Published:Updated:

`திடீரென கத்தினான்; வண்டியை நிறுத்துவதற்குள்..!'- மாஞ்சா நூலால் உயிரிழந்த குழந்தையின் தந்தை கதறல்

சென்னையில் மாஞ்சா நூல் மரணம் தொடர்கதையாகி வருகிறது. மரணக்கயிறாக மாறிவரும் மாஞ்சா நூலுக்கு அப்பாவுடன் பைக்கில் சந்தோஷமாகப் பயணித்த 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மாஞ்சா நூலில் சிக்கிய 3 வயது குழந்தை
மாஞ்சா நூலில் சிக்கிய 3 வயது குழந்தை

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி சுமித்ரா. இந்தத் தம்பதியின் ஒரே மகன் அபினவ் என்கிற அபினேஷ் சரவ் (3). கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கோபால் குடும்பத்தினருடன் சென்றார். பிறகு அவர்கள் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். பைக்கின் முன்னால் அபினேஷ் சரவ் அமர்ந்திருந்தான்.

கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் கோபால் பைக்கில் வந்தபோது அபினேஷ் சரவ், `அப்பா வலிக்கிறது' என்று கூறியபடி பெட்ரோல் டேங்க் மீது சரிந்தான். உடனே பைக்கை நிறுத்திய கோபால், அபினேஷ் சரவ்வைப் பார்த்தபோது அவரின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து ஆழமான வெட்டுக் காயம் இருந்தது. அதிலிருந்து ரத்தம் வெளியேறியது. இதனால் கோபாலும் சுமித்ராவும் கதறினர். உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அபினேஷ் சரவ்வை அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அபினேஷ் சரவ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

காற்றாடி
காற்றாடி

இதுகுறித்து ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தியதில் அபினேஷ் சரவ்வின் கழுத்தை அறுத்தது மாஞ்சா நூல் என்று தெரியவந்தது. அந்தப்பகுதியில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விட்டது யாரென்று போலீஸார் விசாரித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்அடிப்படையில் விசாரணை நடத்தி, கொருக்குப்பேட்டை, காமராஜ் நகரைச் சேர்ந்த நாகராஜ், 15 வயது சிறுவன் உட்பட 4 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களிடமிருந்து மாஞ்சா நூலையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மகனை இழந்த கோபாலும் அவரின் மனைவி சுமித்ராவும் போலீஸாரிடம், ``நாங்கள் குடும்பத்தோடு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மேம்பாலத்தில் திடீரென நூல் ஒன்று பறந்துவந்தது. பைக்கின் முன்னால் அமர்ந்திருந்த மகனின் கழுத்தில் நூல் சிக்கியதும் கழுத்திலிருந்து ரத்தம் கொட்டியது. வலியால் அபினேஷ் கத்தினான். பைக்கை நிறுத்துவதற்குள் மயங்கிவிட்டான்" என்று கண்ணீர்மல்க கூறியுள்ளனர். மேலும், ``எங்கள் மகன் மரணத்துக்கு காரணமான மாஞ்சா நூல் மூலம் காற்றாடி விட்டவரையும் அதை விற்றவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஞ்சா நூலுக்கு எங்கள் மகனின் மரணமே கடைசியாக இருக்கட்டும்" என்று தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.

குழந்தையின் வீடு
குழந்தையின் வீடு

மாஞ்சா நூலால் 3 வயது குழந்தை மரணம் அடைந்ததையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸார் அந்தப்பகுதிகளில் மாஞ்சா நூல் விற்பனை குறித்து சோதனை நடத்தினர். தடையை மீறி மாஞ்சா நூலை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர். இந்தச் சோதனையில் சிலர் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் மாஞ்சா நூலில் சிக்கி உயிரிழப்பு சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகின்றன. இதனால் மாஞ்சா நூல் விற்க தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி விற்பவர்கள், மாஞ்சா நூல்கள் மூலம் காற்றாடி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தடைகள், நடவடிக்கைகள் இருந்தும் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க முடியவில்லை. சென்னையில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மாஞ்சா நூலால் மரணம் அடைந்தவர்களின் விவரம் இதோ!

3 வயது குழந்தை
3 வயது குழந்தை

2006-ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் கோதண்டராமன் என்பவர் மாஞ்சா நூலில் சிக்கி உயிரிழந்தார். 2007-ம் ஆண்டு 2 வயது சிறுவன் மாஞ்சா நூலால் மரணம் அடைந்தார். 2011-ல் சென்னை எழும்பூரில் ஷெரீனா பானு என்ற 4 வயது சிறுமி, மாஞ்சா நூலில் சிக்கி உயிரிழந்தார். 2012-ம் ஆண்டு மதுரவாயலில் ராஜ்குமார் என்பவர் உயிரிழந்தார். அதே ஆண்டில் கோபாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். 2013-ல் சென்னை சென்ட்ரலில் ஜெயகாந்த் என்பவர் இறந்தார்.

2015-ல் பெரம்பூர் பாலத்தில் எல்கேஜி மாணவன் அஜய் இறந்தார். 2017-ல் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் இன்ஜினீயர் சிவப்பிரகாசம் இறந்தார். 2019-ல் தாம்பரத்தில் இரண்டு சிறுவர்கள் மாஞ்சா நூலில் சிக்கினர். ஆனால், அறுவை சிகிச்சை மூலம் அவர்கள் உயிர்பிழைத்தனர். தற்போது, அபினேஷ் சரவ், கொருக்குப்பேட்டையில் உயிரிழந்துள்ளார்.

அபினேஷின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரின் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் சடலத்தைப் பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி துடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட காற்றாடிகள்
பறிமுதல் செய்யப்பட்ட காற்றாடிகள்

மரணக்கயிறாகும் மாஞ்சா நூலை விற்பவர்கள் மீதும் அதைப் பயன்படுத்தி காற்றாடி விடுவோர்கள் மீதும் சென்னை மாநகர காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர். சென்னையில் பெற்றோர் கண்முன் அபினேஷ் சரவ் என்ற 3 வயது குழந்தை மாஞ்சா நூலால் கழுத்தறுக்கப்பட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.