Published:Updated:

`எல்.இ.டி வெளிச்சம்; நெதர்லாந்து இறக்குமதி!' - குடியிருப்பில் கஞ்சா செடிகள் வளர்த்த பெங்களூரு மாணவர்

பெங்களூரு நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் கஞ்சா செடிகள் வளர்த்துவந்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை குற்றப் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

கஞ்சா செடிகள்
கஞ்சா செடிகள்

பெங்களூருவின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் கெங்கேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாகக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் தகவலை அடுத்து கெங்கேரி பகுதியில் அமைந்திருக்கும் எம்.பி.ஆர். ஷங்கரிலா அபார்மெண்ட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த இளைஞர்கள், தங்களது ஃபிளாட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பது தெரியவந்தது.

Representational Image
Representational Image

இந்த விவகாரம் தொடர்பாக 3 பேரைக் கைது செய்த போலீஸார், அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள், எல்.எஸ்.டி எனப்படும் போதைப் பொருள்கள், பணம், கம்யூட்டர் மற்றும் செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். கைது செய்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அமர்த்தியா ரிஷி, மங்கல் மற்றும் ஆதித்யா குமார் என்பது தெரியவந்தது.

மேலும், போலீஸார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமர்த்தியா ரிஷி, பெங்களூருவில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நண்பர்களான அவர்கள் மூவரும் தங்கியிருந்த ஃபிளாட்டிலேயே கஞ்சா செடிகள் வளர்த்து வந்துள்ளனர்.

`பலமுறை தப்பித்திருக்கிறார்!' - பழநியில் கஞ்சா வழக்கில் சிக்கிய கெளசல்யாவின் தாய்

கஞ்சா செடி விதைகளை டார்க் நெட் மூலம் நெதர்லாந்து நாட்டில் இருந்து ஆர்டர் செய்திருக்கின்றனர். பின்னர் அவற்றை பூந்தொட்டிகளில் வைத்து எல்.இ.டி. விளக்குகள் வெளிச்சத்தில் வளர்த்து வந்திருக்கிறார்கள். செடிகள் குறிப்பிட்ட உயரம் வந்தவுடன் அவற்றை வெட்டி, தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என விற்று சொகுசாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

செடிகள் வளர்ப்பதை அமர்த்தியா ரிஷி பார்த்துக்கொள்வார். அவற்றை விற்பதை மற்ற இருவரும் வாடிக்கையாக செய்து வந்திருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, எல்.எஸ்.டி எனப்படும் போதைப்பொருள் ஸ்டிரைப்புகள், 10,200 ரூபாய் பணம் மற்றும் கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த கம்யூட்டர், செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.

Representational Image
Representational Image

இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது'' என்றனர். கஞ்சா விற்பனை தொடர்பாக மாணவர்கள் உள்பட 3 பேரைக் கைது செய்திருப்பது பெங்களூருவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.