

அதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன் மற்றும் உதவி மேலாளர் சின்னதுரை ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, திருச்சி இந்தியன் வங்கிக் கிளையின் மண்டல முதுநிலை மேலாளர் பிரேம்குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து, இது தொடர்பாகப் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீஸார், கூட்டுச் சதி, மோசடி மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன் மற்றும் உதவி மேலாளர் சின்னதுரை ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

`சென்னையில் ஃபாத்திமா; திருச்சியில் ஜெப்ரா பர்வீன்!’- அதிர்ச்சி தரும் கல்லூரி மாணவிகள் தற்கொலை

இதுகுறித்து நம்மிடம் பேசிய வங்கி அதிகாரிகள், "வங்கிக் கணக்கில் பணம் ஏதும் செலுத்தாமல், ஏடிஎம் மூலம் மட்டும் பணம் எடுத்ததுதான் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து விசாரித்ததில், பி.எஸ்.என்.எல் அதிகாரி எமிலி சோலா இறந்தது தெரியவந்தது. அவர், வங்கியில் பணம் போட்டு வைத்திருந்தது, அவரது குடும்பத்தாருக்குத் தெரியவில்லை.

அதனால்தான், அவரின் மரணத்துக்குப் பிறகும்கூட வங்கியில் இருந்த டெபாசிட் தொகையைப் பெற யாரும் முன்வரவில்லை. இதைத் தெரிந்துகொண்ட வங்கி மேலாளர், எமிலி சோலாவின் கையெழுத்தைப் பார்த்து, போலியாக ஆவணங்களைத் தயாரித்து, ஏடிஎம் கார்டு வாங்கியிருக்கிறார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜமால் முகமது கல்லூரி கிளை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜமால் முகமது கல்லூரி கிளை

அதே வங்கியில் இவர்கள் அதிகாரிகளாகப் பணியாற்றுவதால், புதிய ஏ.டி.எம் கார்டை எளிதாகப் பெற்றுவிட்டனர். அதைப் பயன்படுத்தியே இவ்வளவு பெரிய தொகையை எடுத்துள்ளார்கள். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இறந்த பெண் வாடிக்கையாளரின் இருப்பில் இருந்த 25 லட்ச ரூபாயை வங்கி அதிகாரிகளே கையாடல் செய்த விவகாரம், திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.