Published:Updated:

`டாட்டூ; சந்தேகக் கணவர்!' - மனம்மாறி வீடு திரும்பிய சென்னைப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை புழலில் 6 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்த மனைவி சஜினியை சமரசப்படுத்திய கணவர், 15 நாள்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

மனைவி சஜினி
மனைவி சஜினி

சென்னை புழல் காவல் நிலையத்துக்கு இன்று வந்த இளைஞர் ஒருவர், ``எனக்கும் என் மனைவிக்கும் நேற்றிரவு முழுவதும் சண்டை. அந்தச் சண்டை அதிகாலை வரை நீடித்தது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் கேட்கல. அதனால்தான் ஆத்திரத்தில் அவளைக் கொலை செய்துவிட்டேன்" என்று பதற்றத்துடன் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் இளம்பெண் ஒருவர் இறந்துகிடந்தார். அவரின் சடலத்தை மீட்ட புழல் போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்தக்கறை படிந்த கத்தியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சஜினியின் குடும்ப போட்டோ
சஜினியின் குடும்ப போட்டோ

இதையடுத்து, சரண் அடைந்த நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரின் பெயர் வெற்றிவீரன் (48) என்றும் அவரின் மனைவி பெயர் சஜினி (39) என்றும் தெரியவந்தது. புழல் திருவள்ளூர் தெருவில் வெற்றிவீரன் குடும்பத்தோடு குடியிருந்துவருகிறார். வெற்றிவீரனின் ரத்தக்கறை படிந்த ஆடைகளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், ``வெற்றிவீரனுக்கும் சஜினிக்கும் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருநின்றவூர் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்துவருகிறார். 2 வது மகள் பள்ளியில் படித்து வருகிறார். வெற்றிவீரன், அம்பத்தூர் பாடியில் உள்ள பிரின்ட்டிங் அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார். சஜினி, அழகுக் கலை நிபுணராக இருந்தார். இவர்களின் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகச் சென்ற நிலையில் சஜினியின் மீது வெற்றிவீரனுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

என்னை விட்டுப் பிரிந்து சென்ற பிறகு, அவரின் உடலில் டாட்டூ போட்டுள்ளார். அதுகுறித்து சஜினியிடம் விசாரித்தபோதுதான் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது
வெற்றிவீரன்
சஜினி கொலை செய்யப்பட்ட வீடு
சஜினி கொலை செய்யப்பட்ட வீடு

இந்தச் சந்தேக நோயால் அடிக்கடி கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தினமும் சண்டை, குடும்பத்திலும் வாழ்க்கையிலும் நிம்மதி இல்லை எனக் கருதிய சஜினி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தைப் பிரிந்து தாய் வீடான கோயம்புத்தூருக்குச் சென்றுவிட்டார். பின்னர், மகள்களுடன் வெற்றிவீரன் குடியிருந்து வந்துள்ளார். கடந்த 15 நாள்களுக்கு முன் வெற்றிவீரன், கோயம்புத்தூருக்குச் சென்று மனைவி சஜினியைச் சந்தித்தார். அப்போது மனைவியை சமாதானப்படுத்தியுள்ளார் வெற்றிவீரன்.

குழந்தைகளுக்காக மனம்மாறிய சஜினி, வெற்றிவீரனுடன் புழலுக்கு வந்துள்ளார். 14 நாள்கள் வெற்றிவீரன் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருந்துள்ளனர். இதற்கிடையில் மகள்கள் இருவரும் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். அதனால் வெற்றிவீரனும் சஜினியும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்றிரவு இருவருக்கும் மீண்டும் சண்டை வந்துள்ளது. விடிய விடிய சண்டை நடந்துள்ளது. ஆத்திரமடைந்த வெற்றிவீரன், சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து சஜினியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்துள்ளார்.

`தவறான நட்பு; 31 இடங்களில் கத்திக்குத்து!' - தடம் மாறிய கேரளப் பெண் கொடூரக் கொலை
கொலை நடந்த வீட்டில் போலீஸ்
கொலை நடந்த வீட்டில் போலீஸ்

பின்னர் வீட்டைவிட்டு அவர் வெளியேறி காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். ரத்தம் அதிகம் வெளியேறியதால் சஜினி இறந்துவிட்டார்" என்றனர்.

விசாரணையின்போது வெற்றிவீரன் முக்கியத் தகவல் ஒன்றையும் போலீஸாரிடம் கூறியுள்ளார். அதில் ``சஜினி, பார்ப்பதற்கு அழகாக இருப்பார். கேரளாவைச் சேர்ந்த அவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். என்னை விட்டு பிரிந்து சென்ற பிறகு அவரின் உடலில் டாட்டூ போட்டுள்ளார். அதுகுறித்து சஜினியிடம் விசாரித்தபோதுதான் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

சஜினியின் சடலத்தைப் பார்த்து அவரின் மகள்களும் உறவினர்களும் கதறி அழுதனர். காவல் நிலையத்தில் வெற்றிவீரனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.