Published:Updated:

`சிமென்ட் தொட்டி; ஜன்னல் கண்ணாடி!' - பெங்களூருவில் மனைவி கொலையில் சிக்கிய கணவன்

Representation Image
Representation Image

பெங்களூருவில் பெண் ஒருவர் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த வினுதா - நரேந்திர பாபு தம்பதிக்குத் திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்றன. இந்தத் தம்பதிக்கு 11 வயதில் மகன் உள்ளார். நரேந்திர பாபுவுக்கும் வினுதாவுக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். நரேந்திர பாபுவும் வினுதாவும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். நரேந்திர பாபு தன் குழந்தையுடன் வசித்து வருகிறார். வினுதா பெங்களூருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். டிசம்பர் 20-ம் தேதி வினுதாவின் மொபைல் போனுக்கு அவரின் அம்மா அழைத்துள்ளார். நீண்ட நேரமாக போன் ஒலித்தும் வினுதாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

செல்போன்
செல்போன்

வெள்ளிக்கிழமை இரவே போன் செய்துள்ளார். ஆனால், அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இரவு நேரம் என்பதால் தூங்கியிருக்கலாம் என இருந்துள்ளார். மறுநாள் காலையிலும் வினுதாவிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை. போன் செய்தாலும் எடுக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்து வினுதாவின் வீட்டுக்கு விரைந்துள்ளார். வாசலில் இருந்த இரும்பு கேட் உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. ஆனால், வீட்டின் கதவு திறந்திருந்தது. இதனால் சந்தேகமடைந்தவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் தெரிவித்தார். இதையடுத்து காவலர்கள் வினுதாவின் வீட்டுக்குள் நுழைந்தனர். இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு போலீஸார் உள்ளே சென்று பார்த்துள்ளனர். தலையில் அடிபட்ட நிலையில் வினுதா ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

`தினமும் நோட்டம்; காத்திருப்பு; சரியான தருணம்'- நெல்லையைப் பதறவைத்த பழிக்குப் பழி கொலை!

சிமென்ட் தொட்டிக்கு அருகில் வினுதாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வீட்டில் தனியாக இருந்த வினுதா ஒருவேளை தவறிவிழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என முதலில் போலீஸார் நினைத்தனர். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வினுதாவும் அவரின் கணவரும் பிரிந்து வாழ்ந்து வரும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. மேலும், தற்போது வினுதா வசித்து வரும் வீட்டை விற்கும் முயற்சியில் அவரின் கணவர் இறங்கியுள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட சண்டையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது, விவாகரத்து கேட்டு நீதிமன்றம் நாடியது உள்ளிட்டவை உறவினர்களிடம் நடத்திய விசாரணை மூலம் காவல்துறையினர் தெரிந்துகொண்டனர். இதையடுத்து இந்த வழக்கை வேறுகோணத்தில் விசாரிக்க ஆரம்பித்தனர்.

கொலை
கொலை

வினுதாவின் வீட்டில் மீண்டும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். கொலைக்கான எந்தத் தடயமும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. வினுதா வீட்டின் பாத்ரூமில் சோதனை செய்தபோது ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் திடமாக இல்லை. கண்ணாடிகள் பொருத்தப்படும்போது எப்படி இருக்குமோ அப்படி இல்லை. அதை யாரோ கழற்றியதுபோல் இருந்தது. இதை மோப்பம்பிடித்த காவல்துறை வெளி நபர்கள் இந்த ஜன்னலின் வழியே உள்ளே வந்து சென்றிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் விசாரணையைத் துரிதப்படுத்தினர். அவரின் கணவர் நரேந்திர பாபுவிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் தங்களது பாணியில் விசாரிக்க, உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார், மனைவியைக் கொலை செய்வதற்காக இரண்டு நபர்களை ஏற்பாடு செய்ததை ஒப்புக்கொண்டார்.

நரேந்திர பாபு
நரேந்திர பாபு

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``வீடு தொடர்பாக வினுதாவுக்கும் அவரின் கணவருக்கும் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. பாத்ரூம் ஜன்னல் கண்ணாடிகள் கழற்றப்பட்டதுபோல் இருந்தது. இந்த வழக்கில் எங்களுக்குச் சிலர் மீது சந்தேகம் இருந்தது. கால் ரெக்கார்டுகளை ஆய்வு செய்ததில் அது உறுதியானது. வினுதாவின் கணவரிடம் விசாரித்ததில் கொலை செய்ய ஆட்களை அனுப்பியதை ஒப்புக்கொண்டார். இதற்காக 2 பேரை ஏற்பாடு செய்து 5 லட்சம் ரூபாய் டீல் பேசியுள்ளார். நரேந்திர பாபு கைது செய்யப்பட்டதையடுத்து அவரது திட்டத்துக்கு உதவிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஜன்னல் வழியாக இருவரும் வீட்டுக்குள் சென்று வினுதாவுக்காகக் காத்திருந்தனர். வினுதா வீட்டுக்கு வந்ததும் சோபாவில் அமர்ந்து மொபைல்போன் பார்த்துக்கொண்டிருந்தபோது கட்டையால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளனர். இதன் பின்னர் விபத்துபோல் சித்திரிப்பதற்காக சிமென்ட் தொட்டி அருகே அவரது உடலைக் கிடத்திவிட்டு, இருவரும் ஜன்னல் வழியாகத் தப்பிச் சென்றுள்ளனர்.

ஜெகன்நாத், பிரசாத்,
ஜெகன்நாத், பிரசாத்,

இருவரும் அதே வீட்டின் மற்றொரு பகுதியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். வீட்டின் அமைப்பு குறித்து இவர்களுக்குத் தெரிந்திருந்ததால் யாருக்கும் சந்தேகம் வராதபடி ஜன்னல் வழியாகச் சென்று கொலையை அரங்கேற்றியுள்ளனர்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு