Published:Updated:

குட்டையில் சடலமாகக் கிடந்த பியூட்டி பார்லர் பெண்! - செல்போன் அழைப்பால் சிக்கிய நாமக்கல் தொழிலதிபர்

கொலை செய்யப்பட்ட வனிதா
கொலை செய்யப்பட்ட வனிதா

வனிதாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை நடத்திய போது, கடைசியாகப் பேசியது திருச்செங்கோட்டைச் சேர்ந்த ரிக் வண்டி உரிமையாளர் சுரே‌‌ஷ்குமார் என்பவர் மீது போலீசாருக்குச் சந்தேகம் வந்தது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். திருச்செங்கோட்டில் உள்ள ஒரு பூக்கடையில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வனிதா என்கிற ஷோபனா. இவர்களுக்கு தேவா, சச்சின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தேவா 6-ம் வகுப்பும், சச்சின் எல்.கே.ஜியும் படித்து வருகின்றனர். வனிதா திருச்செங்கோட்டில் தனது கணவரின் சகோதரி நடத்தி வரும் அழகு நிலையத்தை நிர்வகித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி வேலைக்குச் சென்ற வனிதா, மாலை வரை வீட்டிற்குத் திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். இதற்கிடையே கணவருக்கு போன் செய்த ஷோபனா, தனது மகன் தேவாவின் பிறந்தநாளுக்காக துணி வாங்கிக் கொண்டு வருவதாகவும் ஊருக்கு வரும் கடைசி பஸ்சை விட்டுவிட்டதால் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் காரில் வீட்டுக்கு வருவதாகவும் இரவு 9 மணி அளவில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், நள்ளிரவு வரையும் வனிதா வீட்டுக்கு வராததால், அதிர்ச்சியடைந்த செந்தில், போலீசில் புகார் கொடுத்தார்.

கொலை செய்யப்பட்ட வனிதா
கொலை செய்யப்பட்ட வனிதா

இதையடுத்து போலீசாருடன் ஷோபனாவின் உறவினர்களும் அவரைத் தேடினர். திருச்செங்கோட்டை அடுத்த புள்ளியம் பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு குட்டையில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் வனிதா பிணமாகக் கிடந்தார். மேலும், அவரது உடல் கிடந்த இடத்தின் அருகே மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில், வனிதா தனது மகனின் பிறந்த நாளுக்காக வாங்கிய துணிகள் மற்றும் சாக்லேட் பாக்கெட்டுகள் சிதறிக் கிடந்தன. அவரது கைப்பை விட்டம்பாளையம் பகுதியில் சாலையோரமாகக் கண்டெடுக்கப்பட்டது.

வனிதாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ``வனிதா தனது மகன் பிறந்தநாளுக்காக வாங்கிய வாங்கிய பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளது. இதனால், காரில் அழைத்து வந்த மர்மநபர் அங்கு வைத்து வனிதாவைக் கொலை செய்து அவரது உடலை அருகில் உள்ள குட்டையில் வீசிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். வனிதாவின் கைப்பை விட்டம்பாளையம் பகுதியில் சாலையோரமாகக் கண்டெடுக்கப்பட்டது.

வீட்டில் எப்போதும் வாட்ஸ்அப்பில் மூழ்கியே கிடந்துள்ளார் வனிதா. அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் யாராவது அவரை அழைத்துச் சென்று கொலை செய்தார்களா... என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். வனிதா அணிந்திருந்த நகைகள் அனைத்தும் அப்படியே இருப்பதால் நகைக்காக இந்தக் கொலை நடக்க வாய்ப்பு இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது. வனிதாவும் செந்திலும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதலித்து திருமணம் செய்துள்ளனர். அதனால் உறவினர்கள் கொலை செய்தார்களா, அல்லது கள்ளக்காதல் தகராறில் இந்தக் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

Murder
Murder

இதற்கிடையே வனிதாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை நடத்திய போது, கடைசியாகப் பேசியது திருச்செங்கோட்டைச் சேர்ந்த ரிக் வண்டி உரிமையாளர் சுரே‌‌ஷ்குமார் என்பவர் மீது போலீசாருக்குச் சந்தேகம் வந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் வனிதாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கைதான சுரே‌‌ஷ்குமார், வனிதா வேலை பார்த்து வந்த அழகு நிலையத்தின் மேல் மாடியில் ரிக் வண்டி ஆபீஸ் வைத்து நடத்தி வந்தார்.

அடிக்கடி சந்தித்ததால் அவருக்கும், வனிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனிதாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற சுரே‌‌ஷ்குமார், பள்ளிபாளையத்தில் வைத்து சுடிதார் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுரே‌‌ஷ்குமார் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு